வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா?
வழக்கமான அரிசி உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான மற்றும் சுவையான கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும் ஒரு மேஜிக் பானம் தான் இந்த குதிரைவாலி மோர்க் கஞ்சி.
இது செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
குதிரைவாலி மோர்க் கஞ்சியின் மருத்துவ குணங்கள் என்ன:
இந்தக் கஞ்சியின் சிறப்பம்சமே அதன் அபரிமிதமான மருத்துவ குணங்கள்தான்:
· உடல் எடை குறைப்பு: இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
·சர்க்கரை கட்டுப்பாடு: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க இந்த கஞ்சி உதவுகிறது.
· குடல் ஆரோக்கியம் : மோருடன் சேர்த்து தயாரிப்பதால், இதில் உள்ள புரோபயாடிக் சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
· எலும்பு வலிமை: இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது, எலும்புகளின் வலிமைக்கு மிகவும் ஏற்றது.
எந்தவிதமான செயற்கை சுவையூட்டிகள் இல்லாமல் இயற்கையான முறையில் இது தயாரிக்கப்படுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
ஆரோக்கியமான வாழ்விற்கு சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது இன்றைய காலத்தில் அவசியமாகும்.
அந்த வகையில், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கும் இந்த குதிரைவாலி மோர்க் கஞ்சியை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த சுவையான குதிரைவாலி மோர்க் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி 1 கப்
தண்ணீர் 4 முதல் 5 கப்
புளிப்பில்லாத மோர் 2 கப்
உப்பு தேவையான அளவு
இஞ்சி 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
கடுகு மற்றும் சீரகம் தலா அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் 5 (விருப்பப்பட்டால்
செய்முறை:
முதலில், குதிரைவாலி அரிசியை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் கழுவி, தூசுகள் ஏதும் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
கஞ்சி வேகவைத்தல் முறை
பிரஷர் குக்கரில் கழுவிய குதிரைவாலி அரிசியை சேர்க்கவும். அதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
அரிசி நன்றாக குழைந்து வெந்து வர வேண்டும்; அப்போதுதான் கஞ்சி தயார் செய்ய ஏற்றதாகவும் மென்மையாக இருக்கும்.
குக்கரில் அழுத்தம் குறைந்ததும் மூடியைத் திறந்து, வெந்த கஞ்சியை ஒரு கரண்டியால் அல்லது மத்து வைத்து நன்கு மசித்து விடவும்.
பின்னர் அதனை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக ஆறவிட வேண்டும்.
கஞ்சி நன்றாக ஆறிய பிறகு, அதனுடன் 2 கப் மோரைச் சேர்க்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
கஞ்சி தடிமனாக இருந்தால், தேவைக்கேற்ப கூடுதல் தண்ணீர் சேர்த்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
தாளிக்க தேவையானவை :
ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வதக்கித் தாளிக்கவும்.
இறுதியாக, தாளித்த கலவையை கஞ்சியுடன் சேர்த்து நன்கு கிளறவும். அதன் மேல் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைத் தூவினால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
சுவைக்கான கூடுதல் டிப்ஸ்:
இந்தக் கஞ்சியுடன் துருவிய மாங்காய் அல்லது பொடியாக கட் செய்த மாங்காயோ அல்லது மோர் மிளகாய், வத்தல் வைத்து குடித்தால் சுவை அமிர்தமாக இருக்கும்!
இப்போது உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும் சத்தான குதிரைவாலி மோர் கஞ்சி தயார்!
இந்த கோடைக் காலத்தை ஆரோக்கியமாகக் கடக்க இந்த பாரம்பரிய உணவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
- யாழினி சோமு