எல்லோருக்கும் தேவை உற்சாகம் தரும் உடற்பயிற்சி!

உலகில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மனிதரிடமும் உண்டு. நீண்ட வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பது நல் ஆரோக்கியம் மட்டுமே.

உடலையும் மனதையும் ஒருசேர பராமரிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்க்கை தரத்தினை பெற முடியும். இதற்கு நமக்கு துணை புரிவது உடற்பயிற்சியும் தியான முறைகளும்.

சில காலம் முன்பு வரை குறிப்பிட்ட மக்கள் மட்டுமே இதனை மேற்கொண்ட நிலை மாறி, இன்று பெரும்பாலானோரிடம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

ஐயாயிரம் வருடங்களுக்கு முன் நம் நாட்டில் தோன்றிய உடற்பயிற்சி முறை தான் யோகாசனம் எனப்படுகிறது.

உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் எந்த ஒரு உடல் அசைவும் உடற்பயிற்சியாகும். இந்தியப் பாரம்பரியத்தில் பலவகை பயிற்சிகள் உள்ளன.

உடலை ஒரு குறிப்பிட்ட அளவு நேரம் ஒரு நிலையில் இருக்கச் செய்யும்போது வெளிப்படும் ஆற்றலானது தசை மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது.

தினமும் காலையில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு நாள் முழுமைக்கும் தேவையான சக்தி பெறப்படுகிறது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவுகிறது. வெவ்வேறு வகை உடற்பயிற்சிகள் நடைமுறையில் உள்ளன.

அவரவரின் வாழ்க்கை முறை மற்றும் உடல் நிலைக்கு ஏற்ப இவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

இவை ஏரோபிக் பயிற்சி, வலிமை பயிற்சி, நெகிழ்வுத் தன்மை பயிற்சி, சமநிலை பயிற்சி என பல வகைப்படுகிறது,

ஏரோபிக் பயிற்சி:

இது எளிய வகை உடற்பயிற்சியை சார்ந்த ஒன்றாகும். நடைபயிற்சி மேற்கொள்ளுதல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்றவை இதில் அடங்கும்.

இது ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதயத்தை பலப்படுத்துகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் செய்யக்கூடிய சிறந்த முறையாகவும் இது கருதப்படுகிறது.

வலிமை பயிற்சி:

உரிய உடற்பயிற்சி வல்லுனரின் வழிகாட்டுதலின் பேரில் மட்டுமே இவ்வகை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எடை தூக்குதல், புஷ் அப்ஸ் ஆகியவை இதில் அடங்கும். இவ்வகை பயிற்சியானது எலும்புகள் உறுதியுடன் திகழ உதவுகிறது.

நெகிழ்வுத் தன்மை பயிற்சி:

இவ்வகை முறைகள் யோகாசன பயிற்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளின் அசைவுகளை எளிதாக்கவும் தசைநார்களை வலிமைப்படுத்துவதற்கும் இப்பயிற்சிகள் உதவுகின்றன.

தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் ஆலோசனைகளை முறைப்படி கற்ற பின்னரே இதனை மேற்கொள்ள வேண்டும்.

சமநிலை பயிற்சி:

உடலின் மூன்று அமைப்புகளை ஒருங்கிணைத்து செய்யப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.

நிற்கும் போதோ அல்லது நகரும் போதோ உடம்பின் ஈர்ப்பு மையத்தை நிலையாக வைத்திருக்க இப்பயிற்சி உதவுகிறது.

தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் மூளைக்கும் பிற உறுப்புகளுக்கும் இடையேயான தொடர்பையும் மேம்படுத்துகிறது.

இதனையும் வல்லுனரிடம் பயிற்சி பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும்.

உள்ளம், உடல், உணர்வுகள் அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம்.

இன்றைய நவீன யுகத்தில் வேலைப்பளுவின் காரணமாக பல்வேறு உபாதைகளுடன் போராட வேண்டிய நிலை உள்ளது.

உடல் வலி, தூக்கமின்மை, ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய பிரச்சினைகள் பரவலாக காணப்படுகின்றன.

அன்றாடம் பல வகை செயல்பாடுகள் ஆறடி உடலில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இதனை சீரான உடற்பயிற்சியின் மூலம் சிதைந்து விடாமல் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

உடற்பயிற்சியில் ஈடுபடும்போது நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் செயல்பாட்டில் வருகிறது.

பிராண வாயுவின் நிலையை அதிகரித்து உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் உடற்பயிற்சியை நாள்தோறும் மேற்கொண்டு நலம் பெறுவோம்.

S. வாணி

Comments (0)
Add Comment