கண்களைப் பாதுகாக்க… 10 நிமிடங்கள் போதும்!

நமக்கு விருப்பமானவர்களை ‘கண்ணு…’ என்று கொஞ்சுவோம். அந்த அளவுக்கு நம் கண்களை நேசிக்கிறோம்.

அதேவேளை நம்மை அறியாமல் கண்களுக்கு அதிக வேலை கொடுத்து அதை அயர்ச்சியுற வைத்துக் கொண்டிருக்கிறோம்.

கம்ப்யூட்டர், டிவி, செல்போன் என்று ஒளிரும் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இதனால் கண்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன.

வாழ்க்கை முறையே அப்படி என்றாகிவிட்ட நிலையில், கண்களைக் காக்க சில பயிற்சிகள் மேற்கொள்வது நலம்.

இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்க்க வேண்டும். கைகள் சூடானதும் அவற்றை வைத்து கண்களை மூடுங்கள்.

30 முதல் 60 வினாடிகள் வரை கதகதப்பான சூட்டில் கண்களை வைத்திருங்கள். இதனால் கண்களுக்குப் புத்துணர்ச்சிக் கிடைக்கும்.

10 முதல் 15 முறை வளர் சிமிட்ட வேண்டும். கண் இமைகளை வேகமாக சிமிட்ட வேண்டும். அதன்பிறகு கண்களை சிறிது நேரம் மூடவேண்டும்.

இப்படிச் செய்வதால் கண்களில் உள்ள வறட்சி நீங்கும். ஈரப்பதம் அதிகமாகும்.

விழிகளை இடமிருந்து வலம் என்ற முறையில் 5 முறையும் வலமிருந்து இடம் என்ற முறையில் 5 முறையும் சுழற்ற வேண்டும். இதன்முலம் விழிகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

தலையைத் தூக்காமல் விழிகளை மட்டும் மேலே நகர்த்தி வீட்டின் கூரையைப் பாருங்கள். அதேபோல் தலையைக் குனியாமல் விழிகளை மட்டும் மெல்ல கீழே இறக்கி தரையைப் பாருங்கள்.

இப்படி 5 முறையாவது அடுத்தடுத்துப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் கண்களின் அழுத்தம் குறைவதுடன், ரத்த ஓட்டமும் அதிகமாகும்.

தலையை அசைக்காமல் இடமும் வலமும் விழிகளை மட்டும் நகர்த்த வேண்டும். இது விழிகளின் தசையை உறுதியாக்கும்.

அறையில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி அல்லது அகல்விளக்கு ஒன்றை ஏற்றி வையுங்கள். அது எரிவதை அமைதியாக சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டுடிருங்கள்.

ஒளிரும் திரைகளைப் பார்த்து களைத்துப்போன கண்களுக்கு இது போதுமான அமைதியைத் தரும்.

இத்தனை பயிற்சிகளையும் செய்து முடிக்க 10 நிமிடங்கள் போதும்.

நாளெல்லாம் ஓய்வில்லாமல் நமக்காக உழைக்கும் கண்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்கக் கூடாதா?

– பி.எம்.சுதிர்

நன்றி: தினமலர்

Comments (0)
Add Comment