“நாணயமாக நடந்து கொள்” என்று என் அன்னை கூற கேட்டிருக்கிறேன். “அதுதான் மனிதருக்கு மரியாதை” என்று கூறுவார்.
எங்கள் வீட்டு வறுமையைப் போக்க என் அன்னை மற்ற பெண்களுடன் இணைந்து மாதச் சீட்டுக் கட்டுவார். அந்த மாதச் சீட்டை நடத்தியவரும் ஒரு வயதான மூதாட்டி.
கடுமையான கண்டிப்புடன் நடத்துவார். எப்பொழுது தேவையோ அப்பொழுது அந்தச் சீட்டை எடுத்து குடும்ப சிலவுக்கோ அல்லது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான முதலீடு செய்யவோ பயன்படுத்துவார்கள் பெண்கள்.
அந்தக் குழுவில் எவரும் படித்தவர் இல்லை. அத்தனை செயல்பாடுகளும் வாய்மொழியில்தான். எந்தத் தவறும் அவர்களுடைய செயல்பாட்டில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
அப்போதெல்லாம் இன்றுபோல் சுய உதவிக்குழு செயல்படவில்லை. அவர்கள் அந்த சீட்டை எடுத்து அதில் வரும் பணத்தை வைத்து, எருமை மாடு வாங்கி பால் கரந்து விற்று, வீட்டு வருமானத்தைப் பெருக்கி, வறுமையை விரட்டினார்கள்.
இதேபோல்தான் அத்தனை பெண்களும் இந்தச் செயல்பாடுகளைச் செய்தனர்.
அந்த சீட்டை நடத்திய பெண்மணி, வசூல் செய்ய எல்லா வீடுகளுக்கும் வருவார். ஒரு நாள் நிர்ணயம் செய்து அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒரே நாளில் வசூல் செய்து விடுவார்.
சீட்டு ஏலம் விடும் நாள் ஒன்று உண்டு. அன்று அனைத்துப் பெண்களும் அவர் வீட்டுக்குச் சென்று அரை மணி நேரத்தில் யாருக்கு அந்த மாதப் பணம் என்பது உறுதி செய்யப்பட்டு அந்த நொடியில் அவர் சீட்டு எடுத்தவரிடம் பணம் கொடுத்து விடுவார்.
இவர்கள் கொடுக்கும் பணம், வாங்கும் பணம் எதற்கும் எந்த நோட்டிலும் பதிவோ, ரசீதோ எதுவும் இருக்காது.
இருந்தும் எந்தப் பிரச்சினையும் இன்றி பல ஆண்டு நடந்து வந்தது.
அவர் சீட்டு சேர்க்கும்போது, எளிதாக யாரையும் சேர்க்க மாட்டார்.
அதற்கு அவர் கூறும் ஒரே விளக்கம் நாடோ, வீடோ நாணயமானவர்களின் செயல் மூலம்தான் நல்ல செயல்கள் நடைபெறும்.
அதன் மூலம்தான் குடும்பத்திற்கும் வளர்ச்சி மேம்பாடு வரும். நாட்டிற்கும் மேம்பாடு வரும் என்பார்.
எனவே நாணயம் உள்ளவர்கள்தான் எங்கள் குழுவில் சேர முடியும் என்பது அனைவருக்கம் தெரியும் என்பார்.
அவர் படிக்காத ஒரு பாமர பெண்மணிதான். அவர் அடிக்கடி கூறுவது “வார்த்தைச் சுத்தம் வேணும்” என்பதுதான்.
அன்று எனக்கு அந்த வார்த்தையை விளங்கிக்கொள்ள கடினமாக இருந்தது. இன்று அந்த வறுமை வரலாற்றை புரட்டிப்பார்த்தபோது எங்கள் குடும்பம் மட்டும் வறுமையிலிருந்து விடுபடவில்லை, அந்த அம்மையாருடன் இணைந்த பெண்கள் அத்தனை பேருடைய குடும்பங்களும் வறுமையிலிருந்து விடுபட்டன.
இவர்கள் போற்றி பாதுகாத்தது நாணயம், கடின உழைப்பு, எளிமை, சிக்கனம். ஒருவரையொருவர் நம்பி நம்பிக்கையுடன் இணைந்து செயல்பட்டது.
அந்த படிக்காத பெண்கள் இந்த பண்புகளை, வாழ்க்கை விழுமியங்களை எங்கிருந்து பெற்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
“நாணயமா நடந்துகொள்ள வேண்டும்”, “வாக்குச் சுத்தம் வேண்டும்” என்று அவர்கள் பேசியதன் பொருள் இன்று எனக்கு விளங்குகிறது.
வாக்குச் சுத்தம் என்பது கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றுவது. அது உயிரினும் மேலானது. அதுவே சத்தியம், அதுவே தான் என் கடவுள், அதுவே என் வாழ்க்கையை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுவது. இந்த சாதாரண மனிதர்களின் வாழ்வியல் பண்பாக இருந்தது.
இன்று இதை நம் நாட்டில் நடக்கும் அரசியல் கோமாளித்தனங்களையும், அட்டூழியங்களையும், பார்க்கும்போது அந்தப் பெண்கள் படிப்பறிவு இல்லாதிருந்தும் பட்டறிவும், பண்பும் அவர்களை எந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது என்பதையும்,
வறுமையில் அவர்கள் வாழ்ந்தாலும் எவ்வளவு மாண்புடன் ஒற்றுமையுடன், இணைந்து, இணக்கமாக வாழ்ந்து தங்கள் வறுமையைப் போக்கியிருக்கிறார்கள் என்பதை நினைத்து நான் பிரமித்துப் பார்க்கிறேன்.
இந்த முன்னுதாரணத்தை இங்கு முன் வைப்பதற்கு ஒரு காரணம் கீழ் விபரிக்கும் நிகழ்வை விளக்குவதற்காகவே.
தமிழகத் தேர்தல் முடிந்து பதவி ஏற்பு விழா நடந்தது. இது ஓர் உணர்வுபூர்வமான காத்திரமான செயல்பாடு.
இந்த நிகழ்வில் ஒவ்வொரு உறுப்பினரையும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள அழைத்தபோது “மாண்புமிகு” என்றுதான் அழைத்தனர்.
ஒவ்வொருவரும் வந்து அந்தப் பிரமாணத்தை அதாவது சத்தியத்தை எடுத்துக் கொண்டனர். அதை சாதாரண நிகழ்வாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
அத்தனை பேரும் அரசமைப்புச் சாசனத்தின் மீது நம்பிக்கையும், மாறாப் பற்றும் கொண்டு செயல்படுவதாக உறுதி எடுத்துக் கொண்டனர்.
அவர்கள் கடமையாற்ற எது வழிகாட்டி என்றால் நம் அரசமைப்புச் சாசனம்தான் என்பதை உறுதி செய்வதாகும்.
“சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் சட்ட முறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்புச் சாசனத்தின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன்” என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அத்துடன் “இந்திய நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன்” என்றும் உறுதியளித்தனர்.
“நான் மேற்கொள்ள இருக்கும் பணிகளை நேர்மையாக நிறைவேற்றுவேன்” என்றும் உறுதி கூறினர்.
சிலர் ஆண்டவனையும் அந்த உறுதிமொழியில் சேர்த்து வாசித்து பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
சிலர் இந்த உறுதிமொழியை ஏற்கும்போது அம்பேத்காரையும் நினைவுகூர்ந்து உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அன்று நடந்த பதவி ஏற்பு விழாவில் உறுதிமொழியை அனைவரும் வாசித்தது ஒரு சம்ரதாயமோ, சடங்கோ அல்ல. அது ஒரு உறுதிமொழி சத்தியப் பிரமாணம்.
அது உயிருக்கு நேரானது. அரசமைப்புச் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுப்பது என்பது, சட்டப்படி ஆட்சி என்பதை உறுதி செய்வது.
அரசமைப்புச் சாசனம்தான் நமக்கு வழிகாட்டும், அதன் அடிப்படையில் நாம் நம் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படைக் கூறு.
இதை ஒவ்வொரு முறை பதவி ஏற்கும்போதும் நம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இந்த உறுதி மொழியின்படி இவர்கள் அனைவரும் இதுவரை நடந்திருந்தால் இந்த நாடு எங்கே சென்றிருக்கும், அப்படிச் சென்றிருக்கிறதா என்பதுதான் அந்தக் கேள்வி.
அந்த உறுதிமொழியை நம் தலைவர்கள் உணர்வுடன் பின்பற்றுகின்றார்களா என்பதுதான் பிரதானக் கேள்வி.
இந்த உறுதிமொழியில் எது பிரதானம் என்றால் நாடுதான். நாட்டின் இறையாண்மை, நேர்மை என்பதுதான் அந்த சாசனம்.
எப்படிப்பட்ட நாட்டை எப்படி உருவாக்கி, எப்படி மக்களுக்கு சேவை செய்து மக்களை எப்படி உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோ அதைச் செய்வதாகத்தான் உறுதிமொழி ஏற்று உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட பணிகளை எதன் பின்புலத்தில் செய்ய வேண்டுமென்றால் அரசமைப்புச் சாசனத்தின் அடிப்படைகளின் மூலம்தான்.
இந்த உறுதிமொழியில் வழிகாட்டுச் சொல் என்பது இந்திய அரசமைப்புச் சாசனம்.
எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் சற்றுநேரம் எடுத்து அரசமைப்புச் சாசன்ததில் உள்ள முகப்புரை ஒரு பக்கத்தை படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
அரசமைப்புச் சாசனத்தின் மீது நம்பிக்கையும் மாறாப் பற்றும் என்பது சாதாரண சொற்கள் அல்ல, சத்திய வார்த்தைகள். அது நம் சிந்தனைக்குள் போய் செருகிட வேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் இவற்றிலிருந்து விலகிடாமல் இருக்க வேண்டும்.
இன்று நாம் செய்யும் அனைத்துப் பணிகளிலும் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை மிக எளிதாகப் பார்க்க முடியும்.
இந்த உறுதிமொழியில் நான் செய்யும் பணிகள் அனைத்திலும் நேர்மையைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி எடுத்துள்ளனர். அது மக்களாட்சியின் ஒரு முக்கியமான கூறு.
இந்தச் செயல்பாடுகளுக்கு முக்கியத் தேவை, மக்கள் தயாரிப்பு. ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய முடியும் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இதுவரை பொதுமக்களுக்கு மக்கள் பிரதிநிதி என்றால் தாங்கள் சொல்வதை அரசாங்கத்தின் மூலம் அவர்கள் செய்து கொடுத்துவிட வேண்டும்.
அது மட்டுமல்ல, சட்டங்கள் என்பது இருந்தாலும் அவைகளை மீறி செய்வதற்கு வந்தவர்கள் அதைச் செய்து தரவேண்டும் என்று எண்ணுவது சராசரி பொதுப்புத்தி.
அந்த பொதுப்புத்தியில் உள்ள கருத்துக்கு ஏற்றார்போல் நடந்து கொண்டு சட்டத்தை துச்சமென மிதித்து செயலாற்றினர் நம் பிரதிநிதிகள்.
அரசுத்துறைகள் அலுவலர்கள் சட்டத்தை கடைப்பிடிக்க தவறும்போது அதைத் தட்டிக் கேட்க வேண்டியவர்களே அதை மீறுவதுதான் ஒரு கலாச்சாரமாக உருகிவிட்ட நிலையில் இந்த சத்திய பிரமாணத்தை நாம் நம் பிரதிநிதிகளுக்கு நினைவூட்ட வேண்டி இருக்கிறது.
அரசாங்கம் சட்டம் கொண்டு வரலாம், திட்டம் கொண்டு வரலாம், நிதி ஒதுக்கீடு செய்யலாம்.
ஆனால், அவைகள் மக்களுக்குத் தெரிய வேண்டும், அதை மக்களுக்காக அரசுத் துறைகள் நிறைவேற்றும்போது அதை மக்கள் கண்காணிக்க வேண்டும், எந்தெந்த இடங்களிலெல்லாம் பங்கேற்க முடியுமோ அங்கெல்லாம் பங்கேற்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தை எவரும் கை வைக்காமல் கண்காணிப்பது குடிமக்களின் பொறுப்பு கடமையாகும்.
இதைக் கண்காணிக்க மக்களுடன் அவ்வப்போது செய்திகளை மக்களுக்குக் கொண்டு வந்து தருவது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.
‘மாண்புமிகு’ என்பது உயர்வு, ஒழுக்கம், மேன்மை, பண்பு, பக்குவம், பணிவு, கண்ணியம், கருணை, நேர்மை, நியாயம், நீதி அடங்கியதுதான்.
இவைகளெல்லாம் ஒரு மனிதருக்கு வந்துவிட்டால் அவர் ‘மாண்புமிகு’ மக்களாக ஆகிவிடுவார்.
நேற்றுவரை ஒரு சாதாரண மனிதராக இருந்தவர்கள் இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் பிரதிநிதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.
எனவே தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் பண்பு நலன்களாலே. கண்ணியம் காப்பதில் இவர்கள் கருத்தாக இருக்க வேண்டும்.
நாம் உடுத்தும் உடையால் நாம் பெரியவர்கள் அல்ல. நம் நடத்தையால் பெரியவர்களாக வேண்டும்.
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளையும் பணிகளையும் முறையாகச் செய்திட தங்களின் திறன்களையும், ஆற்றல்களையும் உயர்த்திட வேண்டும்.
நம் சிந்தனை, நம் நடத்தை நம் தொடர் செயல்பாடுகள்தான் நம் வசீகரத் தன்மையைக் கூட்டும்.
அதுதான் இன்று நம் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது.