ஆரோக்கியம் அறிவோம்!

இயற்கை ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு மரபணு மூலக்கூறுகளுடன் தான் படைத்திருக்கிறது.

நோய்களை எதிர்கொள்ளும் விதம், அதன் தடுப்பு முறைகள், மருத்துவம், உடற்கூறுகள் என அனைத்தும் வித்தியாசப்படுகிறது.

உதாரணமாக ஒரே மாதிரியான உடல் உபாதைகள் தரக்கூடிய வலியின் வெளிப்பாடுகள் வெவ்வேறு வகையாக இருக்கும்.

பரவலாக காணப்படும் ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்தும் அவற்றிற்கான உணவு முறைகள் பற்றியும் பார்ப்போம்.

ரத்த சோகை:

தற்போது பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இது அறியப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் நிலையே அனிமியா அல்லது ரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்படுவது தடைபடுகிறது.

இக்குறைபாடு கடும் விளைவுகளை தரக்கூடியது. உரிய நேரத்தில் கண்டறிதல் மிகவும் அவசியம். இதனை தடுக்கவும் நிர்வகிக்கவும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அனைத்து வகை கீரைகள், பேரிச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு எலுமிச்சை, நெல்லிக்கனி போன்ற சிட்ரஸ் பழங்கள் உதவுகின்றன.

மாதவிடாய் கோளாறுகள்:

உடல் எடை அதிகமாக இருத்தல், மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, காச நோய் அல்லது ஈரல் தொடர்பான நோய், தொடர்ச்சியான பயணங்கள் மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகள், சினைப்பை நீர்க்கட்டி ஆகியவை மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

ஜிங்க், செலினிய சத்துக்கள் உள்ள நாட்டு தக்காளி வெந்தயம், உலர் பழங்கள், பட்டை தீட்டப்படாத அரிசி போன்ற உணவுகளை எடுத்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.

துரித உணவுகளை மொத்தமாக தூர எறிந்து, நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உட்கொள்வது இதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது.

மைக்ரேன் தலைவலி:

இது தலையில் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் கடுமையான வலியாகும். ஊட்டச்சத்து பற்றாக்குறை, மன அழுத்தம், மரபுத்தன்மை, ஹார்மோன் குறைபாடுகள், தூக்கமின்மை, வாழ்க்கை முறை செயல்பாடுகள், பகல் உணவை தவிர்த்தல் ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும்.

உணவு, உறக்கம், கழிவுகள் வெளியேற்றம் ஆகியவற்றை முறைப்படுத்துவதன் மூலம் இதற்கான தீர்வை கண்டறிய முடியும். இஞ்சி மற்றும் கருப்பட்டி சேர்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

ஆஸ்டியோ பொரோஸிஸ்:

40 வயதை கடந்த நிலையில் ஹார்மோன் குறைபாட்டால் எலும்புகள் வலிமை இழக்கும் நிலையே ஆஸ்டியோ பொரோசிஸ் எனப்படுகிறது.

எலும்புகளின் அடர்த்தி மெல்ல மெல்ல குறைந்து எளிதில் உடையும் நிலை வரும் வரை எந்தவித அறிகுறியும் தென்படாது. சிறிய அளவில் கீழே விழுந்தாலோ அல்லது லேசான அழுத்தம் உண்டானால் கூட எலும்பு முறிவு ஏற்படும்.

வயது முதிர்வு, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை இதன் பிற காரணங்களாகும். கால்சியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த உணவுகளை முறையாக உட்கொள்ளுதல் மூலம் இந்நோய் பாதிப்பினை தவிர்க்க முடியும்.

பால், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள், கொய்யாப்பழம் போன்றவையும் எலும்புகளை வலுவடைய செய்யும். மேலும் இளம் வெயிலில் உற்பத்தியாகும் வைட்டமின் டி சத்தும் கால்சியத்தை தக்க வைத்துக் கொள்ள பெருமளவு உதவி புரிகிறது.

இதனைப் பொறுத்தவரை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏற்கனவே வலுவிழந்த எலும்புகளை கால்சிய சத்துக்களால் மீண்டும் பலமாக்க முடியாது.

ஆனால் வலுவிழக்காத எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

S. வாணி

 
Comments (0)
Add Comment