தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (18.06.2026) தொடங்கியது.
முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி, ஆளுநர் உரையாற்றுவது வழக்கம்.
17-வது சட்டசபையில் உரையாற்றுவதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் காரில் புறப்பட்டு 9.50 மணிக்கு தலைமைச்செயலகம் வந்தடைந்தார்.
ஆளுநருக்கு அணிவகுப்பு மரியாதை!
சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க தலைமைச் செயலகம் வந்த ஆளுநரை போலீஸ் வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டசபைச் செயலாளர் சாந்தி ஆகியோர் உடனிருந்து ஆளுநரை பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
அவருடன் ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தார்.
சரியாக, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் இருக்கைக்கு ஆளுநர் அர்லேகர் வந்தார்.
அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கைக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், இடதுபுறம் உள்ள இருக்கைக்கு ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவானும் வந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது:
முதலில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது; வந்தே மாதரம் இடம்பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து, தமிழில் வணக்கம் தெரிவித்து தனது உரையை ஆளுநர் அர்லேகர் தொடங்கினார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் 39 நிமிடங்கள் உரையாற்றினார்.
கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் பேசியவை:
விசில் புரட்சி:
தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்.
விசில் புரட்சி மூலம் இமயமலை அளவுக்கு வெற்றியைப் பதிவு செய்துள்ளார் விஜய்.
கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் பொதுமக்களின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது.
ஜாதி, மதங்களை கடந்து தவெக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்”
வரலாற்றுப் புரட்சி:
“மக்களே ஜனநாயகத்தின் நாயகர்” என்ற பேரறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி, 1967-ல் அண்ணா, 1977-ல் எம்.ஜி.ஆருக்குப் பிறகு 2026-ல் வரலாற்று புரட்சி நடந்திருப்பதாக ஆளுநர் உரை.
ஆளுநர் பாராட்டு:
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக தவெக அரசு உருவாக்கியுள்ள சிங்கப்பெண் திட்டம் சிறப்பானது.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பதவியேற்ற உடனேயே 717 மதுபான கடைகளை மூடி மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக தவெக அரசு உள்ளதாக ஆளுநர் பாராட்டு.
மதுரை, கோவை மெட்ரோ ரெயில்:
தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை, மதுரை மற்றும் ஓசூரில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் அனுமதி அளிப்பார்கள் என நம்புகிறேன்.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும்:
தலைமைச் செயலாளர் தலைமையில் தொழில் முதலீட்டு ஆணையம் அமைக்கப்படும்.
நகர்மயமாக்கலில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு. அரசு துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த ஏ.ஐ தொழில்நுட்பம்.
2031ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் மாறும்.
விளையாட்டுகளில் உலகத் தரத்திலான பயிற்சிகள் வழங்க ஒலிம்பிக் மையங்கள்.
மகளிர் சுயஉதவிக்குழு அமைக்க திருநங்கைகளுக்கு அரசு உதவும். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை.
தவெக அரசுக்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை.
இருமொழிக் கொள்கை:
தமிழக வெற்றிக் கழக அரசு இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும். பின்பற்றும்.
இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறது.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்:
முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
கடன் சுமை:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை:
இந்துசமய அறநிலையத் துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை இந்த அரசு மேற்கொள்ள உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைக்கப்படும்.
கோவில் நிதி கோவில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும்.
மேகதாது அணை:
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
மேகதாது விவகாரத்தில் அரசின் சட்ட நடவடிக்கை தொடரும்.
மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை விரைந்து விடுவிக்க வேண்டும்.
சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு:
அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த நடவடிக்கை.
உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
தேசிய கீதத்துடன் நிறைவு:
தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடர்.
– வைஷ்ணவி பாலு