குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

அண்மையில் பரபரப்பாக நடந்து முடிந்த சட்டமன்றத் தொடரில் இருவருடைய பேச்சுக்கள் பொதுவெளியிலும் ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

முதலாவது, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிப்படுத்திய கடுமையான விமர்சனம்.

உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு ஆளுங்கட்சியான தவெக தரப்பில் சரியான பதிலளிக்கப்படவில்லை.

மறுநாள் தன்னுடைய வழக்கமான பாணியிலும் ஆக்சனிலும் தன்னுடைய பேச்சை ஊடகங்களில் கவனித்தக்க ஒன்றாக மாற்றினார் முதல்வர் விஜய்.

தன்னுடைய பேச்சில் பல விசயங்களைத் தொட்டபோதும், அவர், கடந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்த பல்வேறு ஊழல்கள் பற்றி குறிப்பிட்டு அப்படி ஊழல் செய்தவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்று சொன்னபோது சட்டசபையில் பலத்த ஆரவாரம் எழுந்தது.

அதைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வெளியே பேசிய தவெக அமைச்சரான ராஜ்மோகன், திமுக ஆட்சியில் ஊழல் செய்த இரு அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை ஆளுநர் இரண்டு வாரங்களாக தராமல் இருக்கிறார். அது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார்.

அடுத்து செய்தியாளரிடம் பேசிய பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன், ஆளுநர் அனுமதி கொடுக்காதது பற்றி எந்த ஒரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தலுக்கு முன்பும் விஜய் சொன்னார்.

தற்போது சட்டசபையிலும் அதே கருத்தைச் சொல்கிறார் அவரது கட்சியைச் சார்ந்த அமைச்சரான ராஜ்மோகனும் பாஜக மீது வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசியலில் உண்மையில் நடப்பது தான் என்ன?.

சென்ற திமுக ஆட்சியில் நீதிமன்றம் தலையிட்டும் முதல் தகவல் அறிக்கையெல்லாம் அளித்த நிலையிலும் கூட, குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு திமுகதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

தற்போது அதற்கு நேர் எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படாததற்கு ஆளுநர் அனுமதி தராததுதான் காரணம் என்கின்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் முன்வைக்கப்படும் நிலையில், இதற்கு திமுக மற்றும் பாஜக தரப்பிலான பதில் என்னவாக இருக்கும்.

தேர்தலுக்கு முன்பு விஜய் பல்வேறு கூட்டங்களில் பேசிவந்தபடி திமுக – பாஜகவிற்கு இடையில் மறைமுகக் கூட்டணி என்று சொல்லி வந்ததை இன்று செயல்முறைக்கு கொண்டுவந்திருக்கிறார்களா சம்பந்தப்பட்ட கட்சிகள்?.

எப்படி இருந்தாலும் தவெக தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படையாக மக்களுக்கு முன்னால், முன்வைப்பது ஜனநாயகத்திற்கு நல்லது, ஜனநாயகனுக்கும் நல்லது.

யூகி

Comments (0)
Add Comment