தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியவை:
“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. 2001 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
10 ஆண்டுகளுக்கான வெள்ளை அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? யாரைக் காப்பாற்ற 5 ஆண்டுகளுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்?
ஜெயலலிதா ஆட்சியிலும், ஸ்டாலின் ஆட்சியிலும் 10 ஆண்டுகளுக்கான அறிக்கையே வெளியிடப்பட்டது.
“யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?”
ஆனால், தற்போது முந்தைய 5 ஆண்டுகளின் நிதிநிலை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை?
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே அனைவரும் பார்த்துவிட்டனர்.
இடைக்கால பட்ஜெட்டிலேயே அரசின் நிதிநிலை குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.
அதற்குப் பிறகுதான் தவெக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
வாக்குறுதிகளில் இருந்து தப்பிப்பதற்காக த.வெ.க. அரசு இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன் – சவால்:
“த.வெ.க. அரசு தனது 5 ஆண்டு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனைவிட த.வெ.க. அரசு குறைவாக கடன் வாங்கினால், நான் எனது பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.
அரசு கடன் வாங்குவது தவறு அல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
இது எஸ்கேப்பிசம்:
த.வெ.க. அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்று சொல்லலாம்; வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்க த.வெ.க. அரசு முயற்சி செய்கிறது.”
– வைஷ்ணவி பாலு