விசிகவுக்கு ஏன் இந்தளவுக்கு அலைக்கழிப்புகள்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துவக்கப்பட்டபோது, அது தேர்தல் ஜனநாயகத்தில் ஈடுபடும் கட்சியாக இல்லை.

எந்தவிதமான தேர்தல் அரசியலில் செயல்படாமல் ஒதுங்கி, கடுமையான விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வந்த விடுதலைச் சிறுத்தைகள், மூப்பனாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகே அவர்கள் நேரடியாக தேர்தல் அரசியலுக்கு வந்தார்கள்.

அப்போது மூப்பனாருடன் கூட்டணி வைத்து, தேர்தல் அரசியலில் போட்டியிட்டபோதே அவர்கள் முன்வைத்த முழக்கம் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதாகத்தான் இருந்தது.

அந்த முழக்கத்தை அப்போதே ஆதரிக்கிறவராக மூப்பனார் இருந்ததாக தன்னுடைய பேட்டியில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான முனைவர்.தொல்.திருமாவளவன்.

இதுவரை திமுக, அதிமுக என்று அடுத்தடுத்து சில கூட்டணிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இடம்பெற்றிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள், கடந்த தேர்தலுக்கு முன்பிருந்தே மறுபடியும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கின்ற முழக்கத்தை மீண்டும் முன்வைத்தார்கள்.

விசிக நிர்வாகிகள் அது குறித்த பேச்சையும் எழுத்தையும் வெளியிட்டார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரவாண்டியில் தவெக தலைவரான விஜய், கூட்டணி ஆட்சிப் பற்றி பேசியதிலிருந்தே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் பொதுவுடமைக் கட்சிகளுக்கும் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்கின்ற முழக்கத்தை முன்வைக்க முடிந்தது.

ஆனால், அத்தகைய முழக்கம் ஒரு உச்சகட்டத்தை அடைந்தபோது திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் கூட்டணி ஆட்சி என்கின்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை, தமிழக மக்கள் அதை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்கின்ற ஒரு பொது கருத்தையும் வெளியிட்டார்.

ஏறத்தாழ அதே மாதிரியாகத்தான் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியும், அதிமுக தலைமையிலான ஆட்சி என்பதைத்தான் வலியுறுத்தினாரே ஒழிய, கூட்டணி ஆட்சி என்கின்ற முழக்கத்தை பரிசீலிக்கக் கூட தயாராக இல்லை.

இவ்வளவுக்கும் பாஜக கூட்டணி ஆட்சி என்பதை அடிக்கடி வலியுறுத்தியும் கூட குறைந்தபட்சமாக அதை பரிசீலிக்கத் தயாரான மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை.

இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதற்கு முன்பே, தமிழக அரசியலில் தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் ஏற்படலாம் என்றும், அப்படி வந்தால், தான் மாநில அரசியலுக்கு வர விரும்புவதாகவும் வெளிப்படையாகவே அறிவித்தார் விசிக தலைவரான தொல்.திருமாவளவன்.

அறிவித்ததோடு மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிற்க போவதாகவும் அறிவித்தார்.

மாநில அரசியலில், தான் பங்குபெற வேண்டிய அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

ஆனால், அவர் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதற்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த அழுத்தம் காரணமாக அவர் காட்டுமன்னார் கோயில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்துவிட்டு, அதில் ஜோதிமணியை வேட்பாளராக நிறுத்தினார்.

ஆக, தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவு மாறுதலான அளவில் இருக்கும் என்பதை அரசியல் ரீதியாக யூகித்தவராக தொல்.திருமாவளவன் இருந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அவர் யூகித்த மாதிரியாகத்தான் அதுவரை பல்வேறு ஊடகங்களும், ஏன் உளவுத்துறை கொடுத்த தேர்தல் கணிப்புகளுக்கு முழுக்க மாறாக 108 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றது தவெக.

அதேசமயம், தாங்கள் வெற்றி பெற்றதுமே கூட்டணியில் சில கட்சிகளைப் பங்கேற்க வைக்க முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. 

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு தவெகவுக்கு ஆதரவளிக்க முன் வந்தது.

இந்த நிலையில் தங்களுடைய கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவை தெரிவித்தார்கள் பொதுவுடமைக் கட்சியினர்.

ஆனால், தொடர்ந்து ஆதரவளிக்க அழைப்பு விடுக்கப்பட்டும், விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதற்கு கூடுதலான காலதாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், எடப்பாடியை முதல்வராக்க ஒரு முயற்சியும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவரான தொல்.திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி அதற்கு அதிமுகவும் திமுகவும் ஆதரவளிக்கப் போவதாகவும் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

சில தேசியத் தலைவர்கள் கூட அத்தகைய வியூகங்களை உறுதிப்படுத்தினார்கள்.

அதிமுக அணியிலிருந்து பிரிந்து வந்த சி.வி.சண்முகம் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நடந்திருக்கிற பேச்சுவார்த்தைகளை வெளிப்படையாக போட்டுடைத்து பொதுவெளிக்குக் கொண்டு வந்தார்.

அது ஊடகங்களில் பெரியளவில் பேசு பொருளாக பேசப்பட்டது.

இதற்கடுத்து சற்று தாமதமான நிலையில்தான், செய்தியாளரை சந்தித்த தொல்.திருமாவளவன், தன்னை முன்னுறுத்தி சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தனக்கு சில நம்பகமான செய்திகள் கிடைத்ததாக சொன்னாரே ஒழிய வெளிப்படையாக என்ன நடந்தது, என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் தான் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதற்கான அழைப்பை வெளியிட்டார் பொதுப்பணித் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா.

அந்த அழைப்பிற்கு இணங்கி உடனே பங்கேற்பதாக அறிவித்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

ஆனால், அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் உடனே அறிவிக்க தாமதமானது.

இதையடுத்து முதல் நாள் 23 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திருமாவளவனும், அவரது சட்டமன்ற உறுப்பினரான வன்னி அரசும் அந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.

அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் தான் அமைச்சரவையில் பங்கேற்க போவதாகவும், வன்னி அரசை நியமிக்க சிபாரிசு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்  திருமாவளவன்.

அதன் பிறகே, மறுநாள் ஆளுநர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ஐ.எம்.யூ.எல். சார்பில் ஷாஜகானும், விசிக சார்பில் வன்னி அரசும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றார்கள்.

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான வன்னி அரசுக்கு முதலில் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த இலாகாவின் பெயர் சற்றே மாற்றி அமைக்கப்பட்டு, சமூக நீதித்துறை என்கின்ற பெயரில் அந்த இலாகா அமைச்சராகியிருக்கிறார் வன்னி அரசு.

இவ்வளவு காலதாமதத்துக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தவெக அமைச்சரவையில் பங்குபெற்ற உடனே திமுக தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

திமுக எம்.பி.யான ஆ.ராசா கொச்சையான விதத்தில் ஒரு சமூக வலைதளப் பதிவில் பகிர்ந்ததும், அது பெரும் சர்ச்சைக்கும் கண்டனத்திற்கும் உள்ளானது.

திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பேட்டியும் தன்னுடன் அதுவரை கூட்டணியிலிருந்த முஸ்லிம் லீக்கையும், விடுதலைச் சிறுத்தைகளையும் மிகவும் கேவலப்படுத்துகிற விதத்தில் இருந்தது.

இதையடுத்து யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என்கின்ற வேண்டுகோள் முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலினிடமிருந்து வெளிவந்தது.

ஆனால், தன்னுடைய துவக்க காலத்திய முழக்கமான ஆட்சியில் அதிகாரம் என்கின்ற முழக்கத்தை தவெக செயல்பாட்டிற்குக் கொண்டு வந்த நிலையில், அதில் தன்னுடைய முழக்கத்தில் முன்வைத்தபடியே பங்கேற்றிருக்கிறது விசிக.

திராவிடக் கட்சிகள் இத்தகைய பங்கேற்பை திட்டவட்டமாக மறுத்த நிலையில் தான், இன்றைக்கு அந்த பங்கேற்பை வரவேற்றிருக்கிற, தவெக அமைச்சரவையில் சேர வேண்டிய சூழல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கணிந்து வந்திருக்கிறது. அவர்களும் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சரவையில் பங்கு பெறுவது என்கின்ற உயரத்தை எட்டுவதற்குள் அவர்களுக்குத்தான் எவ்வளவு அலைக்கழிப்புகள், எவ்வளவு இடையூறுகள்.

தமிழக வாக்காளர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  • அ. நன்மாறன்
 
Comments (0)
Add Comment