மே.வங்கத்தில் பாஜகவின் எழுச்சியும், மம்தாவின் வீழ்ச்சியும்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுமே தோல்வி அடைந்திருப்பதுதான்.

தமிழகம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களே அவை. மூன்று மாநிலங்களிலும் அந்தக் கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தன.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

2011-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அவர் முதலமைச்சராக இருந்து வந்தார்.

ஆனால், இந்தத் தேர்தலில் அவரது கட்சி யாரும் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்துள்ளது.

அந்த மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. பாஜக 207 இடங்களை அள்ளியது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 80 தொகுதிகளே கிடைத்தன.

அது மட்டுமல்ல, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்பட்ட பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தாவே தோற்றுப்போனார்.

மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் பாஜக மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரியிடம் 15,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

ஏன் இந்த வீழ்ச்சி ..?

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு – ஆட்சிக்கு எதிரான அலை, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பாஜகவின் வலுவான பிரச்சாரம் ஆகியவை காரணங்களாக சொல்லப்பட்டன. 

ஆனால் மேலும் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

• முதல் பிரதான காரணம்…

2024-ல் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அப்போதே பெண்களுக்கு மம்தாவின் மீது நம்பிக்கை பொய்த்துவிட்டது.

இதனால் இந்த முறை பெண்கள், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

கை கொடுக்காத முஸ்லிம் வாக்குகள்.

மே.வங்க மாநிலத்தில் 30% முஸ்லிம்கள் உள்ளனர். கடந்த காலங்களில் அவர்கள் ஒட்டுமொத்தமாக திரிணாமூல் காங்கிரசுக்கே வாக்களித்து வந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் முஸ்லிம்கள் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

இந்த முறை முஸ்லிம் ஓட்டுகள் துண்டுதுண்டாக சிதறிவிட்டன.

ஐதராபாத்தை தளமாக கொண்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கணிசமான வாக்குகளை பிய்த்துக்கொண்டது.

சில பிரச்சினைகளால் திரிணாமூல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் என்பவர், தனிக்கட்சித் தொடங்கி, அவரும் முஸ்லிம் வாக்குகளைப் பங்குப் போட்டுக்கொண்டார்.

மற்றொரு முஸ்லிம் கட்சித் தலைவர் பீர் ஜாதா அப்பாஸ், தனக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் முஸ்லிம் ஓட்டுகளை அள்ளினார்.

இவர்கள் தவிர இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளும் முஸ்லிம் வாக்குகளை பிரித்தன.

இவர்களுக்குப் போக எஞ்சியிருந்த சொற்ப வாக்குகளே மம்தா கட்சிக்கு கிடைத்துள்ளன. அவரது தோல்விக்கு இதுவே தலையாயக் காரணம் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்து.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment