நமக்கு சர்வதேச நாடுகளில் செயல்படும் கூட்டமைப்புகளின் பெயர்கள் தெரியும். ஆனால் அவை எங்கே இருக்கின்றன.
எப்படிச் செயல்படுகின்றன என்று தெரியாது. அதுபற்றிய சுருக்கமான தகவல்கள்…
Amnesty International
இலண்டன் நகரத்தில் வழக்குரைஞர் பீட்டர் பெனன்சன் என்பவரால், 1961ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைக் கழகம் தொடங்கப்பட்டது.
இதுவொரு அரசு சாராத மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்பு. 150 நாடுகளைச் சேர்ந்த 11 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ADB – Asian Development Bank
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் டிசம்பர் 19, 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆசிய வளர்ச்சி வங்கி.
இதற்கு உலகம் முழுவதும் 31 பீல்டு அலுவலகங்கள் உள்ளன. இது 67 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. அதில் ஆசிய நாடுகள் 48.
APEC – Asia-Pacific Economic Co Operation
ஆசிய – பசிபிக் பகுதியில் திறந்தவெளி வணிகம் மற்றும் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்காற்றும் அமைப்பு.
ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு இடையே தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியை கருத்தில்கொண்டு 1989ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
Arab Leaque
அரபு ஒற்றுமைக்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1945 ஆம் ஆண்டு அரபுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐநா பொதுச்செயலர் அரபு கூட்டமைப்பின் பார்வையாளராக பங்கேற்கலாம்.
ASEAN Association of South East Asian Nations
தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே நிலையான பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது இந்த அமைப்பு.
இந்தோனேஷியா தலைநகர் ஜாகர்த்தாவில் ஆகஸ்ட் 8, 1967ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் தாய்லாந்து, வியட்நாம், புருனே, கம்போடியா, லாவோஸ் உறுப்பு நாடுகள்.
AU – African Union
ஆப்பிரிக்கன் யூனியனுக்கான விதை 1963 ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது.
ஆனால், 2002 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க யூனியன் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஏயூ.வில் 54 நாடுகள் இடம்பெற்றுள்ளள. இதன் தலைமையகம் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ளது.
BIS – Bank for International Settlements
சுவிட்சர்லாந்து நாட்டின் பேஸல் நகரில் அமைந்துள்ள இந்த அமைப்பு, மத்திய வங்கிகளின் நிறுவனமாக செயல்படுகிறது. இதன் சொத்துக்கள் 45 மத்திய வங்கிகளுக்குச் சொந்தமானவை.
இதற்கான துணை அலுவலகங்கள் ஹாங்காங், மெக்சிகோ சிட்டியில் உள்ளன.
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் இழப்பீடுகள் பற்றிய கேள்விக்குப் பதிலாக 1930ம் ஆண்டு மே 17ஆம் தேதியன்று உருவானது.
CARICOM Caribean Community
கல்வி, சுகாதாரம், வெளியுறவுக் கொள்கையில் ஒத்துழைப்பு, பொருளாதாரம் போன்ற துறைகளில் இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அமைப்பு. 1973, ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது.
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் தலைமையகம் உள்ளது. 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
CIS – Commonwealth of Independent States
சோவியத் ரஷ்யா பிரிந்தபோது ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. தனி சுதந்திர நாடுகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட குடியரசுகளின் அமைப்பு. டிசம்பர் 8, 1991ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்கு 1994ம் ஆண்டு ஐநாவில் பார்வையாளர் தகுதி வழங்கப்பட்டது. பெலாரஸ் நாட்டில் மின்ஸ்க் நகரில் தலைமையகம் உள்ளது.
Commonwealth
உலகின் மிகப்பெரிய, மிகச்சிறிய, பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் கூட்டமைப்பு.
அதில் 53 சுதந்தர நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. காமன்வெல்த் நாடுகளின் மக்கள் நல்வாழ்வு, அமைதி, வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற உறுப்பு நாடுகள் இங்கிலாந்து ராணியை தமது நாட்டின் கெளரவத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளன. தலைமையகம் இலண்டனில் உள்ளது.
IATA – International Air Transport Association
கனடாவின் மாண்ட்ரியல் நகரை தலைமையிடமாகக் கொண்ட அயாட்டா அமைப்பு, நாடுகளுக்கு இடையே பாதுகாப்பான குறைந்த செலவுள்ள விமானப் போக்குவரத்தை உறுதிசெய்கிறது.
உலகம் முழுவதும் 260 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அயாட்டாவுடன் இணைந்துள்ளன. 140 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஜெனீவாவிலும் அலுவலகம் உண்டு.
ICRC – International Committee of the Red Cross
ஜெனிவா நகரை தலைமையிடமாகக் கொண்டது செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச அலுவலகம். உலகின் மதிப்பிற்குரிய அமைப்பான இது 1917, 1944, 1963 ஆம் ஆண்டுகளில் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளது.
இயற்கைச் சீற்றத்தாலும், போரினாலும் துன்பப்படும் மக்களுக்கு உதவ, ஹென்றி டுனான்ட் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க 1863ம் ஆண்டு இந்த சங்கம் தொடங்கப்பட்டது.
Intelsat International Telecommunication Satellite Organisation
அமெரிக்காவின் வாஷிங்டனில் தலைமையகம் உள்ளது. உலக அளவில் வணிக செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதற்கான செலவுகள் உறுப்பு நாடுகளில் செயற்கைக் கோள் பயன்பாட்டிற்கு ஏற்ப பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
Interpol – International Criminal Police Organisation
உலகின் மிகப்பெரிய சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
1914 ம் ஆண்டு இந்த அமைப்புக்கான கரு உருவாக்கப்பட்டு, 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் லையோன் நகரில் தலைமையகம் உள்ளது.
IPU – Inter – Parliamentary Union
நாடுகளுக்கு இடையே பரஸ்பர அரசியல் பரிமாற்றங்களுக்காக 1889ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் நிலையான அமைப்பு.
பிரான்ஸைச் சேர்ந்த பிரெடரிக் பாஸே, பிரிட்டனைச் சேர்ந்த ராண்டல் கிரிமர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
உலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ள ஒரு களமாக இது உதவுகிறது.
ISO – International Organisation for Standardisation
பல நாடுகளைச் சேர்ந்த தரம் தொடர்பான அமைப்புகள் இணைந்து தொடங்கிய அரசு சாரா அமைப்பு. 1947ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதியன்று தொடங்கப்பட்டது.
பன்னாட்டுத் தரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஐஎஸ்ஓ அமைப்பின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.
NATO – North Atlantic Treaty Organisation
வட அட்லாண்டிக் கூட்டமைப்பு, 1949 ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், பிரிட்டன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து உருவாக்கினார்கள்.
பெல்ஜியத்தின் பிரெஸ்ஸல்ஸ் நகரை தலைமையிடமாகக் கொண்ட நேட்டோவில் 28 நாடுகள் உறுப்பினர்கள்.
SAARC – South Asian Association for Regional Co-Operation
1983 ஆம் ஆண்டு நியூ தில்லியில் நடந்த தெற்காசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் சார்க் அமைப்புக்கான கருத்துரு உருவானது.
இந்தியா, மாலத்தீவு, பூடான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகள்.
ஏழ்மை, மக்கள்தொகைப் பெருக்கம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் சவால்களை எதிர்நோக்குவதே அமைப்பின் முக்கிய நோக்கம். நேபாளத்தில் தலைமையகம் உள்ளது.
OAS – Organisations of American States
அமெரிக்க நாடுளிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதுவொரு இன்டர் கான்டிநெண்டல் அமைப்பு. இதற்கான ஆரம்பம், 1890 ஆம் ஆண்டில் கூடிய சர்வதேச அமெரிக்க நாடுகளின் மாநாட்டில் உருவானது. தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது.
OECD – Organisation for Economic Co operation and Development
உலக நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 1961 ஆம் ஆண்டு செப்படம்பரில் தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் OEEC என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இது பிறகு OECD என்று பெயர் மாற்றப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தலைமையகம் உள்ளது.
OPEC – Organisation of The Petroleum Exporting Countries
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் 13 நாடுகள் இணைந்து 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு.
1965ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் செயல்படத் தொடங்கியது.
உறுப்பு நாடுகளுக்கிடையே பெட்ரோலியப் பொருட்கள் குறித்த ஒரு பொதுக் கொள்கையை உருவாக்குதல், சர்வதேச பெட்ரோலிய சந்தையில் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்தல் போன்றவே அமைப்பின் நோக்கம்.
WWF – Worldwide Fund for Nature
உலக நாடுகளிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரசு சாரா அமைப்பாக 1961 ஆம் ஆண்டு, ஏப்ரல் 29 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரிய அமைப்பு இது.
5 மில்லியன் ஆதரவாளர்களும், 100 நாடுகளும், 24 தேசிய நிறுவனங்களும் இந்த அமைப்பிற்கு வலிமை சேர்க்கின்றன.
G-8
தொடக்கத்தில் ஜி6 என்று அழைக்கப்பட்டது. சர்வதேச சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தை, உறுதியான நடவடிக்கைகளால் தீர்வு காண வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 1975ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கனடா, ரஷ்யா போன்ற நாடுகள் உறுப்பினராக இணைந்ததை அடுத்து ஜி8 ஆனது.
எட்டு நாடுகளுடன் ஐரோப்பிய யூனியனும் ஓர் உறுப்பினர். பின்னர், பிரேசில், இந்தியா, சீனா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டனர்.
ரஷ்யா நீக்கப்பட்டுள்ளதால், ஜி7 என்று அழைக்கப்படுகிறது.
G-20
உலகப் பொருளாதார சக்திகளான 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்த அமைப்பு.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.
G-77
ஐநா உறுப்பு நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பு. ஜூன்15, 1964 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதில் 77 உறுப்பு நாடுகள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது.
– தான்யா