தங்கம் ஏற்றுமதி செய்தாலும் ஏழ்மை: மாற்று வழி யோசித்த அதிபர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினோ பேசோ. (இப்படி ஒரு நாடு இருக்கிறதா என்று கேட்கக்கூடாது. அப்படி ஒரு நாடு இருக்கிறது.)

அந்த புர்கினோ பேசோ நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருள் என்ன தெரியுமா? தங்கம்! அந்த நாட்டின் ஏற்றுமதியில் 93.8 விழுக்காடு இடத்தைப் பிடித்திருப்பது தங்கம்தான்!

அடேங்கப்பா! அப்படின்னா அந்த நாடு பெரிய பணக்கார நாடாக இருக்குமே என்று தப்புக்கணக்குப் போட்டுவிடாதீர்கள்.

கோடிகளில் புரண்டு கும்மாளம் அடித்தாலும் தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனம் எப்படி சாதா நிறுவனமாக இருக்கிறதோ, அப்படி தடபுடலாக தங்க ஏற்றுமதி செய்து வந்தாலும் புர்கினோ பேசோ நாடு இதுவரை ஏழை நாடுதான்.

காரணம் தங்கத்தின் மூலம் வரும் வருவாய் புர்கினோ பேசோ நாட்டுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. வேறு ஒரு இடத்தில் அது மொய் எழுதப்பட்டு வந்தது.

புர்கினோ பேசோ நாட்டின் தற்போதைய அதிபராக இருக்கும் இப்ராகிம் டிரோரே, இதற்கு முடிவு கட்ட நினைத்தார்.

ஆட்சியில் பலப்பல புதுமைகளைப் புகுத்தி வரும் டிரோரே, அந்த நாட்டின் ஐந்து தங்கச் சுரங்கங்களைத் தேசிய மயமாக்கி இருக்கிறார்.

அடுத்தகட்டமாக 11 பில்லியன் பிராங்க் செலவில், தங்க சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவியிருக்கிறார்.

இதன்மூலம் இனி ஆண்டுக்கு 164 டன் தங்கத்தைச் சுத்திகரிக்க முடியும்.

அதன்மூலம் இனி தங்கத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயும் புர்கினோ பேசோ மக்களுக்கே வந்து சேரும். முன்பு போல அங்கும் இங்கும் இனி அது சிந்தாது, சிதறாது.

சரி. இந்த ஏழை நாட்டின் தங்கத்தால் இதுவரை ஜொலிஜொலித்து வந்த பிரான்ஸ் போன்ற நாடுகள் சும்மா இருக்குமா?

அவர்கள், கொஞ்சம் புதுமையான குற்றச்சாட்டை அதிபர் டிரோரே மீது வைத்திருக்கிறார்கள்.

‘புர்கினோ பேசோ வடகொரியாவாக மாறிக் கொண்டிருக்கிறது. டிரோரே அந்த நாட்டை வட கொரியாவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்’ என்ற குற்றச்சாட்டு அது.

பொதுவாக அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை ஆட்சியை விட்டு அகற்ற, ஐந்து வகையான டெம்பிளேட்களை வைத்திருப்பார்கள்.

ஒன்று கம்யூனிஸ்ட் என்ற குற்றச்சாட்டு. இரண்டு போதை மருந்து கடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு. மூன்று பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.

நான்கு, சூனிய வித்தை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு. ஐந்து பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுகிறார் என்ற குற்றச்சாட்டு.

இந்தநிலையில் புர்கினோ பேசோ நாட்டின் அதிபர் டிரோரே மீது கொஞ்சம் புதுமையாக ‘நாட்டை, வட கொரியாவாக மாற்றுகிறார்’ என்ற குற்றச்சாட்டை பிரான்ஸ் நாடு வைத்திருக்கிறது.

ஒரு நகைச்சுவை காட்சியில் வடிவேலு சொல்வாரே. ‘இது புதுசா இருக்கண்ணே’ என்று. அந்த மாதிரி இது கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. இல்லையா?

– மோகன ரூபன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment