பிரச்சாரம் செய்வதில் சுணக்கம் காட்டுகிறாரா விஜய்?

தமிழ்நாடு சட்டமனறத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் எட்டு நாட்களே உள்ளன.

கோடை வெயிலைப் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் நாள்தோறும் நாலைந்து தொகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

மூவருமே கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், மற்றொரு முக்கிய கட்சியான தவெக தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டுகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கும் விவகாரம், தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.

ஆனால், பிரச்சாரத்துக்கு அனுமதி உள்ளிட்ட எல்லா அதிகாரங்களும் இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

விஜய் பிரச்சாரத்துக்கு தாராளமாக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அவர் அதனை பயன்படுத்திக்கொள்ளாதது தவெக கட்சித் தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 11 ஆம் தேதி விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார். தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

ஆனால், அவர் பிரச்சாரத்தை திடீரென ரத்து செய்து விட்டார். அன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா போட்டியிடும். விருத்தாச்சலம் தொகுதியில் வாக்கு சேகரிக்கவும் விஜய் திட்டம் வகுத்திருந்தார்.

விஜயை, தமிழகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்த படம் ‘செந்தூரப்பாண்டி’. விஜய், கதாநாயகனாக நடித்திருந்த அந்தப் படத்தில் விஜய்காந்துக்கும் பிரதான பாத்திரம்.

‘விஜய்காந்த்தான், விஜயை தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்தார்’ என்று எஸ்.ஏ.சந்திரசேகர் இன்றளவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நன்றிக் கடனுக்காக விஜய்காந்த், மனைவி போட்டியிடும் விருத்தாசலத்தில் பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காரைக்குடியில் பிரச்சாரம் செய்வதற்காக கடந்த 10 ஆம் தேதி விஜய் வந்து விட்டார். பகல் 12 மணி முதல் 2.30 வரை பிரச்சாரம் செய்ய அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஊர் எல்லையில் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்து நேரம் கடத்தி, பிரச்சார மைதானத்துக்கு விஜய் வந்தபோது நேரம் 2.30 ஐ கடந்திருந்தது.

எனவே பிரச்சாரம் செய்யாமல், கையை அசைத்து விட்டுச் சென்று விட்டார்.

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காண்கிறார்.

அன்று சிவகங்கையில் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தார்.அதனையும் ரத்து செய்தார்.

அந்தத் தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ், திமுக கூட்டணி வேட்பாளராக நிற்கிறார். விஜயுடன் இணைந்து படங்களில் நடித்தவர்.

‘கோடம்பாக்கம் பாசம்’ காரணமாகவே, சீமான், கருணாஸ் ஆகியோரை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல் விஜய் தவிர்த்து விட்டார்’ என அவர் மீது சொந்தக் கட்சிக்காரர்களே புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

குஷ்புவின் கணவரான அவரை எதிர்த்து விஜய் பிரச்சாரம் செய்வாரா? என தெரியவில்லை.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment