மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு இருந்தவரை அந்த மாநிலம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்த மம்தா பானர்ஜி, சிவப்புக் கோட்டையைத் தகர்த்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக அவர் முதலமைச்சராக இருந்து வருகிறார். 4–வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறார்.
அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.
பல முனைப்போட்டி நிலவுகிறது. ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சி 291 தொகுதிகளில் களம் காண்கிறது.
கூட்டணிக் கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாஜக 294 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
மார்க்சிஸ்ட் தலைமையில் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருங்கிணைந்து அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ் 294 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது.
ஐதராபாத்தை தளமாக கொண்டு செயல்படும் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆரம்பத்தில், ஆம் ஜனதா உன்னயன் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது.
இந்தக் கட்சியின் தலைவர் ஹுமாயூன் கபீர், திரிணாமூல் காங்கிரசில் இருந்தவர்.
‘அயோத்தி பாபர் மசூதி போல், மேற்கு வங்கத்தில் மசூதி கட்டுவேன்‘ என்று சொன்னதால், கபீரை கட்சியில் இருந்து நீக்கினார் மம்தா.
இதனால், புதுக்கட்சி தொடங்கிய கபீர், உடனடியாக ஓவைசியுடன் கூட்டு சேர்ந்தார்.
மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப கபீர், பாஜகவிடம் 200 கோடி ரூபாய் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இவருடன் கூட்டணியை முறித்துக்கொண்டார், ஒவைசி. இதனால் கபீர் கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.
பலமுனை போட்டி நிலவினாலும் திரிணாமூல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் நிஜமான போட்டி. அந்த மாநிலத்தில் பாஜக இப்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
அதன் தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மேற்கு வங்கத்தில் தீவிர பிரச்சாரம் செய்து மம்தா கோட்டையைத் தகர்க்க பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 30% முஸ்லிம்கள் உள்ளனர். 114 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். கடந்த மூன்று தேர்தல்களிலும் முஸ்லிம்கள், மம்தாவுக்கே வாக்களித்தனர்.
இந்த முறை தேர்தலில் களம் காணும் பல முஸ்லிம் கட்சிகள் அந்த சமூக, ஓட்டுகளைப் பிரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக தெம்பாக உள்ளது.
ஆனால், முஸ்லிம் வாக்குகள், தங்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என திரிணாமூல் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
மம்தா நான்காம் முறையாக வெல்வாரா?
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி வரை பொறுத்திருப்போம்.
– பாப்பாங்குளம் பாரதி.