செய்தி:
எங்களை ஆளாக்கிய தலைவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது?
- எடப்பாடி பழனிசாமி
கோவிந்த் கமெண்ட்:
தமிழக அரசியலைப் பொறுத்தவரை மூத்த அரசியல் தலைவர்களின் காலில் விழுந்து வணங்குவது ஒன்றும் புதியதல்ல.
திராவிடக் கட்சிகளில் குறிப்பாக பெரியார், தன்னுடைய காலில் யாரும் விழுவதை வெளிப்படையாகத் தடுத்திருக்கிறார்.
ஒரு சமயம் நடிகர் ஜெமினி கணேசன் பெரியாரைச் சந்தித்தபோது, அவர் காலைத் தொட்டு வணங்க முற்பட்டபோது, பெரியார் தோளைப் பிடித்து நிறுத்தி தடுத்த அனுபவத்தை வெளிப்படையாகவேச் சொல்லியிருக்கிறார் ஜெமினி.
ஆனால், மற்ற திராவிட இயக்கங்களில் காலில் விழுவதும் அரசியலின் ஒரு நடைமுறையாகவே மாறிவிட்டது என்பதையும் சொல்ல வேண்டும்.
திராவிட இயக்கத் தலைவர்கள் பலரின் காலில் அடுத்தக் கட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் விழுந்து வணங்குவது தொடர்ந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஜெயலலிதா ஆட்சியில், காலில் விழுவது கட்சியின் முக்கியமான விதிமுறைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது.
தங்கள் தலைவி வானத்தில் போனால் கூட, கீழே முதுகை வளைத்துக் கும்பிட்ட நிகழ்வுகளெல்லாம் மற்ற மாநில ஊடகங்களில் கேலிப்பொருளாக ஆகியிருக்கிறது.
ஆனாலும், தன்னை ஒரு பொறுப்பில் அமரவைத்த திருமதி.சசிகலாவின் காலில் விழுந்த நிகழ்வு, அதிமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல.
அந்தக் கட்சியைப் பொறுத்தவரை அது இயல்பானதும் கூட, அதைத்தான் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார். அதைத்தான் தற்போது நினைவூட்டமும் செய்திருக்கிறார்.
அதனால், குறிப்பிட்ட அந்தக் காட்சியை மட்டும் வேறுவிதமான அர்த்தங்களைப் புகுத்தி தொடர்ந்து விவாதப் பொருளாக ஆக்குவது என்பது ஆரோக்கியமான நடைமுறை என்று சொல்ல முடியாது.