சினிமா நட்சத்திரங்களைக் கண்டுகொள்ளாத கழகங்கள்!

பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் அரசியலில் இருந்தாலும் திரை உலகிலும் கோலோச்சினர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். இதனால் இவர்கள், தேர்தலில் போட்டியிட சினிமா நட்சத்திரங்களுக்கு ‘இட ஒதுக்கீடு‘ வழங்கினர்.

இந்தக் ‘கோட்டா’வைத் தொடங்கி வைத்த பெருமை அறிஞர் அண்ணாவைச் சேரும். 1962-ம் ஆண்டு தேனி தொகுதியில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ‘சீட்’ கொடுத்து ஜெயிக்க வைத்தார்.

இந்தியாவில் எம்.எல்.ஏ-வான முதல் நடிகர் என்ற சிறப்பு அவருக்குக் கிடைத்தது.

அதிமுகவைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். 1980-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டசபைத்  தொகுதியில் எஸ்.எஸ்.ஆருக்கு வாய்ப்பு கொடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

திமுகவின் தேர்தல் பிரச்சாரத் தளபதியாக இருந்த எம்.ஜி.ஆருக்கு 1967-ம் ஆண்டு பரங்கிமலை தொகுதியில் டிக்கெட் அளித்தார் அண்ணா.

அந்த நேரத்தில் சுடப்பட்டு இருந்ததால், தொகுதிக்குப் போகாமலேயே பெரும் வெற்றியை ஈட்டினார் எம்.ஜி.ஆர்.

கருணாநிதி ஒவ்வொரு தேர்தலிலும் திரை உலகத்தினருக்கு வாய்ப்பு அளிக்க தவறவில்லை.

ராம.நாராயணன், டி.ராஜேந்தர், வாகை சந்திரசேகர் ஆகியோர் கருணாநிதியால் சட்டமன்ற உறுப்பினரான திரைக் கலைஞர்கள்.

நெப்போலியனை மக்களவை உறுப்பினர் ஆக்கியதோடு மத்திய அமைச்சராகவும் மிளிர வைத்தார்.

1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., சட்டமன்றத் தேர்தலில் திருச்சி சவுந்தரராஜன், ஐசரி வேலன் ஆகியோரை நிறுத்தி வெற்றிபெற செய்ததோடு, இருவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு புதிய வரலாற்றை உருவாக்கினார்.

எம்.ஜி.ஆரின் சினிமா பயணத்திலும், அரசியல் பயணத்திலும் உறுதுணையாக இருந்தவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்கியதோடு, அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்.

அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அளித்தார் புரட்சித் தலைவர்.

ஜெயலலிதா அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்ததும், நடிகர் ராமராஜனை எம்.பி. ஆக்கினார். எஸ்.எஸ்.சந்திரனை  மாநிலங்களவை  உறுப்பினாராக்கினார்.

சைதைப்பேட்டை சட்டசபை இடைத்தேர்தலில் நடிகர் ராதாரவியை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.

திமுக சார்பில் நெல்லை எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போன நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் இணைந்து தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும்  பொறுப்பேற்ற பின்னர், திரை கலைஞர்களைக் கண்டு கொள்ளவில்லை.

கடந்த தேர்தலில் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இந்தத் தேர்தலிலும்  அவர்களைக் கொண்டு கொள்ளவில்லை. 

ஆனால், சில கட்சிகள் திரைப் பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள புதிய நீதிக்கட்சி, இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி-க்கு டிக்கெட் அளித்துள்ளது.

மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அவர் களம் காண்கிறார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க் குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் சீட் அளித்துள்ளது காங்கிரஸ்.

இவரது தந்தை ஜி.கே.மணி, அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.

உச்சமாக, தவெக எனும் பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், அந்தக் கட்சியின்  முதல்வர் வேட்பாளராக பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

  – பாப்பாங்குளம் பாரதி.

 
Comments (0)
Add Comment