என்ன தல? இந்த முறை அடி கொஞ்சம் பலமோ?

அமெரிக்கா ஈரானிடம் உதை வாங்குவது இதுதான் முதல்முறை என்று நினைத்து விடாதீர்கள். ஈரானிடம் வம்புக்குப்போய் அமெரிக்கா வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று ஏற்கெனவே உண்டு.

1979 ஜனவரி மாதம் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அயாதுல்லா கொமேனி ஆட்சியைப் பிடித்தார். மன்னர் ஷா, ஈரானை விட்டுத் தப்பியோடினார்.

இஸ்லாமியப் புரட்சியாளர்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றி அங்கிருந்த அமெரிக்க ஊழியர்களைச் சிறைபிடித்தார்கள்.

‘இந்த அமெரிக்க தூதரகம் உளவாளிகளின் குளவிக்கூடு. மன்னர் ஷாவை எங்களிடம் ஒப்படைத்து விட்டு இந்த 53 ஊழியர்களையும் கூட்டிப்போங்கள்’ என்றார்கள்.

அமெரிக்காவுக்கு கோபத்தில் முகம் சிவந்துவிட்டது.

ஈரானுக்குள் அதிரடியாகப் புகுந்து அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்க, அமெரிக்கா அதிர்வேட்டாக ஒரு திட்டம் தீட்டியது. அந்த ராணுவ நடவடிக்கைக்குச் சூட்டப்பட்ட பெயர் ’கழுகு நகம்’ (Eagle’s Claw)

‘உகாண்டா நாட்டுக்குக் கடத்தப்பட்ட பயணிகள் விமானத்தை சுண்டைக்காய் நாடு இஸ்ரேல் போய் மீட்டுவரும்போது, உலகப் பெரும் வல்லரசான நம்மால் இது முடியாதா?’ என அமெரிக்கா நினைத்தது.

இது என்ன பிரமாதம் என்ற நினைப்பில் அமெரிக்கா தயாரானது.

‘சார்லியின் ஏஞ்சல்கள்’ என்ற பெயரில் இதற்காக 90 பேர் கொண்ட அதிரடி சாகசப்படை உருவாக்கப்பட்டது. ஆறு சி-130 ராட்சத சரக்கு விமானங்கள் தயாராகின.

இந்த அதிரடிப்படை எகிப்துக்கும், அதன்பின்னர் பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு ரகசியத் தளத்துக்கும், இறுதியாக ஈரான் அருகே வளைகுடாவில் மிதந்து கொண்டிருந்த ஏவுகணை கப்பலான நிமிட்ஸுக்கும் இடம்பெயர்ந்தது.

அதன்பிறகு சி-130 விமானம், ஆர்.எச்.57 ஹெலிகாப்டர்களில் அவர்கள் ஏறிப்பறந்தார்கள்.

ஈரானின் கிழக்குப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத தெஸ்தே காவிர் பாலைவனத்தில் கும்மிருட்டில் அமெரிக்க விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தரையிறங்கத் தயாராயின.

சி-130 விமானம் ஓடுபாதை (ரன்வே) இல்லாத இடங்களில் இருட்டில் கூட தந்திரமாகத் தரையிறங்கக் கூடியது.

அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ., ஈரானில் சில கையாள்களை வைத்திருந்தது. அவர்கள் தெஸ்தே காவிர் பகுதிக்கு சில லாரிகளைக் கொண்டு வந்திருந்தார்கள்.

ஹெலிகாப்டர்கள் தரையிறங்கியதும் அமெரிக்க அதிரடிப்படை லாரிகளில் ஏறிக்கொள்ள வேண்டியது.

எல்பர்ஸ் மலையின் அடிவாரத்தில் உள்ள டெஹ்ரான் நகருக்கு விரைய வேண்டியது.

அமெரிக்கத் தூதரகத்துக்குள் அதிரடியாகப் புகுந்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டியது.

அவர்களை லாரிகளில் ஏற்றி தெஸ்தே காவிர் பகுதிக்கு கொண்டு வரவேண்டியது. சி-130 விமானத்திலும், ஹெலிகாப்டர்களிலும் அவர்களை ஏற்ற வேண்டியது. பிறகு ஜிவ்வென பறந்து விட வேண்டியது.

இதுதான் ஆபரேஷன் கழுகு நகத்தின் திட்டம்.

ஆனால், நடந்ததோ வேறு. அமெரிக்க ஆர்.எச்.57 ஹெலிகாப்டர்களில் ஒன்று தவறுதலாக சி-130 விமானத்தின் மீது மோத, அந்த விமானம் வெடித்துச் சிதறி 3 ஹெலிகாப்டர்கள் முடமாகி விட்டன. அமெரிக்க வீரர்கள் 8 பேர் பலியானார்கள்.

இது சரிப்படாது என்று அமெரிக்க அதிரடிப்படை மற்ற ஹெலிகாப்டர்களில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆபரேஷன் கழுகு நகம் படுதோல்வி அடைந்தது.

சரி. ஈரானில் பிணைக்கைதிகளாக இருந்த அமெரிக்க ஊழியர்கள் (53 பேர்) அதன்பின் என்ன ஆனார்கள் என்கிறீர்களா? சிறைபிடித்து 444 நாள்களுக்குப் பிறகு ஈரான் தானாகவே அவர்களை விடுவித்துவிட்டது.

ஆக, வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. விரும்பினால் நாம் கற்கலாம். அல்லது வரலாறு நமக்குக் கற்பித்துவிடும். சுபம்.

– மோகன ரூபன் முகநூல் பதிவு 

Comments (0)
Add Comment