தமிழகக் கட்சிகளுக்கே உரித்தான விசித்திரமா இது?
1967-களிலிருந்தே மாறுபட்ட கருத்தியல் கொண்ட கட்சிகளுடன் கூட கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஒரு காலத்தில் குலக்கல்வி கொண்டுவர முயற்சித்ததாக திமுகவால் குற்றம்சாட்டப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியோடு 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வைத்துக்கொண்டது.
பிறகு பாஜகவுடனும் தேசிய அளவில் திமுகவுடன் கூட்டணி அமைத்து அதனுடைய கூட்டணி அமைச்சரவையிலும் பங்கேற்றது.
இந்திப் போராட்டத்திற்கு மூலகாரணமாக அமைந்து, இலங்கை இனப்படுகொலை விஷயத்தில், பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டிய ஒரு நிலையும் திமுகவிற்கு உருவாகி, வெவ்வேறு சர்ச்சைகளுக்கிடையில், நீடித்துக் கொண்டிருக்கிறது கூட்டணி தர்மம்.
நேற்றைய பிளாஷ்பேக்கை நினைவுப்படுத்தினால் பல கட்சிகள் இன்றைக்குக் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாத நிலைமைதான் உருவாகும்.
ஆனால், அப்படிப்பட்ட பழைய ஞாபகங்களையெல்லாம் பொதுவாக பல கட்சிகள், நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பது எதார்த்தமாகிவிட்டாலும் அந்தந்தக் கட்சித் தொண்டர்கள் நேற்றைய நினைவுகளை கொஞ்சமாவது வைத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
மத்தியில் உள்ள ஆளுங்கட்சியிடம் அதிகாரிகள் குவிந்துவிடக் கூடாது. மாநில நலனுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற மாநில சுயாட்சிக் குரல் அண்ணா காலத்திலேயே எழுப்பப்பட்டுவிட்டது. அது குறித்த பதிவுகள் இன்றும் இருக்கின்றன.
அதேசமயம் ஒரு கட்டத்தில், தேசிய அளவில் அமையும் அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்பது என்ற முடிவுக்கு வந்து திமுக, அதிமுக என்கின்ற இரண்டு மாநிலக் கட்சிகளுமே மத்திய அரசின் வெவ்வேறு பொறுப்புகளை வகித்திருக்கின்றன.
இந்த நிலையில், மாநிலத்தில் தன்னுடன் கூட்டணியில் பங்கேற்க வரும் கட்சிகளுக்கு மட்டும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளை எழுப்பக்கூட முடியாத நிலை எதனால் இங்கு உருவாகியிருக்கிறது.
மத்தியில் உள்ள தேசிய அமைச்சரவையில் இங்குள்ள மாநில கட்சிகள் இடம்பெறலாம். ஆனால், மாநிலத்தில் அமையும் எந்த ஆட்சியிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு பங்களிக்க மறுப்பது என்ன விதமான கூட்டணி ஜனநாயகம்?
தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும், விசிகவும் பொதுவுடமைக்கட்சிகளும் கூட்டணி ஆட்சியல் பங்கு என்பது பற்றி பொதுவெளியில் பேசி, ஊடகங்களிலும் செய்தியாக்கி ஓய்ந்துபோய்விட்டன.
அதோடு கூட்டணிக் கட்சிகளை எந்தளவுக்கு மதிக்கின்றன இங்குள்ள பெரிய கட்சிகள்? எண்ணிக்கை விஷயத்தில், மிகவும் கண்டிப்பான முறையில், கிட்டத்தட்ட ஒரு பெரியண்ணன் மனோபாவத்தை இங்குள்ள கட்சிகள் வெளிப்படுத்தி, தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில், மிகவும் கராறான நிலையை கடைபிடித்ததால், கூட்டணிப் பற்றி பேசிவிட்டு வரும் கட்சித்தலைவர்கள் முகங்கள் வதங்கிப் போய் காணப்படுகின்றன.
இதையெல்லாம் விட இன்னொரு கூட்டணி கொடுமையும் இங்கு நடக்கிறது.
தன்னுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மற்றக் கட்சிகளை வற்புறுத்தி அழைத்து வருகிறவர்கள் தங்களுடைய கட்சிச் சின்னத்தில்தான் அவர்கள் போட்டியிட வேண்டும் என்பதையும் நிர்பந்திக்கிறார்கள்.
பெரும்பாலான சிறிய கட்சிகளால் அல்லது சிறு எண்ணிக்கையில் போட்டியிடும் கட்சிகளால், தங்களுடைய சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடியவில்லை.
அவர்கள் மற்றொரு பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தப்பட்டு, இப்படித்தான் கூட்டணி பேச்சுவார்த்தை இங்கு ‘சுமூகமாக’ நடந்து கொண்டிருக்கிறது.
ஒருகாலத்தில் தனித்துப் பெரிய அளவில் களம் கண்ட மதிமுக தற்போது போட்டியிடும் நான்கு தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் தன்னுடைய சுய அடையாளத்துடன் போட்டியிடுகின்றது.
இதேமாதிரியான நிலைதான் விசிகவுக்கும். முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக அடுத்தடுத்து அதே சின்னத்தை சட்டமன்றத் தேர்தலில் தக்கவைத்துக் கொண்டதால்தான் விசிக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்து அடுத்த நிலைக்குச் செல்ல முடிந்திருக்கிறது.
1990 சட்டமன்றத் தேர்தலின்போது, மூப்பனார் தலைமையில் துவங்கப்பட்டு பெரு வாரியான தொகுதிகளில் வெற்றியும் பெற்ற தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு தற்போதைய அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்ன மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது? என்பது இன்னொரு நடைமுறை உதாரணம்.
இதற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி தனக்கான அடையாளத்தை இழக்காமல் போட்டியிடுவது கட்டாயத் தேவையாக இருக்கிறது.
ஆனால், இத்தகைய தேவையை இழந்த நிலையில் தான், வேறொரு சின்னத்தில் போட்டியிட வைக்கிற ஒரு சூழல் அதிமுக, திமுக என்கிற இரண்டு கட்சிகளுமே கடைபிடிக்கின்றன.
இதே நிலையே நீடித்தால், எந்தக் கட்சி தங்களுக்கான தனித்துவமான அடையாளத்துடன் இங்கு வளரமுடியும்?
மக்களின் அங்கீகாரத்தையும் பெறமுடியும்?
கூட்டணி தர்மம் என்கின்ற சொற்றொடருக்குப் பின்னால், எத்தனை அவஸ்தைகள்.
– லியோ