பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது ஆட்சிக் காலங்களில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டதில்லை.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக, ஜெயலலிதாவின் கைக்குள் வந்தது. அவரை எதிர்த்து, அரசியல் செய்ய வேண்டிய சூழல், கருணாநிதிக்கு உருவானது.
அந்தக் கால கட்டத்தில்தான், இந்த இரு தலைவர்களும் இலவசங்களை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தனர்.
டி.வி., மிக்ஸி, மின்விசிறி, மாணவர்களுக்கு லேப்-டாப் ஆகிய இலவசங்களை வாரி இறைத்தனர். இருவருக்கும் அந்த இலவசங்கள் வாக்குகளை தேடித்தந்தன.
இவர்கள், பொருட்களைக் கொடுத்தார்களே தவிர, நேரடியாக பொதுமக்களுக்கு பணம் அளித்ததில்லை. பணம் வழங்கும் புதிய கலாச்சாரத்தை திமுகதான் கடந்த தேர்தலில் ஆரம்பித்து வைத்தது.
‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அளிப்போம்‘ என வாக்குறுதி அளித்தது.
பெண்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உதயசூரியனுக்கு கொத்துக் கொத்தாக வாக்களித்து, திமுகவை அரியணை ஏற்றினார்கள்.
வாக்குறுதியை திமுக மீறவில்லை. தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் 15-ம் தேதி அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் சீசன் என்பதால் பிப்ரவரி மாதம் ‘மூன்று மாதங்களுக்கான 3 ஆயிரம் ரூபாயை முன் கூட்டியே அளித்த தமிழக அரசு, கோடைக் கால செலவுகளுக்குக் கூடுதலாக ரூ.2 ஆயிரமும் வழங்கியது.
இந்தத் தேர்தலில் ‘மகளிர் உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்‘ என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஐடியாவை மற்ற கட்சிகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2,000 அளிப்போம்’ என வாக்குறுதி கொடுத்துள்ளது அதிமுக.
பாஜக, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என அறிவித்துள்ளது.
தவெகவும், ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 அளிப்போம்‘ என நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.
இது தவிர ஏராள இலவசங்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
• ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்.
•12-ம் வகுப்புவரை மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க மாணவர்களின் தாயாருக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
• 12-ம் வகுப்புக்குப் பிறகு பிஎச்டி வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கும் திட்டம்.
• ஒவ்வொருவருக்கும் வருடாந்திர உடல் பரிசோதனை, மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்.
• 29 வயதுக்கு மேல் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4000, பிளஸ்டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்.
• ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும்.
• மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
• 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என்பன தவெக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
– பாப்பாங்குளம் பாரதி