மார்ச் – 16 தேசிய தடுப்பூசி தினம்
நோயின்றி வாழ்தலே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. பலமான கட்டிடத்திற்கு நல்ல அடித்தளம் அமைப்பது எப்படி இன்றியமையாத ஒன்றோ, அதுபோல் வளமான வாழ்க்கைக்கு நல்ல உடல் நலத்தை பேணுதல் அவசியம்.
மருத்துவத்துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டபோதிலும் இன்றும் பல கொடிய நோய்களில் சிக்குண்டு தவிக்கிறது மனித குலம்.
பசி, சோர்வு, உறக்கம், உற்சாகம் என உடல் உணர்த்தும் வார்த்தைகளைப் புறக்கணிக்கும்போது அழையா விருந்தாளியாக அச்சுறுத்தும் நோய்கள் குடி கொள்கின்றன.
கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்கள், மரபணு மற்றும் சூழலியல் காரணங்களால் ஏற்படும் தொற்றா நோய்கள் என பல்வேறு வகைகள் இதில் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே, வருமுன் காப்போம் என்ற கொள்கையின்படி அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கை தான் ‘தேசிய தடுப்பூசி தினம்’.
நோய்த் தாக்குதலைத் தவிர்ப்பதும் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளைப் பெரிதும் பாதித்த போலியோ நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 1995, மார்ச் 16-ம் தேதி முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக அன்றைய தினமே தேசிய தடுப்பூசி தினமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பயனடைவதை உறுதி செய்ய “இரண்டு சொட்டு உயிர்நாடி” என்ற பிரச்சாரத்தின் கீழ் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கியதற்கு அடித்தளம் இட்டதும் இந்நாளே. இந்த வருடம் “அனைவருக்கும் நோய்த் தடுப்பு என்பது சாத்தியம்” என்ற கருப்பொருளுடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
போலியோ மட்டுமல்லாமல் தட்டம்மை, ஹெபடைடிஸ், டிப்தீரியா, நிமோனியா, கருப்பை மற்றும் மரபணு நோய்கள் போன்றவற்றிலிருந்து குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதுகாக்க தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இவை நோய் பரவலை தடுத்து சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.
பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பேரணிகள் வாயிலாக இதனை பற்றிய விழிப்புணர்வு இந்நாளில் ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், தடுப்பூசிகளை உரிய நேரத்தில் செலுத்துவது தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தடுப்பூசிகள், கேடயம் போல செயல்பட்டு பாதிப்புகளைக் குறைக்கின்றன. இது ஒரு பொது சுகாதார நடவடிக்கையும் ஆகும்.
ஆரோக்கியமான வலுவான இந்தியாவை உருவாக்க, தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்வோம்.
- எஸ்.வாணி