கண்கள் மீது கவனம் தேவை!

புலன்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கண்கள். இது ஒளியை உணர்ந்து நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை வண்ணம், வடிவம் மற்றும் ஆழத்துடன் காட்சிப்படுத்த உதவுகிறது.

கார்னியா, கருவிழி, கண்மணி மற்றும் விழித்திரை போன்ற பாகங்களைக் கொண்டு ஒளியியல் தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பார்வையை சாத்தியமாக்குகிறது.

இத்தகைய தனித்தன்மை வாய்ந்த உறுப்பில் பிரச்சினை ஏற்படாதவாறு பாதுகாத்தல் மிகவும் அவசியமாகும்.

நவீன உலகில் மின்னணு உபகரணங்களின் பயன்பாடு காரணமாக பெரும்பாலானோர் கண் கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே அதனைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது தான் நோயை வெல்வதற்கான முதற்படி.

கண் நலனில் குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமானது.

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பார்வை குறைபாடு உண்டாவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.

பிறந்த குழந்தைகள் பொதுவாக இரண்டு முதல் மூன்று மாதத்திற்குள் உருவங்களை உள்வாங்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

மேலும், அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக, கண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

‘கிட்டப் பார்வை’ அல்லது ‘தூரப் பார்வை’ இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கு கண்ணாடி அணியாமல் போனால் கண்களின் வளர்ச்சி முழுமை அடையாமல் போகும்.

மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மாறுகண் பிரச்சனைக்கு விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும். தாமதமானால் ஒரு கண்ணில் மட்டும் நிரந்தர பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

வளர்ந்த பிறகு இது டிரைவிங் லைசன்ஸ் தொடங்கி பல ஆவணங்களைப் பெறுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

மாறு கண்ணை அதிர்ஷ்டம் எனக் கூறும் மூடத்தனத்தை இந்த நூற்றாண்டிலும் சிலர் பின்பற்றுகின்றனர். இதனை ஆங்கிலத்தில் ‘lazy eye’ என்று அழைக்கின்றனர்.

ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையின் பார்வையை இயல்பு நிலையில் வைத்திருப்பது கடினம்.

மாறு கண்ணிலிருந்து வரும் மாறுபட்ட பிம்பத்தை மூளை சரிவர ஏற்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைப் போன்றே பெரியவர்களுக்கு உண்டாகும் பல கண் கோளாறுகளுக்கு முக்கிய காரணியாக விளங்கும் சர்க்கரை நோயை, கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கண் சிகிச்சை முறைகளை எளிதாக மேற்கொள்ள துணை புரியும்.

கணினி பயன்பாடு அதிகம் உள்ளதால் தொடர்ந்து அந்தத் திரையை பார்க்கும்போது கண் வறட்சி ஏற்பட்டு கண்கள் பாதிப்படையக் கூடும்.

ஆங்கிலத்தில் இதனை ‘Dry Eye Syndrome’ என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக நாம் கண்களை ஒரு நிமிடத்திற்கு 10 – 12 தடவை சிமிட்டுவோம். ஆனால் கணினி முன்னிருக்கும்போது 6 – 8 முறை என, அது குறையக் கூடும்.

இதனால், கண் மேற்பரப்பு வறண்டு போவது, சிவந்து போவது என பல பிரச்சனைகள் ஏற்படும்.

இத்தகைய பணியில் இருப்பவர்கள் அடிக்கடி கண் சிமிட்டுதல், கணினியின் ஒளி உமிழ்வை குறைத்துப் பயன்படுத்துதல், அரை மணி நேரத்திற்கு ஒருமுறை திரையிலிருந்து பார்வையை விலக்கி தூரத்தில் உள்ள பசுமையைப் பார்த்தல் ஆகியவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒரு முறை விழித்திரை பரிசோதனை செய்வது அவசியம்.

கண் சார்ந்த எந்தப் பிரச்சனைக்கும் மருத்துவரை அணுகாமல் சுய மருத்துவம் என்பதை செய்து கொள்ளவேக் கூடாது.

மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் கீரை வகைகளைத் தொடர்ந்து உட்கொள்வது, வேண்டிய அளவு கண்களுக்கு ஓய்வளிப்பது, பாதிப்புகளை விரைந்து கண்டறிவது, ஆகிய வாழ்வியல் மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் அனைவரும் கண் ஒளியைப் பேணி காக்க முடியும்.

– எஸ்.வாணி

Comments (0)
Add Comment