திமுகவின் அதிரடியான அறிவிப்பும்; ஏற்படுத்திய வியப்பும்!

ஆடி மாசம் வந்துவிட்டால் விசேஷ தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதைப் போலவே, தேர்தல் நெருங்க ஆரம்பித்திருப்பதன் முன்னோட்டமாக, திமுக அரசின் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மிக அண்மையில்தான் மாணவர்களைக் கவரும் நோக்கத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு தகுதியான ‘லேப்டாப்’புகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து தமிழக இடைக்கால பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளிவரும் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கிக் கொண்டிருந்த மகளிருக்கு திடீர் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறபடி 5,000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொன்னதுதான் தாமதம், உடனடியாக தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது தெரிந்ததும் வீட்டுக்கு வீடு ஒரே பூரிப்பு.

ஆக, இந்த அதிரடி அறிவிப்பை ‘சஸ்பென்சா’க வைத்திருந்து, தற்போது அறிவித்து உடனேயே நடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.

இதைவிட பெண்கள் இன்னும் வியக்கிறபடி அடுத்தும் திமுக ஆட்சியே தொடருமானால், மாதந்தோறும் 2000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்கின்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டு, தமிழகத்திலுள்ள மகளிரை திமுக பக்கம் ஈர்த்திருக்கிறார்.

இனி இடைக்கால பட்ஜெட்டில் எத்தகைய தேர்தல் முன்னோட்ட அறிவிப்புகள் வெளிவரும் என்றாலும், அதற்கு முன்பே இந்த அறிவிப்புகள் வந்து ஒரு உற்சாகச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

இனிமேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக சார்பில் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது.

வழக்கம் போல எதிர்க்கட்சிகள் தமிழக முதலமைச்சரின் அறிவிப்புகளை விமர்சித்தாலும், கடந்த பீகார் தேர்தலில் நிதீஷ்குமார் வெற்றி பெறுவதற்கு தேர்தல் நெருங்கும் முன்பு அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்ட 10,000 ரூபாய் பணம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது என்பதை பாஜககாரர்கள் மறந்துவிட முடியாது.

அவர்கள் காட்டிய வழியிலேயே இதுவரை பல கட்சிகள் தேர்தல் நேரத்தில் நடந்து கொண்டதைப்போலவே திமுகவும் தேர்தலுக்கான முன்னோட்ட வேலைகளை வேகமாக ஆரம்பித்திருக்கிறது.

இனி தேர்தல் பிரச்சாரத்தின்போது என்ன வாக்குறுதிகளைக் கொடுத்தாலும், இன்றைக்கு நம் கையில் என்ன கிடைத்திருக்கிறது என்பதற்குத்தான் பொதுவாக தமிழக வாக்காளர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.

பந்தயம்போல் நடக்கவிருக்கிற தேர்தலில் முன்னேறி இருக்கிறது திமுக என்று தான் சொல்ல வேண்டும்.

– லியோ

Comments (0)
Add Comment