ஜனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
2006 – ல ஈரோடு புத்தகத் திருவிழாவில என்னை வற்புறுத்தி என்னைப் பேச வெச்சாங்க. எனக்கு பெருசா பேச வராது.. நான் பேச்சாளன் இல்லைன்னு சொன்னாலும் கேட்காம பேரைப் போட்டுட்டாங்க.
என்னடா வம்பாப் போச்சேன்னு சில பாரதியார் பாட்டு, கண்ணதாசன் பாட்டு, சில சங்க இலக்கியப் பாட்டு எல்லாத்தையும் மனசுல வெச்சிருந்தேன்.
அதையெல்லாம் ஒண்ணா கோர்த்துப் பேசினேன். ஒன்றரை மணி நேரம்.. அங்க இருந்த ஐயாயிரம் பேரும் எழுந்துபோகாம கேட்டாங்க.
அட நம்மால கூட ஒரு கூட்டத்தைக் கட்டிப்போட முடியுமான்னு ஆச்சர்யத்தோட என்னையே நான் கேட்டுக்கிட்டேன்.
பள்ளிக்கூட வயசுல மனப்பாடம் பண்ண பராசக்தி, மனோகரா வசனம், கட்டபொம்மன் வசனம் போன்றவற்றையெல்லாம் வெச்சு அடுத்ததா ‘தமிழ் சினிமாவில் தமிழ்’ என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு பேசினேன்.
நல்ல கூட்டம் வந்தது. இந்த ஆளு பேசுறாண்டா என்ற அங்கீகாரம் கிடைச்சது.
2007-ல என் டைரியில் இருந்து முக்கியமான விஷயங்களை வெச்சு ஓர் உரை பேசினேன்.
அப்புறம் மகளிர் நல வேட்புநாள் என்ற விஷயம் வந்துச்சு. செப்டம்பர் 7 ஆம் தேதி என் மனைவி பிறந்த நாள் வந்தப்ப அந்த தினமும் வந்துச்சு மனைவியைக் கொண்டாடுவது பத்தி அந்த தினத்தில் திருப்பூர்ல பேசினேன். ஒண்ணேகால் மணி நேரம்.
இன்னிவரைக்கும் அந்த உரையை அடிச்சிகிற மாதிரி ஒண்ணை பேசலைன்னு நினைக்கிறேன்.
தூக்குக் கயிற்றை முத்தமிடப்போகிறவன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் எப்படிப் பேசுவானோ அதுபோன்ற பேச்சு அது.
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய பேசினாங்க. ஆனால் சூர்யா, கார்த்தி சினிமாவுல நடிக்கறாங்க.
ஆஸ்திரேலியாவுல டூயட், ஜப்பான்ல சண்டைக்காட்சி, காமெடி சீன் எல்லாம் படத்தில இருக்கு. அதை ஒளிபரப்பறது நியாயம். ஒரு மனுஷன் மைக் புடிச்சிட்டு ஒரு மணி நேரம் ஏதோ பேசறான்.
அதை எப்படிப்பா ஜனங்க பாப்பாங்கன்னு டெல்லியில் இருந்து டிவி நிர்வாகிங்க கேக்கறாங்க.
கடைசியில இந்த ஒரு தடவை ஒளிபரப்புவோம். சரியா வரலேன்னா யார் உரையையும் ஒளிபரப்ப வேண்டான்னு டிவியில முடிவெடுத்தாங்க.
2008 தீபாவளி அன்னிக்கு விஜய் டிவில ‘பெண்’ங்ற தலைப்பில் தாய் – மனைவி – மகளைப் பத்தி பேசினது ஒளிபரப்பாச்சு. பார்த்தவங்க அப்படியே எமோஷனல் ஆயிட்டாங்க.
2009-இல்தான் ராமாயணமும் 2015இல் மகாபாரதமும் 2022இல் திருக்குறளும் பேசினேன். காலம் என்னை பேச்சாளனாக மாற்றி இருக்கிறது.
மகாபாரதம் பேச்சுக்கு தயாரிக்க நாலரை ஆண்டுகள் ஆயின.
சோ சார் எழுதின 1450 பக்கம் புத்தகம் படிச்சு குறிப்பு எடுத்தேன். இளம்பிறை மணிமாறனின் 20 மணி நேர உரைகள், பி ஆர் சோப்ராவின் 70 மணி நேர பாரதத் தொடர் காணொலி.
இதெல்லாம் பார்த்து தயாரிச்சு, 2015 அக்டோபர் 26 ந்தேதி ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 6000 பேர் முன்னால ஒரு சொட்டு தண்ணி குடிக்காம ஒரு துண்டு பேப்பர் குறிப்பில்லாமல் மகாபாரதம் முழுக்கதையையும் 2 மணி 10 நிமிடத்தில் பேசி முடிச்சேன்.
என்ன பரவசமான தருணம் அது. அந்த உரையோட முடிவில் என் இரு மகன்களும் மேடைக்கு வந்தாங்க.
அவங்களைக் கட்டிப்புடிச்சு அழுதிட்டேன். அந்த நிமிடம் என்ன தோணுச்சுன்னா.. இதைவிட நல்ல தருணம் ஒரு மனிதனுக்கு சொர்க்கம் செல்ல கிடைக்காது என்று.. அந்த அளவுக்கு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருந்தன.
நன்றி: அந்திமழை