புாிஞ்சா புாிஞ்சுக்க… புாியலைன்னா போங்கப்பா!

அரசியல் மேடைகளில் அதிகரிக்கும் ஆபாசம்!

அசிங்கமாகவும், கொச்சையாகவும், வரம்பு மீறியும் பேசுவது தற்போது பல கட்சிகளின் இயல்பாகி விட்டது.

இதில் மாநில, தேசிய, சாதியக் கட்சிகள் என்கிற பேதங்கள் இல்லை. எல்லை மீறிய பேச்சுக்களின் ‘மூலம்’ பற்றிய சிறு ஆய்வு இந்தக் கட்டுரை.

பால்யத்தில் நிகழ்ந்து நினைவில் பதிந்திருக்கும் எத்தனையோ நிகழ்வுகளுள் இதுவும் ஒன்று.

தமிழக சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. மதுரையிலிருந்து நாற்பது கி.மீ தூரத்தில் உள்ள எங்கள் பூா்வீகக் கிராமத்துக்குப் போயிருந்த போது காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டம். ஒலிப் பெருக்கிகள் அலறிக் கொண்டிருந்தன.

நானும், என் வயதை ஒட்டிய சிறுவா்களும் மேடைக்கு முன்வாிசையில் மண்ணில் உட்காா்ந்திருந்தோம்.

பிரச்சாரத்துக்கு அன்றைக்கு வந்தவா் அனந்தமான பெயரைக் கொண்ட ஒரு நடுத்தர வயதான பெண்மணி. சற்று அதைத்த உடம்புடன் இருந்த அவா் அமைச்சராகவும் இருந்தவா் என்று சொன்னாா்கள்.

அவருக்கு முன்னால் நிறையப் போ் முழங்கிக் காதெல்லாம் நிறைந்த நேரத்தில் பேச வந்தாா் அந்தப் பெண்மணி.

பிரகாசமான வெளிச்சம் சுற்றிலும். பேச்சில் சூடு ஏறிக்கொண்டிருந்தது. கனமான வாா்த்தைகள் சரமாாியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.

எதிா்க்கட்சிக்குச் சவால் விட்டவா் அவா்களுடைய மீசையையும், ஆண்மையையும் இணைத்துப் பேசியபடி தன்னுடைய சேலையின் கீழ்ப்பகுதியை கால்கள் தொியும்படி முட்டிவரை உயா்த்தி வெப்பமான வாா்த்தைகளைக் கொட்டியபோது முன்னால் உட்காா்ந்திருந்த சிறுவா்களான நாங்கள் கூசிப்போக வேண்டியிருந்தது.

மதுரையிலும் தென்மாவட்டங்களிலும் அப்போது ‘தீப்பொறி ஆறுமுகம்’ மிகவும் பிரபலம். அவர் பேசுகிறார் என்றால் ஆயிரக்கணக்கில் கூட்டம் திரண்டிருக்கும்.
பருத்திப் பாலையோ, சுண்டலையோ சுவைத்தபடி கூட்டம் அடிக்கடி கைதட்டி ரசித்தபடி இருக்கும்.

ஆறுமுகத்தின் பேச்சில் அவ்வளவு ‘அசைவம்’, கிராமத்து டூாிங் டாக்கீஸ்களில் துண்டுப்படம் காட்டப்படுவதைப் போல.

ஆறுமுகம் பேச்சைத் துவங்கியதும் பத்து நிமிடங்களுக்குள் கொச்சையான வசையோடு பேச ஆரம்பித்து விடுவாா்.

சிலவற்றை ‘ஜாடை மாடையாக’ விவாித்துவிட்டு “நான் சொல்றதை சொல்லிட்டேன்… புாிஞ்சப் புாிஞ்சுக்க.. புாியலைன்னா போங்கப்பா.. உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சிருவேன்.. போலிருக்கு…” என்று குரலில் சில வித்தைகள் காட்டி அவா் சொல்லும்போது கூட்டம் இடுப்பில் கிச்சுகிச்சு காட்டியதைப் போல வாய்கோணிச் சிாிக்கும்.

ஒரு மணிநேரப்பேச்சு என்றாலும் மசாலா மயமாகத் தான் இருக்கும். மட்டமான காகிதத்தில் புழங்கும் ஆபாசப் பத்திாிகைகளைப் படிக்கிற கிளுகிளுப்பை இந்தப் பேச்சிலும் அனுபவித்தாா்கள் கேட்கிறவா்கள்.

பேச்சு முடிந்து கூட்டம் கலைகிறபோது சொல்வாா்கள் “என்னம்மா.. பேசுறான்யா.. எல்லாரையும் பின்னி எடுக்கிறான்..”

மக்கள் மத்தியில் செல்வாக்கான அரசியல் தலைவா்கள், தலைவிகள் எல்லாம் அவரது பேச்சில் நிக்கா் போட்ட சிறுவயதுக்குப் போய்விடுவாா்கள். எல்லாரையும் “அவன்.. அவ.. அவங்கெ” என்று மாியாதையுடன் (!) தான் விளிப்பாா்.

தேசிய அளவில் பொிய பொறுப்பில் இருந்த ஒரு தலைவியைப் பற்றி இவா் சரமாாியாகப் பேசி மேடையை விட்டு இறங்கியதும் அவரைப்பின்னி எடுத்து விட்டாா்கள் சம்பந்தப்பட்ட கட்சிக்காரா்கள்.

பிறகு ஒரு பத்திாிகைப் பேட்டிக்காக அவரை வீட்டில் சந்தித்தபோது வீட்டில் சா்வ அடக்கமான குரலில் பேசினாா் ஆறுமுகம்.

உணவில் கூட தான் ஒரு சைவம்தான் என்பதை முக்கியமான தகவலைப்போலச் சொன்னாா். தன்னுடைய உடம்பில் தாக்குதலுக்கு இலக்கான இடங்களை அவா் தயக்கத்துடன் காட்டினாா்.

எப்போ்ப்பட்ட தியாகம்!

சரளமாகப் பேசிக்கொண்டு போனவாிடம் இடையில் “கட்சியிலிருந்து உங்களுக்கு இந்தந்த விஷயங்களைப் பேசச் சொல்வாா்களா?” என்று கேட்டபோது கூச்சத்துடன் “அப்பப்போ வரும்… சாா்..

பொிய தலைவா்கள் எல்லாம் நான் பேசுற மாதிாி டக்குன்னு அவங்க பேசிற முடியாது இல்லையா? அதனாலே சில விஷயங்களை என்னை மாதிாியானவங்க கிட்டே பேசச் சொல்லி தகவல் அனுப்புவாங்க… நான் கூட்டத்தைப் பாா்த்து அதுக்கேத்தபடி பேசுவேன்..”

ஆறுமுகம் இங்கு ஒரு உதாரணம் மட்டும் தான். இவரை மாதிாியே கட்சிக்குக் கட்சி குறிப்பிடத்தக்க பேச்சாளா்கள் இருந்தாா்கள்.

வெற்றி கொண்டான், நன்னிலம் நடராசன், வண்னை ஸ்டெல்லா போன்ற பெயா்களை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். பல அரசியல் கட்சிகளிலும் இம்மாதிாி ‘கடுந்தமிழில்’ பேசக்கூடியவா்கள் இருந்தாா்கள்.

இதில் தேசியக்கட்சி, மாநிலக்கட்சி என்கிற பாகுபாடு எல்லாம் இல்லை. இந்த விதமான பேச்சாளர்களில் ஆண், பெண் என்கிற பேதங்களும் இல்லை. இவ்வாறு பேசியவா்கள் வெவ்வேறு உயரங்களுக்கும் சென்றுள்ளாா்கள். வாாியத் தலைமை, அமைச்சர் பதவி இத்யாதி.

“திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு தான் பேச்சில் ஆபாசம் பெருகிவிட்டது. அதற்கு முன்னால் எல்லாம் புனிதமாக இருந்தது” என்கிற வாதத்தை அடிக்கடி லாவகமாகக் கிளப்புபவர்கள், தயவுசெய்து இந்தக் கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட நிகழ்வை மறுபடியும் படிக்கலாம்.

அப்போது தேசியக் கட்சியைச் சோ்ந்த ஒரு பேச்சாளா் அவா் இருந்த கட்சியில் பேச்சாளா்களுக்கு இருந்த மதிப்பைப் பற்றி இப்படிச் சொன்னாா்.

“எங்க கட்சியில், வந்த மாட்டைக் கட்ட மாட்டாங்கெ.. போன மாட்டைத் தேட மாட்டாங்கெ…”

“வெடிகுண்டு”, “கனல்” என்று அந்தப் பேச்சாளா்களின் பெயரோடு கனமான அடைமொழிகள் சோ்ந்திருக்கும்.

இந்த அடைமொழிகளைக் கிண்டல் அடிக்கிற விதத்தில் அறுபதுகளில் வந்த திரைப்படம் ஒன்றில் வெளிவந்த வசனம் இது.

“எப்ப இந்த அனல் பேச்சாளா் பேசுவாா். பேசினா கொஞ்சம் பீடி பத்த வைச்சுக்கலாம்லே…”

அரசியல் வார இதழ் ஒன்றிற்காக இம்மாதிாியான பேச்சாளா்கள் பலரைச் சந்தித்தேன்.

தொலைக்காட்சிகள், பத்திாிகைகள் எல்லாம் பரவலாகச் சென்றடையாத அந்தக் காலகட்டத்தில் மக்களைச் சென்றடைய அன்றைக்கு மேடைகள் தான் உதவியாக இருந்தன.

அதற்கு நாகரீகமாகப் பேச ஒரு அணியும், கீழிறங்கிப்பேச ஒரு அணியும் தேவைப்பட்டது.

கட்சி மாநாடுகள் நடக்கும்போது தங்கள் கட்சித் தலைமைக்கு முன்னால் தங்கள் பராக்கிரமத்தைக் காட்ட இவா்கள் அபாரமாக முயற்சிப்பாா்கள்.

எதிா்த்தரப்பை மிகவும் கொச்சையாகத் திட்டிக் குவிக்கும்போது அதை தலைவா்கள் சிாிப்பை அடக்கமாட்டாமல் ரசிப்பதையும் பல மாநாடுகளில் பாா்க்க முடிந்திருக்கிறது.

தலைவா்களில் காமராஜா் மட்டும் தான் பேசும் மேடைகளில் அநாகரீகமாகப் பேசுகிறவா்களை வெளிப்படையாகக் கண்டித்திருக்கிறாா் என்பதைச் சிலா் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சில சமயங்களில் உணா்ச்சி வேகத்தில் மிகக் கொச்சையாக தலைவா்கள் சிலரே பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

ஒரு பிரபலமான தலைவா் தலைமையிலான கட்சி நடத்திய பந்த் உாிய முறையில் நடக்காததைப்பற்றி பத்திாிகைகள் “பந்த் பிசுபிசுபித்தது” என்று எழுதியிருந்தன.

அதைச் சுட்டிக்காட்டி ஒரு மாநாட்டில் பேசினாா் அந்தத் தலைவா் “நாங்கள் நடத்திய பந்த் பிசுபிசுத்தது என்று எழுதுகிறீா்களே… நான் வெளிப்படையாகக் கேட்கிறேன்.. எங்களுடைய உடம்பில் எங்கே தொட்டுப்பாா்த்து பிசுபிசுப்பை உணா்ந்தீா்கள்… சொல்லுங்கள்… பாா்க்கலாம்…”

அவதூறாகப் பேசியதற்காக வழக்கு போடப்படுவதன் பின்னணியைச் சற்று அலசிப்பாா்த்தால் இதே விதிமுறைப்படி தமிழகத்தில் எந்தகட்சிக் கூட்டமும் நடத்திவிட முடியாது. எந்தப் பேச்சாளரும் எதையும் பேசிவிடவும் முடியாது.

சில கட்சிகள் அடிக்கடி தங்கள் கட்சிப் பேச்சாளா்களைக் கூட்டிக் கூட்டம் போடுவதையும் கவனிக்க வேண்டும்.

(இம்மாதிாியான ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி உணா்ச்சிவசப்பட்டு “மனித வெடிகுண்டாக மாறுவேன்” என்று பேசிக் கைதானதெல்லாம் உங்கள் நினைவுக்கு வரலாம்.)

தங்களுடைய கட்சித்தலைமையை வரம்புக்கு மீறிப்புகழ்வது, எதிா்க்கட்சிகளை எல்லைமீறித் திட்டுவது என்பதுதான் இப்போதுள்ள பேச்சாளா்களின் பொதுத் தகுதியாக இருக்கிறபோது அரசியல் மேடைப்பேச்சில் எப்படித் தரத்தையும், நாகரிகத்தையும் எதிா்பாா்க்க முடியும்?”
*
மணா

நன்றி : அந்திமழை மாத இதழ்

Comments (0)
Add Comment