‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்… ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள்.
ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ… அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.
அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ் மொழியின்மீது தீராத காதல்கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து தமிழ்மொழிக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றியவர் மறைமலையடிகள்.
அதன் பயனாகத்தான் இன்று நமது தமிழ், செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது.
மறைமலை அடிகள் தன் மகளிடம் நடத்திய உரையாடல்!
‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’”
– என்கிற பாடலை மகள் நீலாம்பிகை பாட… தந்தை சாமி வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ‘‘நீலா… இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது.
‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு, ‘உடம்பாகிய யாக்கை’ என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் சாமி வேதாச்சலம்.
‘‘அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல… அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம்.
தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.
‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர்.
ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல… அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.
‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது… தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.