ஒற்றுமை ஓங்கினால் உலகத்தில் மகிழ்ச்சி!

டிசம்பர் – 20 : சர்வதேச மனித ஒற்றுமை தினம்

ஒரு கை உயர்த்தப்படுவதென்பது பல்வேறுவகைப்பட்ட அர்த்தத்தை வெளிப்படுத்தும். இருப்பு, மகிழ்ச்சி, ஆதரவு, எதிர்ப்பு, அடையாளம் என்று பலவிதமாக அதனைக் கையாளலாம்.

ஆனால், அது போன்ற பல கைகள் ஒன்றோடொன்று பிணைந்திருந்தால் அதற்கு ‘ஒற்றுமை’ என ஒரு அர்த்தம் தான் உண்டு.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது தமிழ் சொலவடைகளில் ஒன்று. அது ஒருவரது நினைவில் எந்தளவுக்குத் தங்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தே, அவரது சமூக வாழ்வு அமையும்.

தனிப்பட்ட அனுபவங்களால் சக மனிதர்களிடம் விலகுதலைக் கொண்டவர்களும் கூட, ‘ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் தாழ்ச்சி’ என்பதனை மறுக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

வீடு, தெரு, ஊர் தாண்டி ஒரு மாநிலமோ, நாடோ செழித்தோங்கவும் மனித ஒற்றுமையே அடிப்படை. இந்த பூமிப்பந்துக்கும் அது பொருந்தும்.

சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமையும் நல்லிணக்கமும் செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு ‘ஐக்கிய நாடுகள் சபை’ அமைக்கப்பட்டது.

அந்த சூத்திரத்தில் அமைந்த பலப்பல அமைப்புகள் உலகமெங்கும் ஆங்காங்கே கூட்டணி பலத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

அதனால், ‘ஐ.நா.’வின் இருப்பும் அடையாளமும் கூடக் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.

இப்படியொரு சூழலில், ‘சர்வதேச மனித ஒற்றுமை தினம்’ பற்றிய பகிர்தல் இன்னும் அவசியமாகிறது.

ஒற்றுமை கருத்தாக்கம்

ஐ.நா. அமைப்பு பிறப்பின் பின்னிருப்பது ‘ஒற்றுமை’ எனும் ஒற்றை வார்த்தை தான்.

உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமைதி, மனித உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.

அதன் மூலமாக உலகப் பாதுகாப்பை எட்டுவதே குறிக்கோள். 2002இல் ‘உலக ஒற்றுமை நிதி’ திரட்டுவதற்கான தீர்மானம் ஐ.நா.வில் முன்மொழியப்பட்டு, அதற்கடுத்த ஆண்டு அது செயல்படுத்தப்பட்டது.

பின்னர், 2005-ல் ‘சர்வதேச மனித ஒற்றுமை தினம்’ ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20-ம் தேதி கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி தொடர்ந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வறுமையை ஒழிப்பதும் வளர்ந்து வரும் நாடுகளில் ஏழ்மையிலுள்ள மக்களிடையே மனித, சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

முக்கியமாக, ‘வேற்றுமையில் ஒற்றுமை’யை இது கொண்டாடுகிறது.

‘நிலைத்த வளர்ச்சிக்கான ஒற்றுமை: எதிர்காலத்திற்காகச் சமூகங்களை ஒன்றிணைத்தல்’ என்பது இந்த ஆண்டுக்கான ‘சர்வதேச மனித ஒற்றுமை தினத்’தின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தேவை!

வறுமை என்பது அனைத்து வடிவிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே இன்றைய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. ’எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்று நினைப்பதுவே சமத்துவ உலகை நோக்கி அழைத்துச் செல்லும்.

இவற்றோடு மனித ஒழுக்கமும் சமூக நீதியும் மேம்படுத்தப்பட்ட சூழல் அமைந்தால் போதும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது மெல்லத் தானாக வசமாகும். மேற்சொன்ன அனைத்தும் கனவாக இருப்பதுதான் ஒரே குறை.

இன்றைய சூழலில் பிரச்சினைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பது வழக்கத்திற்கு மாறானதாகக் கருதப்படுகிறது.

ஒன்றிணைவு என்பது அதிசயமாக நோக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒரு அணியாகத் திரண்டு, ஒரே குரலில் முழங்குவதும் ஒருமுகத்தோடு செயல்படுவதும் கனவாக உருக்கொண்டுள்ளது.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஏழை நாடுகள் ஒன்று திரளவும், சமூகத்தில் சமத்துவத்தைச் செயல்படுத்தக் கைகோக்கவும் மனித ஒன்ற்றுமை அவசியம்.

இன்னும் வானிலை மாற்றத்தை எதிர்கொள்ள, அணுசக்தி அழிவைத் தடுக்க, மரபுசாரா எரிசக்தி வளர்ச்சியைப் பெருக்க, சுற்றுச்சூழல் சீர்குலைவில் இருந்து தற்காத்துக்கொள்ள எனப் பலப்பல பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்ட ‘ஒன்றிணைவே’ ஒரே வழியாகத் தென்படுகிறது.

சமூகத்தில் நலிந்த நிலையில் இருந்த சிலர், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்றிணைந்து உயர்வை எட்டியதற்குப் பல உதாரணங்கள் நம்மிடமே இருக்கும். உற்றுக் கவனித்தால் மட்டுமே அது புலனாகும்.

ஆனால், அதன் பின்னணியில் ‘அதிர்ஷ்டம்’ உட்பட ஏதேதோ இருப்பதாகச் சொல்லிப் பொய்ச்சமாதானம் கொள்வது பலரது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதிலிருந்து விடுபடுவது, அவர்கட்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பலன் தரும். உலக வரைபடத்தில் இருக்கிற நாடுகளும் இதில் அடக்கம் தான்.

மனித ஒற்றுமை என்பது பலவிதங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு வீட்டில் பாலின சமத்துவம், வறுமையில்லா வாழ்வு, பொருளாதார வளர்ச்சி, சூழலியல் அறிவு என்று பல விஷயங்கள் சாத்தியப்பட வேண்டும். அது சமூகத்தில் சீராக எதிரொலிக்கப்பட வேண்டும்.

அடுத்தடுத்த நிலைகளில் அந்த மனித ஒற்றுமை பரவி, இறுதியாக இந்த உலகை ‘ஒற்றைக் கோளமாக’ உணர வைக்கும். பல வேற்றுமைகளுக்கு நடுவே இது சாத்தியமாகியுள்ளது என்றும் உணர்த்தும்.

அந்த தருணத்தை நோக்கி அனைவரும் நகரவும், அதற்குண்டான விழிப்புணர்வை உருவாக்கவும் ‘சர்வதேச மனித ஒற்றுமை தினம்’ இந்த ஆண்டு செவ்வனே முன்னிறுத்தப்பட வேண்டும்.!

– சரோ

Comments (0)
Add Comment