அம்பேத்கர் முன்மொழிந்த பெளத்தம் எதை போதிக்கிறது?

நன்மாறன் திருநாவுக்கரசு

அம்பேத்கரின் அணுகுமுறையில் மதத்தின் மீமெய்யியல் (Metaphysics) முழுவதும் மறுதலிக்கப்பட்டு அதன் சமூகப் பண்பாட்டு தளமே முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்து மதம்/பெளத்தம் என்ற எதிர்வில் அறிவுக்குப் புலப்படாத பேருண்மை குறித்த தேடல் என்ற பழைய ஆன்மிகக் கற்பிதம் அடியோடு விட்டொழிக்கப்பட்டு சாதி, சமூக முரண்பாடுகள் குறித்த எதிர்வு என்ற விஷயம் வலுவாக நிறுவப்படுகிறது.

அம்பேத்கரின் பிராமணிய / இந்து மதம் குறித்த விமர்சனங்கள், மதத்தின், சமூக அரசியல் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.

நிலவுடைமைத் தத்துவங்களின் சிந்தனைச் சட்டகத்தை உடைத்தெறிந்துவிட்டு வெளியேறும் முயற்சி இது. இந்திய ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை பிரச்சனை நோக்கிய நகர்வு இது.

இந்து மதம்/பெளத்தம் எனும் முரண்களை சமூக முரணாகவும், சமய முரணாகவும் கட்டமைப்பதின் மூலம் சாதி, சமூக முரண்கள் இந்தியச் சூழல்களில் வெறும் பொருளாதாரம் எனும் ஒற்றை தளத்தை மட்டுமின்றி, சமூகப் பண்பாட்டு தளம் முழுவதையும் பீடித்துள்ளது எனச் சுட்டி காட்டப்படுகிறது.

இறுதியாக, 20-ம் நூற்றாண்டில் பெளத்ததின் மீள் வருகை அடித்தள மக்களின் கருத்தியல் மீள் வருகையாக அமைகிறது. இது இந்து ஆன்மிகத்தைக் கட்டுடைத்து சமூக, பண்பாடு தளத்திற்கு கொண்டு வரும் செயலாகும்.

இங்கு இந்து மதம் தத்துவம், சமூகவியல், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், வரலாற்றுக் கொள்கை, மதம் என்ற ஆறு அணுகுமுறையில் விமர்சனங்களைச் சந்திருக்கிறது.

இத்தகைய பிரச்சனைகளைக் கொண்ட இந்து மதத்திற்கு மாற்றாக மனித விடுதலையை உறுதி செய்வதாக பெளத்தமே அம்பேத்கரால் முன்மொழியப்படுகிறது.

இத்தனை தெளிவான விவாதங்களை முன்னெடுத்த அம்பேத்கரை நாம் மீண்டும் இந்து பெரும்பான்மைக்கு எதிராக முன்னிலைப்படுத்துவதன்மூலம், அவரது சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்வதன்மூலம், இந்து மத அரசியலின் ஆதிக்கப் பிடியிலிருந்து அனைவரையும் விடுவிக்கமுடியும்.

Comments (0)
Add Comment