இன்று உலக தொலைக்காட்சி தினம் (21.11.2025). செல்போன்கள் என்னதான் ஆக்கிரமித்தாலும், அதையும் மீறி மக்களின் வாழ்க்கையில் இன்றிமையாத விஷயமாக தொலைக்காட்சிகள் இருக்கின்றன.
இன்று தொலைக்காட்சிகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா விட்டிலும் தொலைக்காட்சிகள் உள்ளன.
ஒருசில வீடுகளில் மக்களின் வசதியைப் பொறுத்து 2 அல்லது 3 தொலைக்காட்சிகள்கூட இருக்கின்றன.
நவம்பர் 21-ம் தேதிய உலகத் தொலைக்காட்சி தினமாக 1996-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அறிவித்தபோது, அது ஒரு ஆழமான உண்மையை அங்கீகரித்தது:
இருபதாம் நூற்றாண்டின் எந்த ஒரு கண்டுபிடிப்பும் தொலைக்காட்சியைப் போல் மனிதர்களின் உணர்வு, கலாச்சாரம், அரசியல் மற்றும் அன்றாட வாழ்க்கையை மாற்றவில்லை என்பதே அது.
மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட தொலைக்காட்சியைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1939-ம் ஆண்டில் நடந்த உலகக் கண்காட்சியில் முதல் முறையாக தொலைக்காட்சி (டிவி) மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
டெலிவிஷன் என்ற பெயரை தொலைக்காட்சிக்கு வைத்தவர் ரஷ்ய விஞ்ஞானியான கான்ஸ்டான்டின் பெர்ஸ்கி. அவர் 1900-ம் ஆண்டு தொலைக்காட்சிக்கு டெலிவிஷன் என்ற பெயரை வைத்தார்.
தொலைக்காட்சியை டிவி என்று சுருக்கமாக அழைக்கும் வழக்கம் 1942-ம் ஆண்டு உருவானது.
ஆரம்பத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்தன. 1954-ம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமாகின.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் விளம்பரம் புலோவா என்ற கைக்கடிகாரத்தின் விளம்பரமாகும். 1941-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி இது ஒளிபரப்பானது.
செனித் என்ற நிறுவனம் 1950-ம் ஆண்டில் முதன்முதலாக தொலைக்காட்சிக்கான ரிமோட் கண்ட்ரோலை உருவாக்கியது.
கேபிள் டிவியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் ஜான் வால்சன்.
1948-ம் ஆண்டில் அவர் இதைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவில் 1948-ம் ஆண்டில் அறிமுகம் ஆனாலும், இந்தியாவில் 1990-களில்தான் கேபிள் டிவி அறிமுகமானது.
இந்தியாவில் தூர்தர்ஷன் சேனல் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
முதலில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள 40 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்தது.
தூர்தர்ஷனில் 1976-ம் ஆண்டுமுதல் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன.
1982-ம் ஆண்டு நடந்த சுதந்திர தின விழாதான் இந்தியாவில் வண்ணத்தில் ஒளிபரப்பப்பட்ட முதல் நிகழ்ச்சியாகும்.
2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் மொத்தம் 197 மில்லியன் தொலைக்காட்சிகள் உள்ளன.
2020-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் 885 பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.
இங்கிலாந்தில் 2004-ம் ஆண்டில் அந்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகமாக தொலைக்காட்சி பெட்டிகள் இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.
– பி.எம். சுதிர்