அழுகின்ற ஆண்கள் பலவீனமானவர்களா?

சச்சின் சொன்ன அறிவுரை

மீள்பதிவு: 

சர்வதேச ஆண்கள் வாரத்தையொட்டி ஆண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

“ஆண்கள் அழுவதற்காக வெட்கப்பட வேண்டாம்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தில் சச்சின் டெண்டுல்கர் மேலும் கூறியிருப்பதாவது:

நீங்கள் விரைவில் கணவர்களாக, அப்பாக்களாக மாறப் போகிறவர்களாக இருப்பீர்கள்.

வழிகாட்டியாக, ஆசிரியர்களாக மற்றவர்களுக்கு ஒரு உதாரண புருஷராக இருக்கப் போகிறீர்கள்.

நீங்கள் தைரியமாகவும் வலுவாகவும் இருக்கப் போகிறீர்கள். ஒரு சில கட்டங்களில் நீங்கள் பயத்தையும், சந்தேகங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பெரும் இன்னல்களையும் அனுபவிக்க வேண்டி வரலாம். சந்தேகமின்றி ஒருசில விஷயங்களில் நீங்கள் தோல்வியைத் தழுவும் நிலையும் ஏற்படலாம்.

இதுபோன்ற சமயங்களில் கண்ணீர் விட்டு அழுது உங்கள் வருத்தங்களை வெளிப்படுத்தத் தோன்றும்.

ஆனால், இதுபோன்ற கட்டங்களில் உங்கள் கண்ணீரை கட்டுப்படுத்தி உறுதியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வீர்கள்.

பெரும்பாலும் ஆண்கள் இப்படித்தான் இருக்க முயற்சிப்பார்கள்.

ஏனென்றால் ஆண்கள் அழக்கூடாது. அப்படி அழும் ஆண்கள் பலவீனமானவர்கள் என்று சொல்லிச் சொல்லி நாம் வளர்க்கப்பட்டுள்ளோம்.

நானும் இதை நம்பியே வளர்ந்தேன். இந்தச் சூழ்நிலையில் ஆண்கள் அழக்கூடாது என்று நான் நினைத்தது தவறு என்பதை உணர்ந்ததாலேயே இன்று நான் இந்தக் கடித்தை எழுதுகிறேன்.

என் போராட்டங்களும், என் வலிகளும்தான் என்னை இன்று நானாக உருவாக்கி உள்ளது. என்னை ஒரு சிறந்த மனிதனாக வடிவமைத்து உள்ளது.

2013-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதியை நான் இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற நாள் அது.

நீண்ட நாட்களாக அதுபற்றி நான் நினைத்திருந்தாலும் அன்றைய நாளுக்காக என்னை நான் தயார்படுத்திக்கொள்ளவில்லை.

அன்றைய தினம் மைதானத்துக்குள் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் ஏதோ ஒரு சோகம் என்னை அழுத்தியது.

என் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருவதை நினைக்கும்போது, என் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொள்வதைப் போல உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் பல விஷயங்கள் என் தலையை அழுத்தின. என்னால் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதை கட்டுப்படுத்துவதற்காக நான் போராடவும் இல்லை. கண்ணீரால் என் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன்.

அந்த சமயத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் என் மனதில் அமைதி பரவியது.

நான் வலுப்பெற்றதைப் போல் உணர்ந்தேன். நான் பெற்ற எல்லாவற்றுக்கும் நன்றியுள்ளவனாக உணர்ந்தேன்.

நான் முழுமையான ஆணாக இருப்பதை உணர்ந்தேன். உங்கள் கண்ணீரை வெளிப்படுத்துவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டியதில்லை.

உங்களை வலிமைப்படுத்தும் ஒரு விஷயத்தை நீங்கள் எதற்காக மறைத்து வைக்க வேண்டும்? கண்ணீரை ஏன் மறைக்கவேண்டும்?

உங்கள் வலிகளையும், பாதிப்புகளையும் வெளிப்படுத்த நிறைய தைரியம் வேண்டும்.

அதே நேரத்தில் நீங்கள் முன்பு இருந்ததை விட வலிமையாகவும், சிறப்பாகவும் மாறுவேன் என்ற உறுதியை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று காலம் காலமாக சொல்லப்பட்ட கருத்துகளைக் கடந்துசெல்ல உங்களை ஊக்குவிக்கிறேன்.

நீங்கள் யாராக இருந்தாலும், எங்கு இருந்தாலும், இந்த தைரியத்தை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

– பிரணதி

Comments (0)
Add Comment