தலைக்கனத்தால் தவிடுபொடியான மெகா கூட்டணி!

சாதித்த சிராக், சறுக்கிய பிரசாந்த் கிஷோர்

பீகார் சட்டசபைத் தேர்தல், தேசிய அரசியலில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒரே அணியில் இணையலாம் என அரசியல் நோக்கர்கள் கணித்தனர்.

அந்த மாநிலத்தில் நிதிஷ்குமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, முதலமைச்சர் நாற்காலியில் ‘ஹாயாக’ அமர்ந்திருக்கிறார். அவருக்கு பீகாரில் ஓரளவு செல்வாக்கு உண்டு.

எனினும், தனித்து நின்று வெல்லும் அளவுக்கு நிதிஷுக்கு ஆதரவு கிடையாது.

இந்த 20 ஆண்டுகளிலும் அவர் ஆர்.ஜே.டி. அல்லது பாஜக கட்சிகளின் தோளில் பயணம் செய்தே, கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் கதையை அளந்தால், அது அனுமார் வால் போல் நீளும். நடந்து முடிந்த தேர்தலை பற்றி மட்டும் அலசலாம்.

பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைப் பெற்றுள்ளது.

இந்த அணியில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் பிரதானமானவை.

எதிர்க்கட்சிகள் கட்டமைத்த மெகா கூட்டணியில் ஆர்.ஜே.டி. – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கியமானவை.

ஆர்ஜேடியின் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி 35 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது.

ஏனிந்த தோல்வி?

பீகாரை பொறுத்தவரை தனித்து நின்று வெல்ல, எந்தக் கட்சிக்கும் திராணி கிடையாது.

இதை உணர்ந்து கொண்டதால்தான், பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தொகுதி பங்கீடு விஷயத்தில் சமரசம் செய்து கொண்டன. கூட்டணிக் கட்சிகளுக்கு, அவர்கள் கேட்ட, இடங்களை விட்டுக்கொடுத்தன.

ஆனால் மெகா கூட்டணியில், தலைவர்களிடையே ஆரம்பம் முதலே ‘ஈகோ’ நிலவியது. ஆம். தலைக்கனம்.

தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தி தயக்கம் காட்டினார். டெல்லிக்கு சென்ற தேஜஸ்வியை சந்திக்கவே ராகுல் மறுத்து விட்டார்.

இது முதல் கோணல். வேறு வழி இல்லாமல் கடைசி நேரத்தில் அரைமனதோடு, தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க ஒப்புக்கொண்டார் ராகுல்.

இரண்டாவது கோணல். வலிய வந்த அசாதுதீன் ஓவைசியை, தேஜஸ்வி, கண்டு கொள்ளாதது.

கடந்த தேர்தலில் ஓவைசின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தனித்து நின்று 5 தொகுதிகளை வென்றது.

மெகா கூட்டணியில், தன் கட்சிக்கு வெறும் 6 இடங்களைக் கேட்டார் ஓவைசி. முடியாது என்று சொல்லி விட்டார் தேஜஸ்வி.

இந்தத் தேர்தலிம் ஒவைசியின் கட்சி தனித்து நின்று 5 தொகுதிகளில் வென்று விட்டது. பீகார் மாநிலத்தில் முஸ்லிம்கள் 20 சதவீதம் உள்ளனர்.

ஓவைசியை புறக்கணித்ததன் மூலம் முஸ்லிம் வாக்குகள் சிதறி, பாஜக கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

சாதித்த சிராக்: தேறாத தேர்தல் நிபுணர் :

மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி, பாஜக கூட்டணியில் இருந்தது. அவரது கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அவரது கட்சி 19 தொகுதிகளில் வாகை சூடி, அந்த மாநிலத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

சிராக் பஸ்வானுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

பிரதமர் மோடி முதல் பீஹாரின் நிதிஷ்குமார் வரைக்கும் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் நெருக்கத்தில் அவர் ஜன் சுராஜ் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தார்.

மாநிலம் முழுவதும் சுற்றி வந்தார். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டனர். புளகாங்கிதம் அடைந்த பிரசாந்த் ‘150 தொகுதிகளில் வெல்வோம்‘ என முழங்கினார்.

238 இடங்களில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்டது. ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை.

அதனைவிட சோகம், என்ன வென்றால் 236 தொகுதிகளில் அந்தக் கட்சி டெபாசிட்டை பறிகொடுத்தது. இரு இடங்களில் மட்டுமே அவரது கட்சிக்கு காப்புத்தொகை கிடைத்தது.

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

பலிக்கக்கூடும். இனிவரும் நாட்களில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment