அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆளுநர் உரை:
“ஆளுநர் ஆற்றிய உரையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தவெக அரசின் முதல் ஆளுநர் உரையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இடம்பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற அம்சங்களே ஆளுநர் உரையிலும் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்பதையே இது காட்டுகிறது. இதற்காகத்தான் அவர்கள் வெள்ளை அறிக்கையை வெளியிட்டதாக நான் கருதுகிறேன்.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
சிங்கப்பெண் சிறப்புப் படையின் பாதுகாப்பிற்கே மற்றொரு படை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மகனின் அரசியல் வருகை:
எனது மகன் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
என்னுடைய மகன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை.
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம்.
எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
– வைஷ்ணவி பாலு