பீகாரில் தேஜஸ்வி முதலமைச்சர் ஆவாரா?

அனல் பறக்கும் தேர்தல் களம்!

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகிய தேசிய தலைவர்கள் முகாம் அமைத்து சில தினங்களாக பிரச்சாரம் செய்வதே அதற்கு சாட்சி.

அந்த மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இரண்டு கட்டத் தேர்தல். முதல் கட்டத் தேர்தல் நாளை (6-ம் தேதி) நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக 11-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்படுகிறது.

பீகாரில் பலமுனைப் போட்டி இருந்தாலும், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் – ஆர்.ஜே.டி தலைமையிலான இந்தியாக் கூட்டணிக்கும் இடையே தான் நிஜமான போட்டி.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் ‘சும்மா ஒரு பேருக்கு‘ களத்தில் குதித்துள்ளன.

பீகார் தேர்தலைப் பொறுத்தவரை ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் ஹீரோ. அவரை மையம் கொண்டே அங்கு எல்லா கட்சிகளும் பிரச்சாரம் செய்கின்றன.

இரண்டு காரணங்கள்.

ஒன்று, தேஜஸ்விக்கு பீகாரில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. தந்தை லாலு பிரசாத் கொடுத்த சொத்து அது.

இரண்டாவது, தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, இந்தியாக் கூட்டணி களத்தில் சுழல்கிறது. பாஜக கூட்டணியில், யாரும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

கடந்த சட்டசபைத் தேர்தலில் 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆர்.ஜே.டி. உருவெடுத்தது.

அதற்கு அடுத்தபடியாக பாஜக 74 இடங்களில் வென்றது. அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது.

எனினும் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை, மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக. இந்த முறை அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம் என பாஜக திட்டவட்டமாக கூறிவிட்டது.

பாஜகவுடன் கொஞ்ச நாட்கள், ஆர்.ஜே.டி.யுடன் கொஞ்ச நாட்கள் என அந்த இரு கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து தொடர்ச்சியாக இருபது ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார் நிதிஷ்குமார்.

பழைய மக்கள் செல்வாக்கு அவருக்கு இல்லை. வயதும் முதிர்ந்துவிட்டது.

‘இந்த முறை நிதிஷ் கட்சிக்கு 25 இடங்கள் மட்டுமே கிடைக்கும்‘ என பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

அண்மையில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இரு பிரதான அணிகளும் சம நிலையில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தேஜஸ்வி முதலமைச்சர் ஆவாரா? என்பது 14-ம் தேதி மதியத்துக்குள் தெரியவரும்.

அதுவரை பொறுத்திருப்போம்.

– பாப்பாங்குளம் பாரதி.

 
Comments (0)
Add Comment