18 அடி நீளம், 10 டன் எடை, 7 காருக்கும் ஒரே நம்பர் பிளேட்!

அமெரிக்க அதிபர் காருக்கு மட்டும் ஏன் இத்தனை வசதிகள்

அமெரிக்க அதிபர் ஏறிப்போற அதிகாரபூர்வமான கார் பத்தி கேள்விப்பட்டிருக்கிறீங்களா?

அது லைமோசின் கெடிலாக் கார். காரோட விலை 1.47 மில்லியன் டாலர். எஃகு, அலுமினியம், டைட்டானியம், செராமிக் கலந்த எட்டு அங்குல கவசம் பதிச்ச கார் அது. குண்டு துளைக்காது. அது மட்டுமில்ல. வெளியே குண்டுவெடிச்சாலும் இந்த காரை அந்த குண்டுவெடிப்பு ஒண்ணும் செய்ய முடியாது.

அப்புறம் கார்க்கண்ணாடி. அது 5 படலம் கொண்ட 5 அங்குல தடிமன். பாயிண்ட் 44 மேக்னம் தோட்டாவால் கூட இந்த கண்ணாடியைத் துளைக்க முடியாது.

கெமிக்கல் அதாவது வேதியியல் ஆயுதங்களை வச்சு தாக்குதல் நடத்தினாலும்கூட இந்தக் கார் அசராம தாக்குப்பிடிச்சு நிற்கும்.

அப்புறம் இந்த காரோட வேகம் என்னன்னு கேட்பீங்க. வெறும் 15 நொடியில் மணிக்கு 60 மைல் வேகத்தை இந்தக் கார் எட்டிப்பிடிச்சிருமாம்.

ஒரு கேலன் பெட்ரோலுக்கு 4 மைல், 6.5 லிட்டர் எரிபொருள், மணிக்கு 60 மைல்.. இப்படி என்னவோ கணக்கு சொல்றாங்க. அது நமக்குப் புரியலை. அதனால மன்னிச்சு விட்டுறலாம்.

காரோட டயர் திடீர்னு பஞ்சர் ஆச்சுன்னு வைங்க. அப்படி ஆகாது. அப்படி ஆனாகூட அமெரிக்க அதிபரோட கார் பல மைல் தூரம் ஓடுமாம். (ஆனா வழக்கமான வேகம் இருக்காதாம்)

அடுத்ததா காருக்குள்ள என்னென்ன அயிட்டம் எல்லாம் இருக்குது பாருங்க. எதிரிங்க யாராவது அவங்க வாகனத்திலே அதிபரோட காரை விரட்டினா, எண்ணெய்யை கொட்டி எதிரி வாகனத்தை வழுக்கி விழ வைக்கிற செட்டப் இந்த கார்ல இருக்கு.

காரை எதிரிகள் மடக்கிப்பிடிச்சு கார்க் கதவைத் திறக்கப் பார்த்தா, கார் கைப்பிடியிலே 120 வோல்ட் மின்சாரத்தை செலுத்தி எதிரியை அதிர வைக்கலாமாம்.

அது மட்டுமில்ல, காருக்குள்ள ஒரு ஷாட்கன். கூடவே கையெறி குண்டுஏவி (கிரேனெட் லாஞ்சர்).

தவிர, காருக்கு வெளியே புகைத்திரை போட்டு தப்பிக்க வசதியா ஸ்மோக் ஸ்கிரீன் + கண்ணீர்புகை குண்டு.

கனமான கவசக்கார்ங்கிறதால வெளிச்சத்தம் எல்லாம் உள்ளே கேட்காது.

வெளியிலே ‘நீ எல்லாம் ஒரு அதிபரா?’ அப்படின்னு யாராவது திட்டி அதை கேட்கணும்னா காருக்கு வெளிப்புறத்திலே ஒரு மைக்ரோபோன் இருக்கும்.

அந்த மைக்ரோபோன் மூலமா காருக்குள்ளே இருக்கிற ஒரு சின்ன ஸ்பீக்கர் வழியா வெளிப்புறச் சத்தம், குரல் எல்லாத்தையும் கேட்கலாம்.

அப்புறம் இரவு நேரத்திலே கூட வெளியே பட்டப்பகல் மாதிரி காட்சிகளைப் பார்க்க நைட்விஷன் கேமரா வசதி கூட இந்த கார்ல உண்டு.

வெளியே நச்சுப்புகை எதுவும் பரவினா அல்லது காரைத் திறக்க முடியாதபடி ஒரு நிலைமை வந்துட்டா அதை சமாளிக்க காருக்குள்ளே தனியா ஆக்சிஜன் காற்று வசதி உண்டு. அதைப் பயன்படுத்தி மூச்சு முட்டாமல் தப்பிச்சுக்கலாம்.

சரி. அந்த கார்ல இன்னும் வேற என்னென்ன இருக்குமாம்? உள்ளே ஒரு சேட்டிலைட் போன் (செயற்கைக்கோள் தொலைபேசி), ஒரு கணினி, அப்புறம் காருக்குள்ள ஒரு சின்ன குளிர்ப்பதனப் பெட்டி.

அந்த பிரிட்ஜ்ஜுக்குள்ள பால், பழம், இருக்கும்னு நினைச்சிறாதீங்க. அதிபரோட அதே குரூப் ரத்தம் தயாரா இருக்கும். அதிபருக்கு திடீர்னு ஏதாவது ஆபத்து ஏற்பட்டா உடனடியா பயன்படுத்துறதுக்கு வசதியா இந்த ஏற்பாடாம்.

காரோட கதவு, போயிங் 757 விமான காக்பிட் கதவு மாதிரியே கனமான கதவு.

இந்த கார்ல 7 பேர் பயணம் செய்யலாம். காரோட நீளம் 18 அடி. எடை ஏறக்குறைய 10 டன். இதேமாதிரி மொத்தம் 7 கார்கள் இருக்காம். எல்லாத்துக்கும் ஒரே நம்பர் பிளேட்தான்.

கடைசி நேரத்திலே இந்த 7 கார்கள்ல எந்த கார்ல ஏறி அமெரிக்க அதிபர் போகப் போறார்னு அவருக்கே தெரியாதாம்.

அதிபருக்கே அது தெரியலைன்னா அவர் எந்த கார்ல ஏறி வர்றார்னு தீவிரவாதிகளுக்கு எப்பிடி தெரியும்?

இந்த அதிபர் காருக்கு பேர் ஏதாச்சும் இருக்கா? இருக்கே. ஸ்டேஜ் கோச், கேடிலாக் ஒன்.

இதெல்லாம் அந்த காரோட வேற பெயர்கள். அப்புறம் இன்னொரு பெயரும் இருக்கு. அந்த பெயரைக் கேட்டா அசந்துருவீங்க.

பீஸ்ட் (Beast). அதுதான் அந்த காரோட பெயர்.

பைபிள் நம்பிக்கைப்படி உலகத்தின் இறுதிக்காலத்திலே வரப்போற சைத்தானோட பேர்கள்ல ஒண்ணுதான் பீஸ்ட். எவ்வளவு ஷோக்கா பேர் வச்சிருக்காங்க பாருங்க.

– மோகன ரூபன்

Comments (0)
Add Comment