அந்தரத்தில் தொங்கும் ரயில் பெட்டிகள்!

சீன எல்லையில் நடக்கும் பொறியியல் அதிசயம்

இரயில் பயணம் என்றாலே ஜன்னலோரக் காட்சிகளும், தண்டவாளங்களின் தாள லயமும்தான் நம் நினைவுக்கு வரும்.

பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்கள் அதிகம் பயணம் செய்வதும், சார்ந்திருப்பதும், சொர்க்கமாக நினைக்கும் இரயில் பயணத்தைதான்.

ஆனால், பயணிகள் உள்ளே அமர்ந்திருக்கும்போதே, ஒட்டுமொத்த ரயில் பெட்டிகளும் ஹைட்ராலிக் இயந்திரங்களால் அந்தரத்தில் தூக்கப்பட்டு, அதன் சக்கரங்கள் மாற்றப்படும் அதிசயத்தை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

ரஷ்யாவிலிருந்து மங்கோலியா வழியாகச் சீனாவிற்குச் செல்லும் சர்வதேச ரயில் பயணத்தில், சீன எல்லையான எர்லியன் (Erlian) நகரில் இந்த வியப்பூட்டும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் நடைபெருகிறது.

உலக நாடுகளில் இரயில் தண்டவாளங்களின் அகலம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ரஷ்யா மற்றும் மங்கோலியாவில் 1520 மில்லிமீட்டர் கொண்ட அகலப்பாதையும், சீனாவில் 1435 மில்லிமீட்டர் கொண்ட தரமான பாதையும் (Standard Gauge) பயன்படுத்தப்படுகின்றன.

இந்த 85 மில்லி மீட்டர் அகல வேறுபாட்டின் காரணமாக, ரஷ்யா மற்றும் மங்கோலியாவிலிருந்து வரும் ரயில்கள் சீனத் தண்டவாளங்களில் நேரடியாக ஓட முடியாத சூழல் இருக்கிறது.

இதற்குத் தீர்வாக, பயணிகளை வேறு ரயிலுக்கு மாற்றாமல், அவர்கள் அமர்ந்திருக்கும் பெட்டிகளின் சக்கரங்களை மட்டும் மாற்றும் ‘போகி எக்ஸ்சேஞ்ச்’ (Bogie Exchange) என்ற நுட்பத்தைச் சீனா வெற்றிகரமாகச் செயல்படுத்துகிறது.

மங்கோலிய எல்லையைக் கடந்து சீனாவின் எர்லியன் நிலையத்திற்குள் ரயில் நுழைந்ததும், முதலில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் விசா சோதனைகள் முடிவடைகின்றன.

அதன்பின், ரயில் மிக மெதுவாக ஒரு பிரம்மாண்டமான மூடிய பணிமனைக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

அங்கே ரயில் இன்ஜின் கழற்றப்பட்டு, ஒவ்வொரு பெட்டிக்கும் இடையிலான இணைப்புகள் மற்றும் பிரேக் குழாய்கள் துண்டிக்கப்பட்டுத் தனித்தனியாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், பெட்டியின் அடிப்பாகத்தையும் சக்கரத் தொகுப்பையும் இணைக்கும் மைய ஆணிகளும் முழுமையாக அகற்றப்படுகின்றன.

இதைத் தொடர்ந்துதான் அந்தப் பொறியியல் அதிசயம் தொடங்குகிறது.

ஒவ்வொரு ரயில் பெட்டியின் நான்கு மூலைகளிலும் தரையோடு பொருத்தப்பட்டுள்ள சக்திவாய்ந்த ஹைட்ராலிக் ஜாக்கிகள் (Hydraulic Jacks) பெட்டியின் அடிப்பாகத்தைப் பிடித்துக்கொள்கின்றன.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொத்தானை அழுத்தியதும் உடனே, அனைத்துப் பெட்டிகளும் ஒரே நேரத்தில் மிக மென்மையாக சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்திற்கு அந்தரத்தில் குலுங்காமல் உயர்த்தப்படுகின்றன.

உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்குப் பெட்டி மேலே எழும்புவது ஒரு லிஃப்ட் போல மென்மையாக உணரப்படும்.

பெட்டிகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போதே, தண்டவாளத்தில் உள்ள கயிறு இழுவை இயந்திரங்கள் மூலம் பழைய அகலப்பாதைச் சக்கரத் அமைப்புகள் வரிசையாக முன்னோக்கி இழுத்து பின் வெளியேற்றப்படுகின்றன.

அதே தண்டவாளத்தில் பின்னாலிருந்து, சீனப் பாதைக்கு ஏற்ற புதிய சக்கர அமைப்புகள் கொண்டுவரப்பட்டு, அந்தரத்தில் நிற்கும் ஒவ்வொரு பெட்டிக்கு நேர் கீழேயும் துல்லியமாக நிறுத்தப்படுகின்றன.

பின்னர் ஜாக்கிகள் மெதுவாக இறக்கப்பட்டு, புதிய சக்கரங்களின் மீது பெட்டிகள் அமர்த்தப்படுகின்றன.

சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை இந்த வியத்தகு சக்கர மாற்றும் பணியானது மிகத் துல்லியமாக நடைபெறும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்தப் பணியின்போது பயணிகள் யாரும் ரயில் பெட்டியை விட்டுக் கீழே இறங்க அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும், இது பயணிகளுக்கு ஒரு சலிப்பூட்டும் காத்திருப்பாக இல்லாமல், வாழ்வில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பொறியியல் கண்காட்சியாக அமைகிறது.

பயணிகள் பெட்டிக்குள் சுதந்திரமாக நடமாடியபடியே, ஜன்னல் வழியாகத் தாங்கள் அமர்ந்திருக்கும் பெட்டி அந்தரத்தில் உயர்த்தப்படுவதையும், கீழே நடக்கும் பிரம்மாண்டப் பணிகளையும் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தப் பணி முடிவடைந்ததும், ரயில் பெட்டிகளுக்கும் புதிய சக்கர அமைப்பு இடையிலான அனைத்துப் பாதுகாப்புப் பூட்டுகளும், பிரேக் இணைப்புகளும் பொறியாளர்களால் பலமுறை தீவிரமாகச் சரிபார்க்கப்படுகின்றன.

எல்லாம் பாதுகாப்பாக இருப்பது உறுதிசசெய்யப்பட்டதும், சக்திவாய்ந்த சீன ரயில் இன்ஜின் பெட்டிகளுடன் இணைக்கப்படுகிறது.

அதன்பிறகு, ‘புதிய கால்களுடன்’ புதுப்பொலிவு பெறும் அந்த ரயில், சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரை நோக்கித் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்குகிறது.

துல்லியமான தொழில்நுட்பமும், நேர்த்தியான திட்டமிடலும் கைகோர்த்தால், நாடுகளின் எல்லைக் கோடுகளோ, தண்டவாள அகல வேறுபாடுகளோ மனிதப் பயணங்களுக்கும்,

நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் ஒருபோதும் தடையாக இருக்காது என்பதற்கு எர்லியன் (Erlian) ரயில் நிலையம் உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

– யாழினி

Comments (0)
Add Comment