கரூர் விபத்து: கூட்டணி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

தமிழக அரசியல் சூழ்நிலையை நன்றாக உணர்ந்தவர்கள் அவசியம் ஒன்றைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

தேர்தலுக்கு முன் நடக்கும் சில சம்பவங்கள் அந்தச் சூழலில் தேர்தலின் திசையையே மாற்றியிருக்கின்றன. முடிவையும் மாற்றியிருக்கின்றன.

ராஜீவ் கொலைச் சம்பவம் துவங்கி பல நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்ல முடியும்.

சில தலைவர்களின் கைதுகளும் கூட்டணி அரசியலை மாற்றியிருக்கின்றன. 

முக்கியமாக அதிமுக ஆட்சியில் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, அடுத்தடுத்து தமிழக அரசியலில் உருவான பதற்றங்கள் அதிமுக கூட்டணியிலிருந்த பல கட்சிகளை திமுகவை நோக்கி நகர வைத்து, அந்தக் கூட்டணியை வெற்றி பெறவும் வைத்தன.

அதைப் போலத்தான் தற்போது கரூரில் விஜய் பரப்புரை பயணத்தின்போது, 41 உயிர்கள் பலியான சம்பவம் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறது.

சம்பவம் நடந்த பிறகு, அதுவரை மீடியாவின் கவனத்தில் இருந்த விஜய் அதே மீடியாவினால், கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

பல கட்சிகள் விஜய்யைக் குறிபார்த்து, தாக்கிப் பேசின. குறிப்பாக சில அரசு அதிகாரிகளே களத்தில் இறங்கி ஊடகங்களுக்கு முன்னால் பேசுவதெல்லாம் நடந்தது.

முதலமைச்சர் துவங்கி மத்திய அமைச்சர்கள் வரை பலரும் கரூரை நோக்கி படையெடுத்தார்கள். நிவாரண நிதிகளை அடுத்தடுத்து அறிவித்தார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சம்பவம் நடந்த மறுநாளே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை துவங்கியது.

மதுரையிலுள்ள உயர்நீதிமன்றக் கிளையில், இதே சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நடந்து, சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தவெக சார்பில் உச்சநீதிமன்றத்திற்கு சிபிஐ விசாணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டு, இன்னொரு விசாரணைக் குழு புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. 

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்பா, இறுதித் தீர்ப்பா என்கின்ற விவாதங்களெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபடியும் மீடியாவின் கவனம் விஜய்யை நோக்கியே திரும்பியிருக்கிறது.

நீதி வெல்லும் என்கின்ற ஒற்றை வாக்கியத்தில், தன்னுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்.

அவர் சார்பில் பேசிய ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு முன்பு, கரூர் சம்பவம் குறித்து, பலத்தரப்பட்ட கேள்விகளை அதிரடியாக எழுப்பியிருக்கிறார்கள். 

தன்னுடைய பேட்டியின் குறுக்கே சில செய்தியாளர்கள் தலையிட்டதையும் கண்டித்து பேட்டியைத் தொடர்ந்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.

உச்சநீதிமன்றத்தின் தீரப்புக்குப் பிறகு, கரூரூக்கு விரைவில் விஜய் பயணப்பட இருப்பதாக, சில செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

அதுகுறித்த ஆலோசனையையும் விஜய் மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.

கரூர் நிகழ்வுக்கு முன்பு திமுகவைக் கடுமையாகவும், மிதமான தொனியில் பாஜகவையும், அதிமுகவையும் விமர்சித்து வந்த விஜய் கரூர் நிகழ்விற்கு பிறகு காணொலி வழியே பேசியபோது, அவருடைய பேச்சில் வழக்கமான பாணி இல்லை.

கரூர் சம்பவம் அவரை உணர்வுவயமான அளவில் பாதித்திருப்பதை அவருடைய பேச்சு வெளிப்படுத்தியது. 

தற்போதைய நிலையில், தவெகவின் முதல் இலக்காக திமுக மாறியிருக்கிறது. 

கரூர் சம்பவத்தையடுத்து விஜய்க்கு எதிராக உருவான நெருக்கடிகள், அவருடைய முந்தைய கூட்டணிப் பற்றிய கண்ணோட்டத்தைக் கூட மாற்றியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பாஜக தலைவர்கள் மட்டுமல்ல, அதிமுக தலைவர்களும் விஜய் பற்றி இதுவரை இல்லாத பரிவுடன் பேசுகிறார்கள்.

காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் நேரடியாக விஜய்யிடம் பேசியிருப்பது, அரசியலில் புதிய சந்தேகங்களை ஏற்படுத்த, அதற்கு விளக்கமளிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை.

அரசியலில் இந்த மாற்றங்கள் உருவானதையடுத்து, தொலைக்காட்சியில், குறிப்பாக கூட்டணி அரசியலை பொறிபறக்க விவாதிக்கும் அல்லது கூச்சலுடன் விவாதிக்கும் அரசியல் நிபுணர்கள் விஜய் எந்தக் கூட்டணிக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது?

அது எப்படியெல்லாம் திமுக கூட்டணிக்குப் பிரச்சனையை உருவாக்க வாய்ப்பிருக்கிறது?

இனி, எப்படிப்பட்ட பரப்புரையை மேற்கொள்வார் என்பது பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து சின்னத்திரையில் காயப்போடுகிறார்கள்.

அவர்களெல்லாம் விவாதிக்கிறபடியே விஜய்யின் தவெக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியின் பக்கம் நெருங்கும் பட்சத்தில், அந்தக் கூட்டணி தேர்தல் சூழலில் மேலும் வலுவடைய வாய்ப்பிருக்கிறது என்றாலும் பல கேள்விகள் எழுகின்றன.

  1. ஏற்கனவே அதிமுக-  பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தவெக ஏற்றுக் கொள்ளுமா? 
  2. விஜய்யும் பாஜகவும் அடிக்கடி வலியுறுத்திய ஆட்சியில் பங்கு என்பதைப் பற்றி எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுப்பார்? 
  3. திமுக ஆட்சியை அகற்றுவது என்கின்ற ஒற்றை நோக்கத்துடன் இந்தக் கூட்டணியில் அந்தக் கட்சிகள் அங்கம் வகித்தாலும், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதில், இந்தக் கூட்டணிக்குள் நெகிழ்வுத் தன்மை இருக்குமா? 

    விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவார்களா? அல்லது ஆதிக்கம் செலுத்த முனைவார்களா?

இப்படிச் சில கேள்விகள் எழுந்தாலும், இதில் விஜய்யின் முடிவு முக்கியமானது. அவரது பரப்புரை இனி எப்படி அமையும் என்பதை தவெக தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் நிச்சயம் கவனிப்பார்கள்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே தன்னை மறுபடியும் திடப்படுத்திக் கொண்டு மக்களிடம் தங்களுக்கு ஆதரவான ஒரு சூழலை உருவாக்கினால் மட்டுமே, தவெகவின் எதிர்காலம் பலப்படும்.

மிக சமீபத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்ற கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழக மக்கள் தந்த எதிர்வினை என்ன? என்பதை விஜய்யும் உணர்ந்திருப்பார் என்றே நம்பலாம்.

எது எப்படியோ நவம்பருக்குப் பிறகு பல அரசியல் மாற்றங்களும், இங்குள்ள ஊடகங்களுக்கு தினமும் புதுப்புது தீனிகளும் கிடைக்கப்போவது என்னவோ நிச்சயம்!

– யூகி

Comments (0)
Add Comment