உலக வரைபடம் (World Map) குறித்து நாம் பள்ளிகளிலேயே கற்று இருப்போம். தேர்வில் உலக நாடுகளை வரைபடத்தில் சரியாகக் குறிப்பதற்கு மதிப்பெண்கள்கூட உண்டு.
ஆனால், அந்த உலக வரைபடம் தவறானது என்ற வாதத்தை தற்போது முன்வைத்துள்ளது ஆப்ரிக்கா ஒன்றியம். காரணம், அதில் ஆப்ரிக்காவின் வரைபடம் சரியாகக் கணிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகிறது.
இதனால் உலக வரைபடத்தை சரிசெய்ய வேண்டி, அங்கே, ‘கரெக்ட் த மேப்’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை ஆப்ரிக்கா ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஒட்டுமொத்தமாக ஆதரித்துள்ளன.
உலக வரைபடத்தில் மிகவும் பிரபலமானது மெர்கேட்டர் புரொஜெக்ஷன் (Mercator Projection). சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மெர்கேட்டர் புரொஜெக்ஷன் வரைபடமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், உலகம் முழுவதும் உள்ள வரைபடங்கள் தயாரிப்பாளர்களிடையேயும் பிரபலமாக இருப்பது இந்த மெர்கேட்டர் வரைபடம்தான்.
பல்வேறு நாட்டு அரசுகளும், பள்ளிகளும், ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்த வரைபடத்தையே மே பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், இதில் உலகின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்ரிக்காவின் வரைபடம் துல்லியமாக இல்லை என்கிறது ஆப்ரிக்கா ஒன்றியம்.
உதாரணத்திற்கு மெர்கேட்டர் வரைபடத்தில் ஆப்ரிக்கா போல் அதே அளவிற்கு கிரீன்லாந்து வரைபடம் காட்டப்பட்டுள்ளது.
உண்மையில் கிரீன்லாந்தைவிட ஆப்ரிக்கா 14 மடங்கு அளவில் பெரியது எனச் சொல்லப்படுகிறது.
கிரீன்லாந்தின் உண்மையான பரப்பளவு, ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசின் பரப்பளவுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, இந்த மெட்கேட்டர் வரைபடத்தில் ஆப்ரிக்கா கண்டமும், தென் அமெரிக்க கண்டமும் அளவில் ஒன்றுபோல் தோற்றம் இருக்கிறது.
உண்மையில் தென் அமெரிக்காவைவிட ஒன்றரை மடங்கு பெரியது ஆப்ரிக்கா.
இதனால் உலக அளவில் ஆப்ரிக்கா சுருக்கப்படுகிறது என்றும், இதனால் தங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவதாகவும் வருத்தப்படுகிறது ஆப்ரிக்கா ஒன்றியம். இதனை மீட்டெடுக்கும் விதமாகவே, ‘கரெக்ட் த மேப்’ இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மெர்கேட்டர் புரொஜெக்ஷன் வரைபடம்:
கடந்த 1569ம் ஆண்டு ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட உலக வரைபடம்தான் மெர்கேட்டர் புரொஜெக்ஷன்.
பெல்ஜியத்தின் ஃபிளாண்டர்ஸை பூர்வீகமாகக் கொண்ட இவர் புவியியலாளராகவும் மற்றும் வரைபடவியலாளராகவும் திகழ்ந்தவர்.
இந்த மெர்கேட்டர் பூமி கோளத்தை, ஒரு தட்டையான தாளில் முடிந்தவரை துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்தும் தனித்துவமான வழியைக் கண்டுபிடித்தார்.
அப்படியாக அவர் கப்பலில் பயணிக்கும் மாலுமிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தார்.
அவர் உருவாக்கிய வரைபடம் நாடுகளின் கோணங்களையும், வடிவங்களையும் சிறப்பாக காட்டியது. அதேநேரம் சில அளவுகோல்களைச் சிதைத்தது.
குறிப்பாக துருவங்களுக்கு அருகில் உள்ள நிலப்பரப்பை பெரிதாகவும், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளவற்றை உண்மையில் இருப்பதைவிட சிறியதாகவும் காட்டியது. இதில் ஆப்ரிக்கா தன்னுடைய உண்மையான அளவை இழந்தது.
இந்த மெர்கேட்டர் புரொஜெக்ஷனுக்கு மாற்றாக 20ம் நூற்றாண்டில் பல்வேறு வரைபடங்களும் வந்தன. ஆனால் எல்லாவற்றிலும் குறைகள் இருந்தன.
இந்நிலையில் இதற்கு மாற்றாக தற்போது வந்துள்ள பூமியின் சமமான கணிப்பு (Equal Earth Projection) வரைபடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாதிடுகிறது ஆப்ரிக்கா ஒன்றியம்.
பூமியின் சமமான கணிப்பு வரைபடம்:
பூமியின் சமமான கணிப்பு வரைபடம் என்பது 2018ம் ஆண்டு அமெரிக்காவின் நேஷனல் பார்க் சர்வீஸைச் சேர்ந்த டாம் பேட்டர்சனும், அமெரிக்காவின் போஜன் சவ்ரிக்கும், ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ன்ஹார்டு ஜென்னியும் இணைந்து உருவாக்கியது.
இந்த வரைபடம் கண்டங்கள் மற்றும் நாடுகளின் அசல் அளவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பா, கிரீன்லாந்தைவிட ஆப்ரிக்காவை பெரிய அளவில் நிஜத்தில் இருப்பதைப் போலவே காட்டுகிறது.
இதனையே உலக வரைபடமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ‘கரெக்ட் த மேப்’ பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் உலகளாவிய புவிசார் தகவல் மேலாண்மை குறித்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிடம் பூமியின் சமமான கணிப்பு வரைபடத்தை ஏற்றுக் கொள்ளும்படி மனுவும் அளித்துள்ளனர்.
ஆனால், இது அவ்வளவு எளிதான காரியமல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் கூகுள் மேப், நேஷனல் ஜியோகிராபிக் உள்ளிட்டவை மெர்கேட்டர் புரொஜெக்ஷன் வரைபடத்தையே பயன்படுத்தி வருகின்றன.
இந்த வரைபடம் வகுப்பறைகளிலும், செய்திகளின் வரைபடங்களிலும், ஆப்ரிக்க ஒன்றிய இணையதளங்களிலும் வேரூன்றிவிட்டன. அதனை முற்றிலுமாக மாற்றுவது என்பது ரொம்ப பெரிய வேலை என்கின்றனர் அவர்கள்.
– கவின்