அதிக உடல் பருமன்; குட்டி நாட்டின் கண்ணீர்க் கதை!

அது ஒரு குட்டித் தீவு நாடு. மொத்தமே 12 ஆயிரம் மக்கள் தொகையே கொண்டது. ஆனால், அது உலகில் அதிக உடல் பருமன் உள்ளவர்களின் நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்படி அந்தத் தீவு நாட்டில் 70.2 சதவீதம் பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

அதாவது நூறு பேரில் 70 பேர் உடல் பருமன் உள்ளவர்கள். அதுமட்டுமில்லாமல் உலகில் அதிகம் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் பட்டியலிலும் இந்தத் தீவு நாடே முன்னணியில் இருக்கிறது.

இத்தனைக்கும் உலக வரைபடத்தில்கூட அந்தத் தீவு நாடு அவ்வளவு எளிதாகத் தெரியாது. கூகுள் மேப்பில் இதன்பெயர் குறிப்பிட்டால் மட்டுமே நம்மால் பெரியதாகப் பார்க்கமுடியும். அப்படியான ஒரு குட்டி தீவு நாடு, இவ்வளவு நோய்களின்பிடியில் சிக்குண்டு இருக்கிறது.

அந்தத் தீவு நாட்டின் பெயர் நவ்ரு. ஆஸ்திரேலியாவிற்கும், ஹவாய் தீவிற்கும் இடையில் ஓசியானியாவின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தனித்துவிடப்பட்ட தீவு இது. அதாவது இந்தத் தீவு நாட்டைச் சுற்றிலும் வேறு நாடுகள் கிடையாது.

சரி, ஏன் இப்படி உடல் பருமன், டைப் 2 நீரிழிவு அதிகம் கொண்டதாக இருக்கிறது? இதற்கு அதன் பின்புலத்தைப் பார்த்தால் புரியும்.

நவ்ரு தீவின் கதை!

ஒரு காலத்தில் இந்தத் தீவு, ‘Pleasant Island…’ என்றே அழைக்கப்பட்டது. ஏனெனில், இதனுள் அவ்வளவு வளங்கள் நிறைந்திருந்தன.

அத்துடன் உலகின் இரண்டாவது பணக்கார நாடாகவும் வலம் வந்தது. ஆனால், இன்று எல்லாமே முடிந்துவிட்டது.

1798ம் ஆண்டு முதன்முதலில் இந்தத் தீவினை பிரிட்டிஷ் திமிலங்க வேட்டைக் கப்பலான ‘ஹண்டர்’ கண்டறிந்தது. அப்போது தீவில் 12 குலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வசித்து வந்தனர்.

1826ம் ஆண்டு முதல் இந்தப் பழங்குடி மக்கள், திமிங்கல வேட்டை மற்றும் வர்த்தகக் கப்பல்களில் வரும் ஐரோப்பியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினர்.

கப்பல்கள் வரும்போது தீவிலிருந்த பன்றிகள், தேங்காய்கள் உள்ளிட்டவற்றை அவர்களிடமிருந்து கொடுத்துவிட்டு பதிலுக்கு மதுபானங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பண்டமாற்றாக பெற்றுக் கொண்டனர்.

இந்தக் காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் தண்டனை காலனிகளிலிருந்து கப்பல் வழியாக தப்பி வந்தவர்களும் இந்தத் தீவில் வசிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் 1870ம் ஆண்டு குடி, புகை, துப்பாக்கிப் பழக்கங்கள் அதிகரித்து உள்நாட்டு சண்டை ஏற்பட்டது.

இறுதியாக அமைதி மீட்டெடுக்கப்பட்டு பிரிட்டிஷ் பேரரசால் நவ்ரு தீவு, ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்பிறகு புவியிலாளர் ஆல்பர்ட் எல்லிஸ் என்பவர் சிட்னியில் உள்ள பசிபிக் தீவுகள் என்கிற வணிக நிறுவனத்தின் கதவில் இருந்த ஒரு பொருளை ஆய்வு செய்தார்.

இது நவ்ரு தீவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக அவரிடம் அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

அதனை அவர் ஆழமாக ஆய்வு செய்தபோது, அது உயர்தர பாஸ்பேட் தாது என்பதைக் கண்டறிந்தார். அது மிகச்சிறந்த உரம் என்பதையும் வணிக நிறுவனத்திடம் சொன்னார்.

பின்னர் 1901ல் நவ்ரு சென்ற எல்லிஸ் அந்தத் தீவு முழுவதும் பாஸ்பேட் தாதுவால் ஆனது என்பதைத் தெரிந்துகொண்டார்.

அந்த பசிபிக் தீவுகள் நிறுவனம் தனது பெயரை பசிபிக் பாஸ்பேட் நிறுவனம் என மாற்றியது. அத்துடன் ஜெர்மனியுடன் கூட்டுசேர்த்து நவ்ருவில் பாஸ்பேட் சுரங்கத்தை உருவாக்கியது.

அடுத்த பத்தாண்டுகளில் நவ்ரு நூற்றுக்கணக்கான டன்கள் பாஸ்பேட் ஏற்றுமதி செய்யும் இடமாக மாறியது.

ஆனால், பாஸ்பேட்டிற்காக இந்தப் பகுதி முழுவதும் அழிக்கப்பட்டது. முதல் உலகப் போர் நடந்த நேரத்தில் ஜெர்மனியிடம் இருந்து நவ்ரு தீவினை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

அங்கே ஆஸ்திரேலியா தனது சுரங்கத்தின் உள்கட்டமைப்பை பலப்படுத்தி, அதனை இயந்திரமயமாக்கி ஏற்றுமதியை அதிகரித்தது. 1920ல் ஆண்டுக்கு 2 லட்சம் டன் பாஸ்பேட் ஏற்றுமதியை நவ்ரு தீவு செய்தது. இது அடுத்த இருபது ஆண்டுகளில் நான்கு மடங்காக உயர்ந்தது.

பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது நவ்ரு மோசமாக சேதமடைந்தது. போர் முடிந்த பிறகு ஐநா சபை நவ்ருவை ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து நாடுகளின் ட்ரஸ்ட்களின் கீழ் கொண்டு வந்தது. ஆஸ்திரேலியாவே மீண்டும் தீவை நிர்வகித்தது.

மீண்டும் நவ்ருவில் பாஸ்பேட் வணிகம் புத்துயிர் பெற்றது. ஏற்றுமதி முன்பைவிட அதிகரித்தது. 1968ம் ஆண்டு ஐநா சபையின் ட்ரஸ்டி நாடுகளிடமிருந்து நவ்ரு சுதந்திரம் பெற்று தனி குடியரசு நாடாக ஆனது. ஆனால், இந்நேரம் மூன்றில் ஒரு பங்கு பாஸ்பேட் அதன் கரையை விட்டு வெளியேறியிருந்தது.

பின்னர் நவ்ரு குடியரசு அதன் மீதமுள்ள பாஸ்பேட்டைப் பணமாக்கத் திட்டமிட்டது. பாஸ்பேட் ஏற்றுமதியை அதிகரித்தது.

இதனால், 1975ல் நவ்ரு மக்கள் செல்வந்தர்களாக ஆனார்கள். உலகின் இரண்டாவது பணக்கார நாடாகவும் நவ்ரு மாறியது.

டாலர் நோட்டுகள் கழிப்பறை காகிதமாகக்கூடப் பயன்படுத்தப்பட்டன. அந்தளவுக்கு நவ்ரு மக்கள் செல்வ செழிப்புடன் இருந்தனர். ஆனால், பணத்தை முதலீடு செய்வது பற்றி யாரும் யோசிக்கவில்லை.

ஒருகட்டத்தில் பாஸ்பேட் தாதுக்கள் தீர்ந்துபோக நவ்ருவின் செல்வ செழிப்பு முடிவுக்கு வந்தது.

இதன்பிறகு சுரங்கம் தோண்டி ஆதாயம் அடைந்ததற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் இழப்பீடு கோரியது நவ்ரு. ஆனால், சொற்பமான பணமே கிடைத்தது.

இதற்கிடையே தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடியது.

சுற்றிலும் உள்ள கடல்நீரிலிருந்து நன்னீர் பெறும் திட்டத்தைத் தொடங்கியும் நவ்ருவால் பிரச்னையை சமாளிக்க முடியவில்லை.

ஒருபுறம் காலநிலையால் வறட்சியும், அதிக புயல்களும் நவ்ருவை தாக்கின. மறுபுறம் உடல் பருமன், சர்க்கரை நோய்கள் அதிகமுள்ள நாடாக மாறியது நவ்ரு.

ஏன் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய் வந்தன?

நவ்ருவில் 90 சதவீத நிலங்கள் பாஸ்பேட்டுக்காக சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டன. இதனால், விவசாயம் அங்கே முடியாத காரியமாகிவிட்டது.

சுதந்திரத்திற்கு முன்புவரை நவ்ரு மக்களின் உணவில் மீன்கள், பழங்கள், தேங்காய், வேர் காய்கறிகள் உள்ளிட்டவை இருந்தன.

மக்களும் துடிப்புடன் வேலைகள் செய்து உடலை பேணி வந்தனர்.

ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு நவ்ருகாரரும் பணக்காரராகிப் போனார். இதனால், உடல் உழைப்பு குறைந்தது.

அத்துடன் காலனியத்துவ வர்த்தகத் தொடர்புகள் மேற்கத்திய உணவுகளின் இறக்குமதிக்கு வழிவகுத்தன.

அப்படியாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை நவ்ரு மக்கள் சாப்பிட்டு வந்தனர். இது நாளடைவில் உடல் பருமனுக்கும், நீரிழிவு நோய்க்கும் வித்திட்டது. இறப்புகளும் அதிகரித்தன.

இதன்பின்னர் வளங்கள் அழிந்ததும் உணவுப்பொருட்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து தருவித்தன.

இதிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம். இதனால், உடல் பருமன் இயற்கையாகி போனது.

இந்த உடல் பருமன் சர்க்கரை நோய்க்கு வித்திட்டது. அத்துடன் இதயநோய்களுக்கும் வழிவகுத்தன.

இதற்கு உடல் பருமனுடன் மது அருந்துதலும், புகைப்பிடித்தலும் காரணங்களாக உள்ளன.

சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு நவ்ருவில் 40 சதவீதம் பேர் சர்க்கரை நோய் கொண்டுள்ளனர் என்கிறது.

இதனால், நவ்ரு சுகாதார அதிகாரிகள் மக்கள் அனைவரையும் விமான நிலையம் அமைந்துள்ள நான்கரை கிமீ சுற்றுப் பகுதியில் நடைபயிற்சி செய்ய வேண்டி அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இந்த உடல் பருமனால் விளைந்த ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. அது, நவ்ருவில் இருந்து பளுதூக்கும் போட்டிக்கு நிறைய பேர் செல்கின்றனர் என்பதே.

இந்நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போதைய சபாநாயகருமான மார்கஸ் ஸ்டீபன் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் 59 கிலோ, 60 கிலோ, 62 கிலோ ஆகியவற்றில் ஏழு முறை தங்கம் பதக்கமும், ஐந்துமுறை வெள்ளிப் பதக்கமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– கவின்

Comments (0)
Add Comment