ராஜஸ்தானில் ஓர் ஒட்டகப் புரட்சி!

ரைகா சமூகத்தை முன்னேற்றும் ஒட்டகப் பால்

ராஜஸ்தான் மாநிலம் சத்ரியில் ஒட்டகங்களை மேய்ப்பதில் பெயர்பெற்ற ரைகா சமூகத்தினர், ஒட்டகப் பாலின் வழியாக தன்னிறைவை அடைந்துள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் இல்ஸ் கோஹ்லர் ரோலெஃப்சன், ஹன்வந்த் சிங் ரத்தோர் ஆகியோர் தொடங்கிய கேமல் கரிஸ்மா என்ற சமூக நிறுவனம், ரைகா சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிறது.

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சத்ரி நகரத்திற்கு வந்தால் சிவப்பு வெள்ளை வண்ணங்களில் ஒளிரும் உடைகளும் தலைப்பாகையும் அணிந்த ஆண்களையும் பெண்களையும் பார்க்கலாம். ரைகா சமூகத்தினர் இப்படித்தான் இருப்பார்கள்.

இந்த மேய்ப்பர் சமூகம் பல நூற்றாண்டுகளாக ஒட்டகங்களை மேய்த்துவருகிறது. வண்ண உடைகள்தான் அவர்களை தனித்துவமாகக் காட்டுகிறது.

எப்போதும் அவர்கள் தனியாக பயணிக்க மாட்டார்கள். சில மீட்டர் இடைவெளிகளில் ஒட்டகங்களுடன் பெரிய மீசைகள், நீண்ட இமைகள், புதர் போன்ற புருவங்கள் கொண்ட நண்பர்களைக் காண்பார்கள்.

ராஜஸ்தானில் கம்பீர உயிரினங்களாக வாழும் ஒட்டகங்களுக்கு அறுவடைக்குப் பிறகு வயல்களில் எஞ்சியுள்ள முட்செடிகளை மேய்வதுதான் வாடிக்கை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டகங்களைக் கவனித்துவந்தார் ஜெர்மனியின் டாக்டர் இல்ஸ் கோஹ்லர். அதன் நடத்தைகளை ஆராய்ந்தார்.

ஒட்டகத்தின் ஊட்டச்சத்தில் பெரும்பகுதியை தரும் செடிகள், அவை உண்ணும் ஒரே தாவரங்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது உறுதியான ஆராய்ச்சியின் பலனாக தெரியவந்த உண்மை. “பாரம்பரிய அறிவின்படி, ஒட்டகங்கள் 36 வெவ்வேறு தாவரங்களை உண்கின்றன” என்கிறார் அவர்.

பசுமையான பன்முகத்தன்மை பால் உற்பத்தியையும் தரத்தையும் அதிகரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ரைகா சமூகத்தின் முதன்மையான தொழிலாக பால் உற்பத்தி இருக்கிறது. அதனால் உற்பத்தி செய்யும் பாலின் தரம் மிக முக்கியமானதாக உள்ளது.

சமீப காலங்களில் மட்டுமே பால்பண்ணை ரைகா சமூகத்தின் அத்தியாவசிய தொழிலாக உருவெடுத்துள்ளது.

நூற்றாண்டு காலமாக நவம்பரில் நடைபெறும் பல நாள் கால்நடை கண்காட்சியான புஷ்கர் மேளாவிற்குச் செல்லும்போது ஒட்டகங்களை அலங்கரித்து அழைத்துச் செல்கிறார்கள்.

இங்கே அவை லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றன.

இந்த நிகழ்வுகளுக்கு அடிக்கடி குடும்பத்தினருடன் சென்றுவரும் ரைகா சமூகத்தைச் சேர்ந்த கரண் ராம்,

“நாங்கள் மேளா மூலம் நிறைய சம்பாதிப்போம். உண்மையில், அந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆண்டு முழுவதும் சம்பாதிப்பதைவிட அதிகம் சம்பாதித்தோம்” என்கிறார்.

ஆனால், இந்தக் காட்சிகள் எல்லாம் 2014 ஆண்டு மாறியது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அரசு கவனத்தில் கொண்டது.

1998 – 2012 ஆண்டுகளுக்கு இடையில் எண்ணிக்கையில் 54 சதவீதம் சரிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநில விலங்காக ஒட்டகம் அறிவிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு புஷ்கர் மேளாவில் ஒட்டக வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரைகா சமூகத்தினர் பால் உற்பத்திக்குத் திரும்பினர்.

மேலும், அங்கு அமலான புதிய சட்டம் ஒட்டகங்களை வெட்டுதல், வர்த்தகம் செய்தலை தடை செய்தது.

இது ஒட்டகங்களுக்கு நல்ல செய்தியாக இருந்தபோதிலும், அது ரைகா சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதித்தது. புஷ்கர் மேளா வெறிச்சோடியது.

அன்று கவலையுடன் இருந்த கரண், இன்று தன்னிடம் 40 ஒட்டகங்கள் இருப்பதாகவும், தனது மந்தையை விரிவுபடுத்த விரும்புவதாகவும் பெருமையாகப் பேசுகிறார்.

ரைகா மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. காரணம் கேமல் கரிஸ்மா நிறுவனம்.

டாக்டர் இல்ஸ் கோஹ்லர் – ரோலெஃப்சன் மற்றும் ஹன்வந்த் சிங் ரத்தோர் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட இந்த சமூக நிறுவனம், ஒட்டகத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை உருவாக்குதல், ஊக்குவித்தல் மற்றும் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்துவந்த கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓர் உள்ளூர்வாசியுடன் எப்படி நட்பை வளர்த்துக்கொண்டார்.

இந்த நட்புதான் மாற்றத்திற்கான காரணம். பின்னாளில் இருவரும் தொழில்முனைவோராக உருவானார்கள். அதுதான் கேமல் கரிஸ்மாவின் வளர்ச்சி.

தன் பிஎச்டி ஆய்வுக்காக டாக்டர் இல்ஸ், ரைகா சமூகத்தைச் சந்தித்தார். அப்போதுதான் அவர் பாலி மாவட்டத்திற்குள் செல்லத் தொடங்கினார். அவரது டாக்ஸி ஓட்டுநர் – ஹன்வந்த் சிங் ரத்தோர் என்பவரை சந்தித்தார்.

ஒட்டகங்கள் வளர்க்கப்படும் பிராந்தியத்தின் வரலாற்றை ரத்தோர் அறிந்திருந்தார். உள்ளூர் பேச்சுவழக்கில் சரளமாகவும் இருந்தார். ஒரு சிறந்த கூட்டாளியாக மாறுவார் என்று இல்ஸ் நினைத்தார்.

“பால் உற்பத்தியின் தொழில்துறை மாதிரியை நாங்கள் பின்பற்றுவதில்லை. ஒட்டகங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இடம்பெயர வேண்டும் என்று சமூகம் நம்புகிறது.

வணிக பால் நிறுவனங்களுக்கு மாறாக, தாயையும் கன்றுகளையும் நாங்கள் பிரிக்கவில்லை” என்கிறார் டாக்டர் இல்ஸ்.

கேமல் கரிஸ்மா நிறுவனம் இன்று ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்திருந்தாலும், இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. சவால்கள் அதிகம் இருந்தன.

“ஒட்டகப் பாலுக்கான எங்கள் முதல் ஆர்டரை நான் நினைவில் வைத்திருக்கிறேன்” என்று டாக்டர் இல்ஸ் புன்னகைக்கிறார்.

இன்றைய நிலையில் கேமல் கரிஸ்மா ஒரு வீட்டுப் பெயராக மாறியுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் மாதந்தோறும் 3,000 லிட்டருக்கும் அதிகமான ஒட்டகப் பால் விற்பனையாகிறது.

ஒட்டகத் தயாரிப்புகளும் பாலும் உலகம் முழுவதும் செல்வதால், இப்போது ரைகா சமூகம் பொருளாதாரத்தில் மேம்பட்டு புன்னகை பூக்கிறது.

நன்றி: தி பெட்டர் இந்தியா

#RaikaTribe #RaikaHeritage #CamelCulture #RajasthanCamels #ஒட்டகங்கள் #ஒட்டகப்பால் #ரைககமக்கள் #DrIlseKohlerRollefson #IlseKohlerRollefson #HanwantSinghRathore #Rolefson #CamelMilk #DesertHeritage #SustainablePastoralism

Comments (0)
Add Comment