வடகொரிய அதிபர் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா?

ஒரு சில தலைவர்கள் தங்கள் பாதுகாப்பு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது வழக்கம்.

நம் நாட்டில்கூட முக்கியத் தலைவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, வை பிரிவு பாதுகாப்பு என ஏராளமான வகை பாதுகாப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் தனது பாதுகாப்பு விஷயத்தில் ஏக கராறாக இருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.

சீனாவில் கிம்மின் பயணத்தின்போது நடந்த சில விஷயங்கள் அவர் பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர்த்துவதாக இருந்தது.

பொதுவாக நாடுகளின் தலைவர்கள் விமானங்களில் பயணம் செய்வார்கள். ஆனால், கிம் ஜாங் உன், விமானங்களில் பயணிப்பதில்லை. விமான பயணங்கள் தனது பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்காது என்று அவர் கருதுவதே இதற்கு காரணம்.

விமானத்தில் பயணம் செய்யவேண்டியதைத் தவிப்பதற்காக பல நாடுகளுக்குச் செல்வதை அவர் தவிர்த்துள்ளார்.

தனக்காக தயாரிக்கப்பட்ட ரயிலில் பயணம் செய்வதையே அவர் விரும்புகிறார். அதனாலேயே ரயிலில் பயணம் செய்யக்கூடிய நாடுகளுக்கு மட்டுமே அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் இப்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டதுகூட ரயிலில்தான்.

வடகொரிய அதிபரின் பாதுகாப்புக்காக விசேஷமான பாதுகாப்புகளுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 21 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுக்க முழுக்க குண்டு துளைக்க முடியாத அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ராக்கெட் லாஞ்சரே வந்து தாக்கினாலும் ரயிலுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாத வகையில் இந்த ரயிலை உருவாக்கியுள்ளனர்.

ஒரு புறம் பாதுகாப்பு வசதிகள் உள்ள இந்த ரயிலில், மறுபுறம் சொகுசுப் பயணத்துக்கான எல்லாவித ஏற்பாடுகளும் உள்ளன. இதில் உணவு தயார் செய்வதற்கு என்று பல பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கு சீனா, வடகொரியா, கொரியா உள்ளிட்ட பல நாட்டு உணவுகளைத் தயார் செய்ய முடியும். அதற்கான அத்தனை மூலப் பொருட்களும் அந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன.

இதுபோக இந்த பயணத்தின்போது அதிபர் கிம் ஜாங் உடன் தனது சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த மீட்டிங் அறைகள் அவர் தங்குவதற்கு சொகுசான பெட்ரூம் மற்றும் அவர் குடும்பமே பயணித்தால் அவர்களுக்கு தேவையான விஷயங்கள் சொகுசான டாய்லெட் மற்றும் பிற அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன. இந்த ரயிலில்தான் சீனாவுக்கு சென்றுள்ளார் கிம்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிரான சீனாவின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வடகொரிய அதிபர், பின்னர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு நடந்த நிகழ்ச்சிதான் கொஞ்சம் புதிராக இருந்தது.

புதின் – கிம் சந்திப்பு முடிந்து இரு தலைவர்களும் கிளம்பிய பிறகு, கிம் அமர்ந்து இருந்த இருக்கை, அதன் கைப்பிடிகள், அவர் தொட்ட இடங்கள் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

அத்துடன் அவர் தன்ணீர் குடித்த டம்ளரையும் மிகுந்த பாதுகாப்போடு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதன்மூலம் அவர் அங்கு இருந்ததற்கான மொத்தத் தடயங்களையும் அழித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

வெளிநாட்டுப் பயணங்களின்போது தனது டிஎன்ஏவை யாராவது கைப்பற்றிவிடலாம் என்றும், அதனால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று அச்சப்படுகிறார் கிம்.

தனது வியர்வை, எச்சில், முடி ஆகியவற்றை வைத்து வெளிநாட்டவர்களுக்கு தனது டிஎன்ஏ கிடைத்துவிடக்கூடாது என்பதில் கிம் உறுதியாக இருந்திருக்கிறார்.

அதனால்தான் மற்றவர்களுக்கு அவரது டிஎன்ஏ கிடைக்காமல் இருப்பதற்காக அந்த இடத்தை வடகொரிய அதிகாரிகள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தியுள்ளனர்.

அவர் தண்ணீர் குடித்த டம்ளரையும் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தின் மூலம் பாதுகாப்பு விஷயத்தில் தான் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் கிம்.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment