சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான ஹாலிவுட் படம்!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பெயர், சேலம் மார்டன் தியேட்டர்ஸும் அதன் நிறுவனரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரமும்!

1937-ம் ஆண்டிலிருந்து, 70-களின் இறுதிவரை தொடர்ந்து படங்கள் தயாரித்த நிறுவனம் இது. மொத்தம் 98 படங்களைத் தயாரித்த அந்த நிறுவனம், சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கிறது.

இத்தனைத் தயாரிப்புகளில், இதன் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய படங்கள் மட்டுமே 56.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் சிங்கள மொழிகளில் படத்தைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில், அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கும் நடந்திருக்கிறது.

உள்ளே நுழைந்தால் முழுப் படத்தையும் தயாரித்துவிட்டு வருவதுபோல அப்போதே உருவாக்கப்பட்ட ஸ்டூடியோ மாடர்ன் தியேட்டர்ஸ்.

படப்பிடிப்புத் தளம் மட்டுமல்லாமல், லேப், ரெக்கார்டிங் ஸ்டூடியோ, படத்தைப் போட்டுப் பார்க்க தியேட்டர் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டிருந்தது மாடர்ன் தியேட்டர்ஸ்.

தமிழ் படங்களை இயக்கிய எல்லீஸ் ஆர்.டங்கன், அமெரிக்கா திரும்பியபோது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பற்றிச் சினிமாக்காரர்களிடம் சொல்லியிருக்கிறார்.

அவ்வளவு வசதியுடன் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படியொரு ஸ்டூடியோவா? என்று ஆச்சரியப்பட்ட ஹாலிவுட் சினிமாக்காரர்கள், இங்கு வந்து படம் எடுத்தார்கள்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் செட் போட்டு எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்த அந்த ஹாலிவுட்காரர்கள், பின்னர் அவுட்டோர் படப்பிடிப்பை ஒகேனக்கல், ஏற்காடு, மைசூரு ஆகிய இடங்களில் படமாக்கினார்கள்.

இந்தப் படத்தை ஹாலிவுட் இயக்குநருடன் இணைந்து தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.

ஹாலிவுட் நடிகர்கள் ராட் கேமரோன், மாரி விண்ட்சோர், சீசர் ரொமேரோ, இந்தி சினிமாவின் மெளனப்பட நாயகி சுலோசனா ஆகியோருடன் நம்மூர் எம்.என்.நம்பியாரும் நடித்திருந்தார்.

1952 – ம் ஆண்டு உருவான அந்த சயின்ஸ் பிக்சன் அட்வென்சர் படம் ‘த ஜங்கிள்’.

ஹாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான வில்லியம் பெர்க்-குடன் இணைந்து எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இந்தப் படம் தமிழில் ‘காடு’ என்ற பெயரில் வெளியானது.

ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை, இந்தியாவின் முதல் சயின்ஸ் பிக்சன் படம் என்கிறார்கள்.

– அலாவுதீன்

Comments (0)
Add Comment