பாடல் பதிவின்போது சந்திரபாபு செய்த சேட்டை!

ஜமுனா ராணி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணியை பேட்டி கண்டார் பாடகரான மனோ.

நடிகர் சந்திரபாபுவுடன் ஜமுனா ராணி இணைந்து பாடி பிரபலமான “குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே” என்ற பாடலைப் பற்றி கேட்டபோது, ஜமுனா ராணி சொன்ன பதில்.

“நடிகரான சந்திரபாபுவுடன் “குங்குமப்பூவே” என்று துவங்கும் பாடலைப் பதிவு செய்தபோது, அவர், செய்த சேட்டைகள் அதிகம்.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், பழம்பெரும் இசையமைப்பாளரான எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

அவர் ஒரு அப்புரானி. பாடல் பதிவின்போது, அங்கு இருப்பாரே தவிர அந்தப் பாடலுக்கான இசை மற்றதையெல்லாம் கவனித்துக் கொண்டவர் சந்திரபாபுதான்.

அந்தப் பாடலைப் பதிவு செய்தபோது, இரண்டு வரிகளை நடனமாடியபடியே பாடிவிட்டு, மைக்கிலிருந்து பின்னால் நகர்ந்து போய்விடுவார் சந்திரபாபு.

அடுத்த வரியை, நான் பாட வேண்டும்.

நான் பதிலுக்கு போக்கிரி ராஜா, போதுமே தாஜா என்ற வரிகளை நானும் இஷ்டத்துக்கு இழுத்துப் பாடியிருப்பேன்.

சந்திரபாபு மீதிருந்த கோபத்தின் காரணமாகத்தான் அப்படி இழுத்துப் பாடினேன்.

அதை கவனித்த இசையமைப்பாளர் “நீ இழுத்துப் பாடியதே நன்றாக இருக்கிறது” என்று சொல்லி அப்படியே வைத்துவிட்டார்.

நடிகர் சந்திரபாபு என்னை, “தங்கச்சி” என்றுதான் அழைப்பார்.

ஒரு பாடல் பாடுவதற்குள் பலவிதமான சேட்டைகள் பண்ணுவார், டான்ஸ் ஆடுவார். அவருடன் பாடிய என்னைப் போன்ற பாடகிகளுக்குத்தான் அவர் படுத்திய பாடு தெரியும்.

Comments (0)
Add Comment