“என்ன வாத்தியம் வாசிக்கத் தெரியும்?” ஜி.கே.வெங்கடேஷ் கேட்கிறார்
“ஆர்மோனியம் வாசிப்பேன்” – இளையராஜா
“ஆர்மோனியம் எல்லாம் வேலைக்காகாது, கிட்டாரை எடுத்துக்கிட்டு வா”
என்று பணிக்கிறார் ஜி.கே.வெங்கடேஷ்.
இளையராஜா தன் இசைக் குரு தன்ராஜ் மாஸ்டரிடம் வருகிறார்.
தன்ராஜ் மாஸ்டர் தன்னிடம் இருக்கும் கிட்டாரில் ஒன்றை எடுத்துப் போகுமாறு சொல்கிறார்.
ஜி.கே.வெங்கடேஷிடம், கிட்டார் வாத்திய விற்பன்னர் பிலிப்ஸ் இருக்கும் அந்த இசைக் கூடத்தில் இளையராஜாவையும் அமர்த்துகிறார்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்த Goa Dalli CID 999 படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் கொடுத்த மெட்டுகளை அப்படியே உள்வாங்கித் திரும்ப வாசித்து அவரைப் பிரமிப்பூட்டுகிறார்.
1968 ஆம் ஆண்டில் ஜி.கே.வெங்கடேஷின் பிரியத்துக்குரிய மாணவராக இளையராஜா உருவெடுக்கிறார்.
“என் மேல் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் வைத்த அந்த நம்பிக்கை பெரியது, 200 படங்கள் கடந்து தானும், எல்.வைத்தியநாதனும் அவருக்கான ஆர்கெஸ்ட்ரா பணிகளில் இணைந்திருந்தோம்”
– என்று இளையராஜா தன் 50 ஆண்டு கால இசைப் பயணத்தில் கூட நெகிழ்ந்தார்.
இங்கே தான் ஒரு தகுந்த குரு தன் ஆத்மார்த்தமான சீடனைக் கண்டுணர்வார் என்ற உண்மை போதிக்கப்படுகிறது.
திரையிசையின் நுணுக்கத்தைப் போதித்ததில் ஜி.கே.வெங்கடேஷின் பங்கு மிகப் பெரியது என்பார் கங்கை அமரன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சகபாடியாக விளங்கியவர் ஜி.கே.வெங்கடேஷ். அந்தப் பின்னணியை விரிவாக இன்னொரு பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.
“வந்த நாள் முதல்” பாடலை பாவமன்னிப்பு படத்துக்காக விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் பாடியவர்,
“உதயம் வருகின்றதே” பாடலை தன் சீடர் இளையராஜா இசையில் ஜானகியோடு இணைந்து பாடினார்.
“வா வெண்ணிலா” பாடல் எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா இசையில் அமைந்த போது, அந்தப் பாடல் காட்சியில் தோன்றினார்.
பின்னர் பாவலர் கிரியேஷன்ஸ் படைத்த ‘சிங்கார வேலன்’ படத்தில் தோன்றினார்.
இசை மேதை ஜி.கே.வெங்கடேஷின் பங்களிப்பு கன்னடத் திரையுலகில் அளப்பரியது.
தமிழிலும் அவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு.
இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் செப்டம்பர் 21 ஆம் தேதி தனது 99 வயதில் நினைவுகூரப்படுகிறார்.
அவரின் நூற்றாண்டுக்குள், தேர்ந்தெடுத்த 100 படங்களைத் தனித்தனியாக அலச வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது.
சங்கீதமே என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல்
ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே.. பேரின்பமே
இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் புகழ் வாழ்க
– கானா பிரபா