மணிரத்னம் படங்களுக்கு தொடக்கம் முதலே இசை அமைத்து வந்தவர் – ‘இசைஞானி’ இளையராஜா. பின்னாட்களில்தான், அவர் கே.பாலசந்தருடன் கை கோர்த்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டார், பாலசந்தர். மணியும் ஒப்புக்கொண்டார்.
‘ரோஜா’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டது. ஆனால், இந்தப் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை.
ஏன் ? ஒரு ‘பூர்வ ஜென்ம’ மோதல்,
பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள் ‘படத்துக்கு ராஜா இசையமைத்திருந்தார்.
ஆனால், பின்னணி (ரீ –ரிகார்டிங்) இசையமைக்க தாமதமானது. இதனால், வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து ’ரீ- ரிகார்டிங்’ செய்து படத்தை வெளியிட்டார், கே.பி.
இதனால் ஏற்பட்ட கோபத்தால், கே.பி.யோடு சேர்த்து, மணியையும், ரோஜாவையும் தவிர்த்தார், ராஜா. அந்த நேரத்தில் ‘ரோஜா’ படப்பிடிப்பு பணிகள் தொடங்கி இருந்தன.
படத்துக்கு இசையமைப்பாளரை தேடும் பணியும் சேர்ந்தே நடந்தது. ’ரோஜா’வுக்கு வாசம் கொடுக்க அப்போது கிடைத்தவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். ’ரோஜா’வுக்கு பாடல்களால் வாசம் அளித்ததோடு, பின்னணி இசையால் சுவாசமும் கொடுத்தார், ரஹ்மான்.
25 வயதில் இசையமைப்பாளர்..
காஷ்மீரில் தீவிரவாதிகளால் பொறியாளர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தை இழையாக கொண்டு நெய்யப்பட்ட ’ரோஜா’வுக்கு, தனது வசனங்களால் உயிர் கொடுத்திருந்தார், சுஜாதா.
காஷ்மீர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இமாச்சலபிரதேசத்தில் படமாக்கப்பட்டன. 1992-ம் ஆண்டு வெளியான இந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது
அந்த படத்துக்கு இசையமைத்தபோது ரஹ்மானுக்கு வயது 25. இப்போது போலவே அப்போதும் அவர் அடக்கமான சுபாவம்.
அந்த சமயத்தில் ரஹ்மான், தனது வீட்டு மாடியில் ஸ்டுடியோவையும் வைத்திருந்தார். அவரது ஆரம்பகால படங்களுக்கான இசை அங்குதான் உருவானது.
‘ரோஜா‘ ரிலீஸ் ஆனதும் அதிகாரப்பூர்வமான ஏ.ஆர்.ரஹ்மான் ’பிரஸ்மீட்’ அந்த வீட்டில்தான் நடைபெற்றது.
வீட்டின் நுழைவு வாயிலில் நிறைய பூச்செடிகளை வளர்த்தார், ரஹ்மான்.அந்த சின்னஞ்சிறிய பூந்தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கொஞ்சம் தாமதமாக வந்தார், ‘இந்திய டுடே’ தமிழ் பதிப்பின் நிருபர், கல்யாண்குமார்.
அவரை பார்த்ததும் ரஹ்மான் கண்களில் பிரகாசம்.
‘என்னை முதன் முதலில் பேட்டி எடுத்தவர் இவர்தான்’ என கல்யாண்குமாரை சுட்டிக்காட்டி, பரவசப்பட்டார், ரஹ்மான்.
பின்னாட்களில் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஷங்கர் என பெரிய பெரிய ஆட்கள் படங்களில் பணிபுரிந்து உச்சத்துக்குச் சென்றதால் அவரால் பேட்டிகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
நான் பகுதி நேரமாக பணிபுரிந்த வார இதழுக்காக ஏ.ஆர்.ரஹ்மானையும், கவிஞர் அப்துல் ரஹ்மானையும் சந்திக்க வைத்து அதனை அட்டைப்பட கட்டுரையாக வெளியிட ஏற்பாடு செய்தேன்.
அப்துல் ரஹ்மான் ஓ.கே.சொல்லி விட்டார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் பிசி. அவரது தாயார் கரிமா பேகத்திடம், விஷயத்தைச் சொன்னேன்.
”அவருக்கு நேரம் இல்லையேப்பா..”எ ன தயங்கினார்.
“அதிகம் போனா அரை மணி நேரம்மா” என்றதும், சரி சொல்லி மறு நாள் வரச்சொன்னார்.
அப்துல் ரஹ்மான், நான், புகைப்படக்காரர் ஆகியோர் காலை 10 மணி அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் ஆஜர்.
அப்போது அவர் சுஹாசினி டைரக்டு செய்த ’இந்திரா’ படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியில் இருந்தார்,
அதனை நிறுத்தி விட்டுவந்தார்.
இரு ரஹ்மான்களும் கொஞ்ச நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு, பத்திரிகைக்கான உரையாடலைத் தொடங்கினர்.
உரையாடல் அரை மணியை தாண்டி பல நிமிடங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
உரையாடல் நடந்த இடத்துக்கு சுஹாசினி அவ்வப்போது வந்து செல்வார். “எப்போது முடிக்க போகிறார்களோ?” என அவருக்குள் தவிப்பு.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடல் நீடித்தது. நிறைய விஷயங்கள் கிடைத்தன. உரையாடல் முடிந்த பின்னரே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ’இந்திரா’ நினைவுக்கு வந்திருக்க வேண்டும். படபடப்புடன் எங்களுக்கு விடை கொடுத்துவிட்டு அவசர அவசரமாக இசைக் கோர்ப்பு பணிக்குச் சென்றார்.
ஊர் உறங்கும் நேரத்தில் உழைப்பு ..
ஏ.ஆர்.ரஹ்மானை அடிக்கடி சந்திக்க முடியவில்லை என்றாலும், அவரது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஹ்மான் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்வேன்.
அந்த சமயத்தில் ரஹ்மான் இரவு நேரங்களில் பிசி. ஒரு பாடலின் இசைச் சேர்ப்பு வேலைகள் முழுவதும் முடிந்து விட்டாலும், அதற்குள், ஏதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தி புதிய சத்தங்களை புகுத்துவார்.
ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் ரம்ஜான் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் அமர்க்களப்படும், முக்கிய செய்தியாளர்கள் அழைக்கப்படுவர். அவரது புதிய படத்தின் கேசட்டை ரஹ்மான் வழங்குவார்.
பின்னர் நடக்கும் விருந்தில் சுடச்சுட பிரியாணியும் பரிமாறப்படும், பெரும்பாலும் அவரது வீட்டிலேயே பிரியாணி தயார் செய்யப்படும்.
அந்த பகுதி மக்களுக்கும் பார்சல் பிரியாணி உண்டு. இதனால் ரம்ஜான் நாளில் அவரது வீட்டின் முன்பு காலையிலேயே திரளான கூட்டம் குவிந்துவிடும்.
ஒரு காலத்தில் விநியோகஸ்தர்கள் ஹீரோ யார் என்றோ? இயக்குநர் யார் என்றோ? பார்ப்பதில்லை. இளையராஜா இருந்தால் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிவிடுவார்கள். ராஜாவின் இசை படத்தைக் காப்பாற்றி விடும்,
ரஹ்மான் தொடந்து வெற்றிப்படங்கள் கொடுத்ததால், அவரையும் ராஜா போல் நம்பினார்கள். கூடுதல் விலை கொடுத்து அவரது படங்களை வாங்கினார்கள்.
பெரிய இயக்குநர்கள் உருவாக்கத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை ரஹ்மான் கொடுத்த போதிலும் அவை தோல்வியையே தழுவின.
சில படங்கள்:
டூயட், புதிய மன்னர்கள், மிஸ்டர் ரோமியா, இருவர், ரட்சகன், தாஜ்மஹால், சங்கமம், அழகிய தமிழ்மகன்.
ஒரு படம் ஜெயிக்க ரஹ்மான் மட்டும் போதாது என்பதே இந்த படங்கள் சொல்லும் சேதி.
– பாப்பாங்குளம் பாரதி.
#ஏஆர்ரஹ்மான் #இளையராஜா #மணிரத்னம் #ரோஜா #கேபாலசந்தர் #தமிழ்சினிமா #இசைப்பயணம் #இசைப்புயல் #ARRahman #Ilaiyaraaja #ManiRatnam #RojaMovie #TamilCinema #MusicHistory #IndianMusic #RahmanJourney #FilmMusic #Sujatha