அண்மையில் பண்பலை வானொலி ஒலிபரப்புக்காக மூத்த இயக்குநரான எஸ்.பி.முத்துராமன் மனம் திறந்து பேசியிருந்தார்.
அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
என்னுடைய இளம் வயதிலேயே எனக்கும் ஏவி.எம்.நிறுவனத்திற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுவிட்டது.
ஆரம்பத்தில் ஏவி.எம் நிறுவனத்தில் எடிட்டிங் பிரிவில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்கடுத்து துணை இயக்குநராகப் பணியாற்றினேன்.
அதற்கடுத்து பல்வேறு படங்களின் துணை இயக்குநராகப் பணியாற்றத் துவங்கி அடுத்த நிலையில், நானே பல படங்களை அந்த நிறுவனத்திற்காக இயக்கியிருக்கிறேன்.
தொடர்ந்து படங்கள் இயக்கி வந்தாலும் படப்பிடிப்பு முடிய இரவு நேரமாகிவிடும். அதன்பிறகு எடிட்டிங் பிரிவுக்குப் போய் எடுத்த காட்சிகளை சரிபார்த்துவிட்டு, கீழேயே எதாவது விரிப்புகளை விரித்து அங்கேயே படுத்துவிடுவோம்.
அதிகாலை நேரத்தில் என்னுடைய வீட்டிற்கு போய் குளித்து, சாப்பிட்டுவிட்டு உடனே ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு வந்துவிடுவேன். இப்படி பல படங்களை இயக்கியிருக்கிறேன்.
பணி ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் கூட ஏ.வி மெய்யப்பன் அவர்கள் என்னைத் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்று சொன்னதால் ஸ்டூடியோவிலேயே பெரும்பாலான காலத்தைக் கழித்திருக்கிறேன்.
இதில் நான் இழந்தது எனது குடும்பத்தினரைத் தான். எனது குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது.
குடும்பத்துடன் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை.
ஒருநாள் ஸ்டூடியோவில் நான் எதோ ஒரு பட வேலையில் இருந்தபோது என்னை வீட்டில் இருந்து உடனே அழைப்பதாக செய்தி வந்தது. நான் அங்கு சென்றபோது வீட்டில் எனது மனைவி சடலத்தைத் தான் பார்க்க முடிந்தது.
போனதும் நான் கதறினேன். அழுதேன். நான் பலரை திரைப்படங்களுக்காக இயக்கி இருந்தாலும் என்னை இயக்கியவர் யார் என்று கேட்டால், என் மனைவியைத் தான் சொல்வேன்.
அவர் தான் எனது குடும்பத்தையும் கவனித்து, என்னையும் கவனித்துக் கொண்டவர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாகச் சொல்வார்கள். அதன்படியே என்னுடைய மொத்த வாழ்வுக்கும் ஆதரவான பின்னணியாக இருந்தவர் எனது மனைவிதான்.
அதை இப்போதும் அடிக்கடி நான் உணர்கிறேன்.
#எஸ்பிமுத்துராமன் #இயக்குநர்எஸ்பிமுத்துராமன் #தமிழ்திரையுலகம் #தமிழ்சினிமா #திரைப்படஇயக்குநர் #இயக்குநர்கள் #SPMuthuraman #DirectorSPMuthuraman #TamilCinema #TamilFilmDirector