ஆரோக்கியமான உடலுக்கு காய்கறிகளின் பங்கு இன்றியமையாதது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இயற்கையாக கிடைக்கக்கூடிய கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலமாக நமக்கு கிடைக்கிறது.
பழங்களைப் பொருத்தவரையில் பெரும்பாலானோர் தினமும் எடுத்துக்கொள்வது இல்லை என்பதே உண்மை.
ஆனால், காய்கறிகள் அப்படியில்லை. தினமும் ஏதாவது ஒரு நேரத்திலாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்வோம்.
இப்படி தவிர்க்கவே முடியாத காய்கறிகள் ஒவ்வொருவருக்கும் பிடித்த, பிடிக்காத காய்கறிகள் என்று ஒரு பட்டியல் உண்டு.
என்னதான் நமக்கு பிடித்த காய்கறி என்றாலும் எல்லா பருவ காலங்களுக்கும் எல்லா காய்கறிகளும் எடுத்துக்கொள்வது உடல்நலப் பிரச்சனையை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
மழைக்காலங்களில் அதிக ஈரப்பதத்தால் சில காய்கறிகளில் பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா மாசுபாடு ஆகியவை காணப்படும்.
அதன் காரணங்களால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள் உண்டு.
பொதுவாக மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் பல சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
மழை மகிழ்ச்சியை கொடுத்தாலும் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பல வைரஸ் தொற்றுக்கள் அழையா விருந்தாளியாக உடலில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
எனவே இந்த காலகட்டத்தில் குடிக்கும் தண்ணீர், எடுத்துக் கொள்ளும் உணவு முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மழைக்கால நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய சில காய்கறிகளை விரிவாகப் பார்க்கலாம்.
கீரைகள்: பொதுவாக எல்லாக் கீரைகளிலும் சத்துக்கள் நிறைந்தது. இவை இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுத்தவும், சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் செயல்பாட்டை மேம்படுத்தவும், எலும்பை பலப்படுத்தும் மற்றும் சரும நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
இவை ஆரோக்கியமாக கருதப்பட்டாலும் மழைக்காலத்தில் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
ஏனென்றால் அவை தரைக்கு அருகில் வளர்வதால் தண்ணீர் மற்றும் அதிக ஈரப்பதமான மண்ணில் இருந்து எளிதில் பாக்டீரியா மற்றும் புழுக்களின் இனப்பெருக்க இடமாக மாறுகிறது.
இதனால் உணவு ஒவ்வாமை, செரிமான பிரச்சனை, வாந்தி ஆகியவை ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆகவே மழைக் காலம் முடியும் வரை கீரைகளைத் தவிர்ப்பது நல்லது.
காலிஃப்ளவர்: குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று காலிஃப்ளவர்.
இதை எப்படி வேண்டுமானாலும் நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு சமைத்துக் கொள்ளலாம். பூ வடிவில் இருக்கும் இந்த காயில் பொதுவாக சில காய்களில் பூச்சி, புழு இருக்கும்.
ஆகவே தான் அதனை சுத்தம் செய்யும் போது சுடுதண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்கிறோம்.
மழைக்காலத்தில் இந்த பூச்சி மற்றும் பாக்டீரியா தொற்று அதிகமாக வளரக்கூடும். இவை வயிற்று வலி மற்றும் அமிலத்தை அதிகம் சுரந்து குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முட்டைக்கோஸ்: மழைக்காலங்களில் இதில் இருக்கும் இலை அடுக்குகளில் பாக்டீரியா தொற்று அதிக அளவு ஊடுருவ படுகிறது.
இதனால் பருவகாலத்தில் முட்டைகோஸ் எடுத்துக்கொள்ளும் போது வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
காளான்கள்: பொதுவாக காளான் அதிக ஈரப்பதம் கொண்ட ஒரு உணவு வகையாகும்.
நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை இந்த காளான் வகைகளில் உண்டு என்பதால், இவை ஈரப்பதத்தை எளிதில் சேகரித்து விடுவதால் விரைவாக கெட்டுவிடுகிறது.
இதில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது பூஞ்சைத் தொற்றுகள் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக உணவு அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே மழைக்காலங்களில் காளான் வாங்கியதும் உடனடியாக சமைக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்குவதால் பிடித்த காய்கறிகளை சிறிது காலம் தியாகம் செய்துவிட்டு உடலுக்கும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற காய்கறிகள் மழைக்காலங்களில் தேர்வு செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பத்திரமாக பாதுகாக்கும்.
– யாழினி சோமு