எழுத்தாளர்களின் சுயமரியாதையைக் காத்த என்.எஸ்.கே.!

‘மணமகள்’ படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி முடித்ததும், சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்தார்.
 
படத்திற்காக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நகர பிரமுகர்களுக்கும், தியாகராஜ நகர், ராஜகுமாரி திரையரங்கில் ‘மணமகள்’ படத்தைத் திரையிட்டார்.
 
இதைப் பார்த்தவர்களில், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
அடுத்த நாள் காலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பெரிய மாலையோடு வந்து, கலைவாணர் கழுத்தில் அணிவித்து, “சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் பெருமதிப்பிற்குரிய பெரிய மனிதர், யாருடைய வீட்டிற்காவது சென்று, மாலை அணிவிப்பது என் வழக்கம்.
 
நேற்று, ‘மணமகள்’ படத்தைப் பார்த்ததும், இதை உங்களுக்கு அணிவிப்பது என, முடிவு செய்துவிட்டேன்.
 
பிரச்சனைகளை அழகாக எடுத்துச் சொல்லி, அவைகளுக்குரிய தீர்வையும் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.
 
சொந்தத்தில் ஸ்டூடியோவையும், மற்ற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாரையும்விட, நீங்கள், ‘மணமகள்’ படத்தின் மூலம் மாபெரும் சாதனையை செய்து விட்டீர்கள்…” எனப் பாராட்டினார்.
 
அன்றே, எழுத்தாளர் சாண்டில்யனும் வந்தார். படத்தின் டைட்டிலில் கதை, முன்ஷி பரமு பிள்ளை எனும் எழுத்துக்களோடு, அவரது போட்டோவையும் காட்டி, ”எழுத்தாளர் உலகின் சுய மரியாதையை காப்பாற்றி விட்டீர்கள். அதற்காக, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
 
இரு எழுத்தாளர்கள் வந்து, தன்னை பாராட்டியதில், ரொம்பவும் மகிழ்ந்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
 
பட்டத்தி மைந்தன் எழுதிய, ‘கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்’ நுாலிலிருந்து.
Comments (0)
Add Comment