சமூகநீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு?

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் குறித்து வரலாற்றுத் தரவுகளுடன் ஆவணப்படுத்தியுளளார் ஆனந்த் டெல்டும்டே.

பேராசிரியரும் மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் என்ன எனக் கேள்வியெழுப்புகிறார்.

இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு பயன்படுகிறதா, ‘சமூக நீதி’ என்கிற போர்வையால் சாதிகளின் இருப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பதையும் இந்நூலில் இவர் ஆராய்கிறார்.

இந்தியாவில் சாதிகள் எப்படிப் புகுத்தப்பட்டுக் காலந்தோறும் ஆள்வோரால் நிலைநிறுத்தப்பட்டன என்பதைச் சான்றுகளோடு ஆனந்த் டெல்டும்டே நிறுவுகிறார்.

ஆதி இந்தியர்களோடு குடியேற்றச் சமூகங்களின் இணைவு நிகழ்ந்தபோது மிக மெதுவாகச் சாதியப் படிநிலைகள் முளைத்திருக்கக்கூடும்.

சாதிகள் உருவானதற்கான ஒற்றைத் தொடக்கப்புள்ளி பிராமணியம் இல்லை என்பதை மறுக்கும் ஆசிரியர், சாதிக்கு எதிரான கருத்துகள் கொண்ட பிற மதங்களைப் பிராமணியம் அழித்ததையும் அவற்றைத் தன்னுள் இழுத்துக்கொண்டதையும் விரிவாக விளக்குகிறார்.

இந்தியாவில் சாதி மாற்றத்தை மூன்று கட்டங்களாக வகைப்படுத்துகிறார் ஆசிரியர்.

பல்வேறு படிநிலைகளைக் கொண்டிருந்த மரபார்ந்த சாதி அமைப்புகள் முதன்மைக் கட்டம். இரண்டாம் கட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் வருகையை ஒட்டி நிகழ்ந்தது.

இந்தியச் சாதிய அடுக்குகள் கிழக்கிந்திய கம்பெனியை முதலில் திகைக்கச் செய்த போதும் பின்னாளில் அதன் அதிகாரப் பரவலுக்கு ஏதுவாகச் சாதியப் படிநிலைகளைப் பயன்படுத்திக்கொண்டது.

சாதி மாற்றத்தின் மூன்றாம் கட்டம் 1935இல் இந்திய அரசு சட்டத்தையொட்டி ஏற்பட்டது.

‘தீண்டப்படாத சாதிகள்’ அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டதன் மூலம் சாதி முதன்முறையாக அமைப்பாக மாற்றப்பட்டது.

அதற்குப் பிறகு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான அடிப்படை அலகாகச் சாதிகள் பார்க்கப்பட்டன.

சாதியை அழித்தொழிக்காமல் சமூக நீதியை நிலைநிறுத்துவதாகச் சொல்வது முரணானது என்கிறார் ஆனந்த் டெல்டும்டே.

சாதியை ஒழித்துவிட்டால் சாதிவாரிக் கணக்கெடுப்புக்குத் தேவை இருக்காது என்று சொல்லும் ஆனந்த் டெல்டும் டே, சீரான திட்டங்களால் இரண்டு தலைமுறைகளிலேயே சாதியை ஒழித்துவிடலாம்.

சமூகநலத் திட்டங்களை மட்டுமே வைத்துக்கொண்டு அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்கிற அடிப்படைத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்கிறார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது இந்தியச் சமூகத்தைப் பிரதிபலிக்காமல் சாதியப் படிநிலைகளை சட்டப்பூர்வமாக்குகிறது.

அனைவருக்கும் அனைத்தும் என்கிற நிலை வருகிறபோது அங்கே ‘இட ஒதுக்கீடு’ என்பதற்கான தேவையில்லாமல் போய்விடும்.

மாறாக ‘சமூக நீதி’ என்கிற ஒற்றைக் கருத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, சாதியப் படிநிலையை வலுவாக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புகளின் பின்னுள்ள அரசியலைக் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்கிறார் ஆனந்த் டெல்டும்டே.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்!
ஆனந்த் டெல்டும்டே
தமிழில் த.சித்தார்த்தன்
மணற்கேணி வெளியீடு
விலை ரூ. 350
தொடர்புக்கு – 6382794478

– பிருந்தா சீனிவாசன்

நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment