சங்க இலக்கிய முல்லைத்திணையும் பாரதிராஜாவின் மண்வாசனையும்!

கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை அவர்கள் எழுதிய செம்மீன் புதினத்தை வாசிக்கும் எவரும் சங்க இலக்கியத்தின் நெய்தல் நிலத்தின் உரிப்பொருளை அதன் கருப்பொருளை மறந்து விட முடியாது.

அதனால் தான் சில இலக்கிய விமர்சகர்கள் சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் புதினம் சங்க இலக்கிய நெய்தல் நிலத்தின் கருப்பொருளை தழுவியது என்று எழுதுகிறார்கள்.

இது ஏதோ தகழி சிவசங்கரன் பிள்ளைக்கு மட்டுமல்ல பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு கலைஞர்கள் உருவாக்கும் படைப்புகள் என பலவற்றிலும் சங்க கால தமிழ் முன்னோடிகளின் சிந்தனைகள் செயல்பாடுகள் இன்றைக்கும் மாறாமல் அப்படியே பொருந்து இருக்கின்றன என்றால் மிகை இல்லை.

மேலும், தங்களையும் அறியாமல் கதையைப் பாடுபொருளை அதன் பின்னணியை விளக்கும் பொழுது சங்க கால அறிஞர்கள் எவ்வாறு இந்த பின்புலத்திற்கு இதுதான் பாடுபொருள், இதுதான் உரிப்பொருள் என்று பிரித்தார்களோ அதே வகையில் இன்றைக்கும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சென்று சேருகிறார்கள் என்று சொன்னால் மிகை இல்லை.

இயற்கையாக அமைந்த மனித உள் உணர்வின் அல்லது இயற்கையான வாழ்வியலின் பகுப்புகளாக சங்க இலக்கிய வகுப்புகள் உள்ளன என்பதை

இவ்வாறு இருபதாம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் உருவாக்குகின்ற படைப்புகளையும் சங்க இலக்கிய நெறிகள் கோட்பாடுகளுக்குள் அடங்கி வருவது அந்த இலக்கியப் பாகுபாடுகளின் உயர்தரத்தை மெய்ப்பிக்கிறது.

இயக்குநர் பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படம் இந்த வகையில் முல்லைத் திணையின் உரிப்பொருளோடு இணைத்து பார்க்கத் தகுந்தது.

முல்லை – காத்திருத்தலும் காத்திருத்தல் நிமித்தமும் என்பது இதன் பாடுபொருளாக அமைகிறது. இதே வகையில் அமைந்த இன்னொரு திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தால் என்று சொல்லலாம்.

காத்திருத்தல் என்பது பெரும்பாலும் அக்காலத் திரைப்படங்களை மட்டுமல்ல எவ்வளவோ மாற்றங்கள் கால வளர்ச்சிகள் பெற்ற பிறகும் கூட இன்றைய பல திரைப்படங்களில் கூட காட்டப்படுகின்றன.

கதை நாயகி முத்துப்பேச்சி தான் மணம் முடிக்க என்னும் காதலன் வீரணன். இதற்கு பல்வேறு தடைகள் எழுகின்றன.

1. காளையை அடக்கி விட்டால் தனது மகளைத் திருமணம் செய்து தருகிறேன் என்று கூறும் தந்தை மூக்கையாவின் தவறான குடிபோதைப் பழக்கத்தினால் எடுக்கப்படும் முடிவால் காளையை பக்கத்து ஊர்க்காரர்கள் அடக்கி விட்டு கதை நாயகி திருமணம் செய்ய நினைப்பது என்பது முதல் தடை.

2. அந்தத் தடையை உடைக்க பல சூழல்களில் போராடும் நாயகன் ஊரை விட்டு சென்று விடுகின்ற நிலை இரண்டாவது தடை.

3. நாயகன் திரும்பி வந்தாலும் வேறு ஒரு பெண்ணுடன் வருவது என்பது மூன்றாவது தடை.

4. இத்தனை தடைகள் இருந்த காரணத்தினால் வேறு ஒரு பெண்ணோடு வந்த காரணத்தினால் ஊரெல்லாம் ஒன்று கூடி வீரணன் இந்தப் பெண்ணையும் முத்துப்பேச்சியையும் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று சொல்லும் பொழுது கதாநாயகி மறுப்பது என்பது நான்காவதாக ஏற்படுகின்ற தடை. கதை நாயகியே உருவாக்கிக் கொள்வது என்ற தடை.

இத்தனை தடைகள் உருவாகி இருப்பினும் கடைசி வரை தன் காதலனுக்காகவே காத்திருக்கின்ற மனநிலையில் மாற்றம் இல்லாமல் சில தடைகள் நாயகத்திற்கு உருவாகின்றன.

பின்னர் இந்தத் தடைகள் விலகி வீரணன் உடன் வந்த பெண் இறந்து போக அதாவது நாயகனின் தாயாரை காப்பாற்ற தனது உயிரை கொடுக்க கடைசியில் நாயகனைத் தலைவி சேர்வதாக அமைகிறது.

இதில் ராணுவத்தில் இருந்து வருகின்ற நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் வருவதற்கான காரணம், அந்தப் பெண்ணின் வாழ்நிலை, இவை எதுவும் படத்தில் விவரிக்கப்படவில்லை எல்லாம் மௌனமாய் உள்ளன.

அவள் கொல்லப்படுதல் என்பதெல்லாம் மிகவும் செயற்கைத்தனமானவை என்பதை ஒரு முறை பார்க்கும் பொழுதே நாம் உணரலாம்.

மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு சமூகத்தின் மேன்மைகள் பேசப்படுகின்ற அதே நேரத்தில் அதே சமூகத்தின் முரண்பாடான தன்மைகளும் காட்டப்படுகின்றன.

பண்டைய கால நிலவுடமைச் சமூக மதிப்பீடுகளை எல்லாம் நவீன கால ஜனநாயக சமூகத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணினாலும் கூட இன்னும் நம்மிடம் புதைந்து போய் இருக்கின்ற நிலவுடைமை சார்ந்த கருத்துக்கள் நம்மிடம் மதிப்பீடுகளாய் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளன என்பதையும் இப்படங்கள் காட்டுகின்றன.

அன்னக்கிளி திரைப்படம் இந்த வகையில் அமைந்தது தான். ஆனால், அன்னக்கிளி இறந்து போவதைப் போல் படைத்து கண்ணகிக்கு நிகரான கதாபாத்திரம் போல் ஆக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் முத்துப்பேச்சி கதாபாத்திரம் முல்லை நில பெண்கள் எப்படி காத்திருத்தல் என்ற பண்புக்கு ஏற்ப வார்க்கப்பட வேண்டும் என்று சொல்வார்களோ அவ்வாறு வார்க்கப்பட்டுள்ளார்.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தை முடிக்கும் பொழுது நாயகனும் நாயகியும் இணைந்த பிறகு இந்த மண்ணின் வாசனை இந்த மண்ணின் உயர்ந்த பண்பு பெண்களின் கற்பில் தான் புதைந்திருக்கிறது,

அவர்கள் எத்தனை வெயில், மழை என கால மாற்றங்கள் வந்தாலும் அதையெல்லாம் கடந்த இந்த மண்ணில் அந்த உயர்ந்த பண்புகளோடு வாழுகிறார்கள் என்பதைப் பறைசாற்றுகின்றார்.

ஆனால், இதே திரைப்படத்தில் நாயகியின் தந்தை ஒழுங்கற்றவராக காட்டப்படுகிறார். ஒழுங்கற்றவராக தான் இருப்பினும் தனது மகள் நல்ல வண்ணம் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்.

இதற்காகவே அவர் காளையைக் கொன்று தானும் இறந்து போகின்ற காட்சிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மண்வாசனை இன்று கூறுகின்ற அதே சூழலில் அது சாதியப் பெருமிதத்தையும் விவரிக்கிறது என்றால் மிகை இல்லை.

ஏனென்றால் இங்கு சாதியே சமூக கட்டமைப்பாக நிலை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அதனுள் இருந்து தான் அதன் மேன்மைகளைப் பேச வேண்டிய சூழல் படைப்பாளிகளுக்கு அமைகிறது.

அதே நேரத்தில் ஒட்டுமொத்த இந்த கட்டமைப்பை புனிதப்படுத்தும் விதமாக அமைந்து விடாமல் அதன் குறைபாடுகளையும் ஆங்காங்கு இயக்குநர் சுட்டிக்காட்டும் பொழுது அதுதான் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

அவ்வகையில் நாயகி தான் ஒரு முடிவை எடுத்து வேறொரு பெண்ணுடன் வந்த நாயகனை மணமுடிக்க முடியாது என்று கூறும் பொழுது,

ஒட்டுமொத்த கிராமமே அந்த குடும்பத்தோடு ஒட்டுமில்லை உறவும் இல்லை என்று பிரிந்து செல்வதாக காட்டப்படுவது, சுதந்திரமான ஒரு சிந்தனை உருவாகும் போது ஒரு குடும்பத்தையே தனித்து விட்டு செல்கின்ற சமூகக் கட்டமைப்பு இந்த சாதியை இறுக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றால் மிகை இல்லை.

தவறான வழியில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் செல்லுகின்ற கணவனை மனைவி பேசுகின்ற காட்சிகள் எல்லாம் மனிதனின் தவறுதல்களை சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துதல் பெண்ணுக்கு உரியது என்பதையும் ஆழமாக வலியுறுத்துகிறது.

ஒச்சாயி என்ற கதை நாயகனின் தாய் கதாபாத்திரம் வலிமையாக உறவுகளை பெருமிதங்களை வீரப்பண்பினை பேணிக் காக்கின்ற கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கதைப் பாத்திர வார்ப்புகளே பின்னாலில் மிக அதிகமான குழுவாக அல்லது இனக்குழுவாத பெருமிதங்களுக்கு வித்திடுகிறது வெளிப்படையாகச் சொன்னால் சாதிப் பெருமிதங்களுக்கும் வித்திடுகிறது எனலாம்.

சரியான வாழ்க்கை அமையாத பொழுது மிக எளிமையாக மனம் முடிவை ஏற்படுத்திக் கொண்டு பிரிதொரு திருமணத்தையும் முடித்துக் கொள்ளும் பண்பும் இந்த மண்ணில் மிக விரிவாக பரந்து விரிந்து உள்ளது என்றால் மிகை இல்லை.

அதே நேரத்தில் முல்லை நிலத்தின் உரிப்பொருளை இத்திரைப்படத்தில் ஆழமாக பாரதிராஜா வைக்கின்றார். இசை இத்தகு படங்களில் மாபெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன.

நாளை வருவான் தலைவன் என்று அறியும்போதே இரவெல்லாம் உறங்காமல் இருப்பதும் காலையில் எழுந்து வேக வேகமாக ஓடி வருவதும் என்ற அந்தக் காட்சிகள் எல்லாம் பல்வேறு சங்க இலக்கியங்களை நினைவூட்டுகின்றன.

அவசரத்தில் நாயகி தவறி விழுந்து விடுவதும் அதை ஒரு தீய சகுனமாக நாயகனின் தாயார் விவரித்துக் காட்டுவதும் சங்க இலக்கியங்களை அப்படியே காட்சிப்படுத்தியது போல் உள்ளன எனலாம்.

இந்தக் காத்திருப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தானா என்றால் இல்லை. ஆணுக்கும் உண்டு.

அந்த ஆணின் காத்திருப்பு தான் முதல் மரியாதை திரைப்படத்தின் இறுதிக் கட்டக்காட்சியாய் இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்டது.

பாரதிராஜாவின் முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தில் கூட சிறைக்குச் சென்ற சப்பாணி வரும் வரை மயில் காத்திருப்பதாக முடிக்கின்ற சூழல் தான்.

யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிடலாம் என்பது மனித பண்பின் உயர்நிலை அல்ல.

அது சராசரியான ஒரு நிலை. மேலான பண்புகள் தான் உயர்ந்த நிலையில் என்றைக்கும் போற்றப்படுகின்றன அவ்வாறான காத்திருப்பு.

தாஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளிலும் உண்டு. அதைத் தழுவி இயக்குநர் ஜனநாதன் எடுத்த இயற்கையிலும் உண்டு. இன்னும் பல படங்களிலும் உண்டு.

வேரோடு ஒரு செடியைப் பிடுங்கும் பொழுது அது மண்ணின் வாசனை, நிறம், குணம் எல்லாவற்றையும் உள்ளடக்கி வருவதைப் போலவே, பாரதிராஜா எடுத்துள்ள பல்வேறு படங்களிலும் இந்த சமூகத்தின் அத்தனை நிறை குறைகளும் புதைந்தே உள்ளன.

நவீன தமிழ்ச் சமூகம் இன்னும் செல்ல வேண்டிய தூரங்கள் இருக்கின்றன.

சில உயர்ந்த பண்புகள் மாண்புகள் நமது பண்டைய நில உடமையில் இருந்து மன்னர் காலத்தில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், சமகாலங்களில் விட்டுவிட வேண்டிய அம்சங்களை எல்லாம் அதாவது சாதி இன்னும் குலம் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை எல்லாம் சற்றே விலக்கி நவீன தமிழ்ச் சமூகமாய் வளர வேண்டிய தேவை உள்ளது.

அதற்கான பணிகளை பல்வேறு சமகால இயக்குநர்களும் செய்து வருகின்றனர்.

இவை யாவும் இன்னும் விரிவாக ஆய்ந்து எழுதுவதற்குரியவை.

– முனைவர் க. ஜெயபாலன்.

Comments (0)
Add Comment