தனியார்மயம், தாராளமயம், WTO, உலகமயமாக்கல் கொள்கைகளை இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்றுக் கொண்டதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
உலக முதலாளித்துவம் மனித உழைப்புகளை சுரண்டி கொழுத்து போய் உள்ளதோடு தற்போது உலக முதலாளித்துவத்துக்கு மூலதனமாக இருப்பது இயற்கை வளங்களும், கனிம வளங்களுமாகும்.
இதனை அபரிதமாக எடுப்பதால் உலகத்தின் வெப்பநிலை கடுமையாக பாதித்து “காலநிலை மாற்றம்” (climate change) ஏற்பட்டு இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.
மேற்கண்ட கொள்கைகளை அனைத்து முதலாளித்துவ கட்சிகள் ஏற்றுக்கொண்டு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்த போட்டிபோட்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இதை மக்களிடமிருந்து மறைக்க மதம், சாதி, இனவாதக் கருத்துக்களைப் பயன்படுத்தி பிரிவை ஏற்படுத்துகின்றனர்.
மக்கள் பாரம்பரியமாக காடுகளையும், மலைகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்து பயன்படுத்தி வந்தனர். இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது.
வளர்ச்சி-முன்னேற்றம் என்ற பெயரில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்திர பிரதேஷ், மத்திய பிரதேஷ், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கனிம வளங்களை கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காக அழிக்க அனுமதித்து வருகின்றனர்.
இதன் விளைவால் வட இந்திய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வேலை தேடி தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் குவிந்து வருகின்றனர்.
இதை நாம் உணர்வதை மறுத்து வரும் சூழ்நிலையில் இனவாதிகள் பிரச்சனையை திசை திருப்பி வருகின்றனர்.
இந்தியாவில் 45 ஆயிரம் கோடி மதிப்பிலான கனிமங்களின் மின் ஏலத்தை, புதுடில்லியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்தாண்டு நவம்பர் 29-ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருபது கனிம தொகுதிகள் ஏலத்திற்கு உள்ளன.
இதன் மொத்த மதிப்பு தோராயமாக நாற்பத்தி ஐந்தாயிரம் கோடியாகும். இந்தியாவில் லித்தியம் முதல்முறையாக ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் 5.9 மில்லியன் டன் என அதிக அளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவைகள்தான் இந்தியாவின் எதிர்கால ஆற்றல் மூலங்கள்.
இந்த மின் ஏலத்தில் இருபது கனிம தொகுதிகளில் பதினாறு களப்பு உரிமம் வழங்குவதற்கும் நான்கு சுரங்கம் குத்தகைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கனிம தொகுதிகள் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் அந்தந்த மாநிலங்களுக்கே செல்லும்” எனக் கூறினார்.
மேலும் இந்த ஏலத்தில் பங்கேற்கும் ஏலதாரர்கள் அவர்கள் அனுப்பும் கனிம மதிப்பின் அதிகபட்ச சதவீதத்தின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர் என தேர்வு முறையும் அவர் விளக்கி கூறினார்.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து டிசம்பர் 2 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள மின் ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அழுத்தமாக தெரிவித்த துரை வைகோ, கிராபைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிமங்களை எடுக்க மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு ஒன்றிய சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த ஏலத்தில் தமிழகத்தில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம், திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறுஞ்சாங்குளம் கிராம பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு மின் ஏலம் விடப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி, வடக்கு இலுப்பக்குடி, மண்ணடி பட்டி, மாருதி பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் கிராபைட் கனிமத்தை எடுக்க முதலில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்கம் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இதனால் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படும் இடத்தில் இருக்கும் மனிதர்களையும், சுற்றுசூழலையும் பெருமளவு பாதிக்கும்.
மேலும் சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழும் என எச்சரித்துள்ளார்.
மேலும் கிராபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடி குண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒளி மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு, சுற்றுசூழல் பிரச்சினைகள் எழும்.
அதோடு, பல்வேறு வகையான சுற்றுசூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.
ஆகவே விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம், குறுஞ்சாங்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டறியாமல் மாவட்ட நிர்வாகத்தையோ, தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அறிக்கையில் இறுதியாக தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணைய வழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
இல்லையென்றால் மறுமலர்ச்சி திமுக சார்பில் மக்களைத் திரட்டி போராடும் சூழல் உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்ட துரை.வைகோ, அதில், கரிசல் மண்ணில் கனிமக் கொள்ளை – போராடத் தூண்டாதே என குறிப்பிட்டு, மின் ஏலத்தை ரத்து செய், ரகசிய கனிமக் கொள்ளையை கைவிடு என வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் பகுதியில் கிராபைட் கனிமத்தை எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்வதற்காக சமீபத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீர் மற்றும் ஜார்கண்டில் லித்தியம் மற்றும் பொட்டாஷ் எடுப்பதற்கான அறிவிப்பையும் இதனோடு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
யாருமே கண்டுகொள்ளாத விஷயங்களில் தலையிட்டு மக்களுக்கு விடிவு காண்பதை தனது வழக்கமாக கொண்டிருக்கும் துறை வைகோ இந்த விவகாரத்தில் தனது வெற்றி கொடியை நாட்டியுள்ளார்.