மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, “…… ஆகிய நான்” என்று இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கமாக ஜனநாயகக் கட்டமைப்பில், இங்கு நடக்கும் ஒரு மரபு.
ஆனால், இத்தகைய மரபு எதுவும் ஆட்சி அதிகாரத்தில் மிக முக்கிய அழுத்தமான பங்கை வகிக்கும் அதிகாரிகளுக்கு இல்லை.
உண்மையில், மாநிலத்திலிருந்து மத்திய அரசு வரைக்கும் பல்வேறு படிநிலைகளில், ஆதிக்கம் செலுத்துவது அவர்கள்தான்.
என்னதான், மத்தியில் ஆட்சி மாறினாலும் ஆட்சிப் பொறுப்பில், அமர்கிறவர்களுக்கு அவர்கள் தற்காலிகமான விசுவாசமாய் இருக்கிறார்கள்.
அதேசமயம், என்ன ஆட்சி மாறினாலும் கார்பரேட் பெரு நிறுவனங்களுக்கு நிரந்தர விசுவாசமாக இருக்கிறார்கள்.
ஆனால், மக்களின் பெயரால் நடத்தப்படும் ஜனநாயக ஆட்சியில்தான் அதே மக்களுக்கு எதிரான அல்லது முறைகேடான செயல்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
தற்போது, நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருக்கும் வெகு அழுத்தமான குற்றச்சாட்டுகள்.
பொதுவெளியில், இப்போது அதுதான் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் மட்டும் மிக விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும் சில பகுதிகளில் ஆதாரமின்றி சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் இந்த முறைகேடுகளை எதிர்த்து ராகுல்காந்தி வெளிப்படையாக பேசியதற்காக அவருக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது ஆணையம்.
அதோடு நிற்காமல் உச்சநீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடந்தபோது, தேர்தல் ஆணையம், “65 லட்சம் பேர்களுக்கான விசயங்களை வெளியிட முடியாது” என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
ராகுல்காந்தி பேசினால், அதற்கு எதிராக நோட்டீஸ், உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டால், அதற்கு பதிலாக ஒரு மறுப்பு – என்றால், தேர்தல் ஆணையம் இங்கு யாருடைய நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது?
அண்மையில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் வருகை தந்தபோது, சோழர் ஆட்சிக் காலத்திலேயே மக்கள் வாக்களிக்கும் விதமாக குடவோலை முறை அப்போதே இருந்ததைக் குறிப்பிட்டுப் பெருமைபடப் பேசியிருக்கிறார்.
ராஜேந்திர சோழன் ஆட்சியுடன் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை ஒப்பிட்டுப் பேசினார்.
ஜனநாயகத்திற்கு மிகமிக அடிப்படையான தேர்தல் முறையிலேயே இம்மாதிரியான முறைகேடுகள் மக்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்ப வசதியை முகமூடியாகப் பயன்படுத்தி முறைகேடுகள் நடந்திருப்பதைப் பற்றி இந்திய அளவில் விவாதம் நடந்துகொண்டிருக்கையில்,
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்திருக்கிற நிலையில், இனியாவது தேர்தல் ஆணையம் மக்களின் நலனுக்காக தாங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த முடியுமா?
இதுவரை நடந்த தேர்தல் குளறுபடிகளுக்கு யார் பொறுப்பேற்பது?
உச்சநீதிமன்றத்திற்கே பதிலளிக்க முன்வராத ஆணையம் மக்கள் மன்றத்திலா வெளிப்படையான பதிலைச் சொல்லப் போகிறது?
தேர்தலுக்குப் பயன்படுத்தப்படுகிற நவீன தொழில்நுட்பக் கருவியான வாக்குப்பதிவு எந்திரம் மீது மட்டும் யாரும் குற்றம்சாட்டவில்லை.
அந்த வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்கிய மனிதர்கள் மீதும் அதிகாரம் செலுத்தியவர்கள் மீதும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
நாளை எங்கு தேர்தல் நடந்தாலும், தேர்தலுக்காக பல கட்சிகளும் தங்கள் பகுதிகளுக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது, “எங்களிடம் வாக்குக் கேட்டு வந்திருக்கிறீர்கள். நாங்கள் அளிக்கும் வாக்கு உங்களுக்குத்தான் போய்ச் சேருகிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்தி உத்தரவாதம் அளிக்க முடியுமா?” என்கிற கேள்வியை எளிய வாக்காளப் பெருமக்கள் கேட்டால், அதற்கு அரசியல் கட்சிகளின், தேர்தலை நடத்தும் அதிகாரிகளின் தரப்பிலான பதில் என்ன?
தேர்தல் நடத்துவதற்கு முன்பு மக்களிடம் ‘நடத்தை விதிகளை’ மதிக்கச் சொல்லித்தரும் தேர்தல் ஆணையத்திற்கே நடத்தை விதிகளை யார் சொல்லித் தருவது?
– யூகி